நானும் நக்கீரனும் பிறந்த வருடம் ஒன்றே... 1988. அதனால்தானோ என்னவோ என் வாழ்வின் எல்லா நிலையிலும் "நக்கீரனே' என்னை சமூக சிந்தனையுடன் வழிநடத்தும் தோழனாக இருந்துவருகிறது. பள்ளிக்காலத்தில் வகுப்பாசிரியர் கையில் நக்கீரனைப் பார்த்ததும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. வீரப்பன் செய்திகளையும், தேர்தல் சர்வே முடிவுகளையும் படிக்கப் படிக்க எனக்கு கதாநாயகனாகவே தெரிந்தது "நக்கீரன்' மட்டுமே. பல புத்தகங்களிலும் தேடிக் கிடைக்காத ஒரு நிகழ்வின் கட்டுரையை எனக்கு கொடுத்தது "நக்கீரன்' மட்டுமே. அது, எமர்ஜென்சி பற்றிய உண்மையான கட்டுரையாகும். அக்கட்டுரை 2015-ம்ஆண்டு ஜூனில் “"எமர்ஜென்சியும் கலைஞரின் சாதுர்யமும்'’என்ற தலைப்பில் வந்தது. அக்கட்டுரையை மேற்கோள் காட்டித்தான் தலைவர் கலைஞர் அவர்கள், "வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது'’என்ற தலைப்பில் வரலாற்றை பகிர்ந்தார். அந்த நக்கீரனைப் படிக்க படிக்க அவ்வளவு பெருமையாக இருந்தது.
என்னை வளர்த்தெடுத்ததில் என் பெற்றோருக்கு நிகராக அறிவை ஊட்டி என்னை தோழமையாக ஆக்கிக்கொண்ட நக்கீரனுக்கு ஆயிரம் நன்றிகள்.
2018, நவ. 14-16 இதழ் :
"தெறி' பக்கங்கள் நறுக்குத் தெறித்தாற்போல, செய்திக்கேற்ற சூப்பர் கமெண்ட்டுகளுடன் வருவது சபாஷ் போட வைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உயிரைப் பறிக்கும் பன்றி, டெங்கு, எலி என ஏதாவது ஒரு காய்ச்சல் வந்து சீரழிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தக்க நடவடிக்கை என நமது சுகாதாரத்துறை ஒப்பேற்றுகிறது. "மரணப் படுக்கையில் தமிழகம்! பலிகேட்கும் பன்றிக் காய்ச்சல்' செய்தி எல்லா தரப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
மாவலி பதில்களில் ஆன்மிக அரசியல் பற்றிய கேள்விக்கு, சொல்லப்பட்ட தமிழ் மண்ணுக்குரிய வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் ஆகியவை பற்றிய பதில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
வாசகர் கடிதங்கள்!
அய்யனுக்கு ரோப் கார்!
குமரியில் வள்ளுவர் சிலையை நிறுவியது தி.மு.க. என்பதால், நிகழ்கால அரசின் புத்தி பேதலிப்பதற்குள் அய்யன் சிலைக்கு ரோப்கார் விடும் அத்தியாவசியத் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
-மு.நந்தினி, அரியலூர்.
கேள்விக்கென்ன பதில்!
பா.ஜ.க.வோடு முரண்பட்டு சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பிவருகிறார் துணை சபா தம்பிதுரை. ஆனால் அவர் தத்தெடுத்த "பாலவிடுதி' கிராம மக்களோ, "எங்களுக்கான வளர்ச்சிப் பணிகளில் சபா அக்கறை காட்டுவதில்லை' என எதிர்கேள்வி எழுப்புகிறார்கள். இது எப்படி இருக்கு?
-வா.மாடசாமி, தருமபுரி.