உண்மை, துணிச்சல், உறுதி இம்மூன்றும் உள்ள ஒரே கண் நக்கீரன். நான், எனது கல்லூரிப் பருவத்திலிருந்தே நக்கீரன் படிப்பேன். அப்போதெல்லாம் நக்கீரன் புத்தகம் படிப்பதற்கு வீட்டில் அடிபுடிதான். யார் முதலில் நக்கீரன் படிப்பது என்கிற போட்டியில் நக்கீரனை, புத்தகத்துள் ஒளித்து வைத்து படித்த காலங்களும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு நக்கீரன் சுவாரஸ்யம். அதை இன்றளவும் குறையாமல் அதே அளவிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார் நக்கீரன் ஆசிரியர்.
என்னுடைய தோழிகளோ வேறு பொழுதுபோக்கு இதழ்களைப் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் நக்கீரன் புத்தகம் படித்ததால் எனக்குள் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய தாக்கம்தான் என்னை அரசியல்வாதியாக மாற்றியிருக்கிறது.
நக்கீரனில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி நக்கீரன் அட்டைப் படம், திண்ணைக் கச்சேரி, வலைவீச்சு, ராங்-கால், மாவலி பதில்கள்.
2018, அக். 03-05 இதழ்:
"15 ஆயிரம் குடும்பங்களை நிர்க்கதியாக்கும் தேயிலை தொழிற்சாலைகள் மூடுவிழா!' என்கிற செய்தி படித்தவுடன் என்னை கவலைகொள்ளச் செய்தது.
சபரிமலை கோயில் ஆகம விதிகளில் கோர்ட் தலையிடுவது... 99.9 சதவீத பெண்கள் ஐயப்பன் மீது நம்பிக்கைகொண்டவர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள்.
"ஜெ.வின் மரணம் கிளைமாக்ஸ் விசாரணை' என்கிற செய்தியில் உள்காரணங்கள் எங்களை போன்றவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தது. திண்ணைக் கச்சேரியில் தமிழிசைக்கு 144 போன்ற செய்திகள் நக்கீரனின் துணிச்சலுக்கு உதாரணம். நம்பி வந்த பெண்ணை கழுத்தறுத்த போலிச்சாமியார்களின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
வாசகர் கடிதங்கள்!
தொலைநோக்கில் முதிர்ச்சி!
"எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க.வின் நிலைப்புத்தன்மையை பிரதானப்படுத்திதான் கூத்தடிப்பார்கள்' என்பதை தொலைநோக்குப் பார்வையில் உணர்ந்தே விழாவைப் புறக்கணித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
-சி.அருணகிரிநாதன், திருமயம்.
புன்னகையின் உண்மை!
"கர்ஜனை'யில் நடிகர் சங்க கடனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் ராதாரவியிடம், "சுட்டுப்புடுவேன்' என்று புன்னகையோடு சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். அவரது இந்தப் புன்னகைப் பதிலில் தேசப் பொருளாதாரம் மீதான அக்கறை நிழலாடியது.
-எம்.சுந்தரமூர்த்தி, தஞ்சை.