அப்பா நக்கீரனின் தீவிர வாசகர் என்பதால், எனக்கும் 30 ஆண்டு உறவு நக்கீரன் இதழோடு தொடர்கிறது.
வீரப்பனின் நேர்காணலை ஒரு திரில்லர் சினிமாவைப்போல் அக்காலகட்டத்தில் வியப்போடு வாசித்திருக்கிறேன். அதற்காக ஆசிரியர் கோபால் அவர்கள் காட்டுக்கு சென்று வந்ததெல்லாம் தமிழ் இதழியல் வரலாற்றில் புது முயற்சி. ஆசிரியர் கோபால் அவர்கள் இதழாளர் என்பதையும் தாண்டி அப்பிரச்சனையில் ஆற்றிய களப்பணிகளால் அனைவரின் மனம் கவர்ந்தார். 'இங்கே ஒரு ஹிட்லர்' தொடரை வாசித்தது மட்டுமின்றி தொகுப்பாக வந்தபோது வாங்கி, அந்த நூலை இன்றும் என் நூலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளேன்.
எளிய மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உரக்கச் சொல்லி நான்காவது தூணாக நக்கீரன் இன்றும் செயல்படுவது என்பது சாதனைதான். தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, கைபேசி இதழியலை இக்கால இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. இச்சூழல் அச்சு ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவலாக இருக்கிறது. இத்தகைய சூழலிலும் நக்கீரன் இதழ் பரவலான வாசகர்களைக் கொண்டுள்ளது என்றால், ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்ட வேண்டும்.
ராங் கால் பகுதியை அப்போதும் ஆர்வத்தோடு படிப்பேன். இன்றும் அந்த ரசனை சற்றும் குறைந்துவிடாமல் தொடர்வது வியப்பு.
2018, அக்.10-12 இதழ்:
'ரஜினி வருவார்...' என்கிற முதல் கட்டுரையை படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. பிறகு நக்கீரன் மீது கோபம் வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. எத்தனை காலத்திற்கு ரஜினியைப் பற்றிய செய்திகளைத் தமிழர்கள் படிக்கவேண்டுமோ?
செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர ஐ.ஜி. நேர்காணலில்.... ஆந்திர-தமிழக அரசுகளின் முகத்திரையை நக்கீரன்தான் முதலில் அகற்றியுள்ளது என நினைக்கிறேன்.
'கீழடி -புதைக்கப்படும் உண்மைகள்' கட்டுரை படித்து ஆத்திரமடைந்தேன். தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு இன்னும் தொடர்வது வேதனையளிக்கிறது. நமக்கான அடையாளங்களை அழிப்பதில் வடவர்களுக்கு ஏன் இத்தனை காழ்ப்புணர்வு!?
வாசகர் கடிதங்கள்!
அரசியலும் பகையும்!
செம்மரக் கடத்தலில் தமிழர்களை மட்டும் கொல்வதன் உள்அரசியலையும், கடத்தலைத் தடுக்க தமிழக அரசு ஆர்வம் காட்டாததன் முன்பகையையும் நேர்படப் பேசியிருக்கிறார் ஐ.ஜி. காந்தாராவ்.
-எம்.சோலைராஜன், பெட்டவாய்த்தலை.
சிலையும் கலையும்!
ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரால் மண்ணில் புதைக்கப்பட்டது திருட்டுச் சிலைகள் மட்டும் அல்ல... தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளும்தான்.
-கே.அய்யப்பன், மயிலாடுதுறை.