நக்கீரனுக்கும் எனக்குமான பந்தம் 18 ஆண்டுகளாக தொடர்கிறது. எனக்குள் எழுத்து ஆர்வத்தை தூண்டியதே நக்கீரன்தான். 2001-ல் மாணவர் நிருபர் திட்டத்திற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற தேர்வில் நான் பங்கேற்றேன். காலையில் எழுத்துத் தேர்வும், பிற்பகலில் களப்பணியும் ஒதுக்கப்பட்டது. அதாவது, மதியத்திற்கு மேல் வெளியே சென்று சேகரித்துவிட்டு, அதை செய்தியாக எழுதித் தரவேண்டும். செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த தேர்வு நடைபெற்றது.
அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் மறைந்த காலகட்டம். அவரது அஸ்தியை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். நெல்லை பேட்டை பகுதியில் எடுத்துச் செல்லும்போது, கட்சி நிர்வாகிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையே மோதல். அதையே செய்தியாக்கினேன். எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றேன். ஆனால், நேர்முக தேர்விற்காக அனுப்பப்பட்ட கூரியர் தபால், காலதாமதமாக கிடைத்ததால், அந்த தேர்வில் பங்கேற்க இயலவில்லை.
இன்றைக்கும் பெருமைபடச் சொல்வேன். என் எழுத்தை முதலில் அங்கீகரித்ததே நக்கீரன் தான். அன்று முதல் இன்றுவரை நக்கீரனுக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது. நுனிப்புல் மேய்வதைப்போல், மேலோட்டமாக சொல்லாமல், ஒரு செய்தியின் ஆழம், அகலத்தை ஆராய்ந்து வாசகர்களுக்கு கொண்டுசேர்ப்பதில், நக்கீரன் கடைப்பிடிக்கும் பாங்கு இன்றும் இம்மியளவு குறையவில்லை.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், விருப்பு வெறுப்பு காட்டாமல் என்றைக்கும் நீதியின் பக்கம் நிற்கிறது என்பதை, ஒவ்வொரு இதழிலும் வரும் எழுத்துகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
2018, செப். 01-04 இதழ்:
"விதிகள் ரெடி.! கட்சி..?' என தலைப்பிலேயே கேள்விக்குறியிட்டு வராத ரஜினியின் கட்சி பற்றியும், அதிலிருந்த உட்கட்சி பிரச்சினையையும் தெள்ளத்தெளிவாகக் கோடிட்ட செய்திக் கட்டுரையும், "அழகிரி சரண்டரா? குடைச்சலா?' என மாறுபட்ட நிலைத்தன்மையை கண்முன் கொண்டுவந்த செய்திக்கட்டுரையும் பிரமாதம்.
வாசகர் கடிதங்கள்!
ஸ்டெர்லைட் திறப்புவிழா!
ஸ்டெர்லைட் ஆலையை மூட 13 உயிர்களை பலி கொடுத்தோம். இப்போது 40 பி.ஆர்.ஓ.க்கள் முன்னெடுப்பில் மீண்டும் திறப்புவிழா காண ஆயத்தமாவதாகச் சொல்றீங்க. ஆலோசகர் எம்.கே.நாராயணனின் வலைக்குள் அரசாங்கம் சிக்கிவிடக்கூடாது.
-லயன்ஸ் எஸ்.பவித்ரா, வேலூர்.
செம சிரிப்பு!
பல்லுப் போனவர்களும் சொல்லிச் சிரிக்கும் சொல் விளையாட்டான வலைவீச்சில், "கர்நாடகா தண்ணீர்' இன்ஸ்டன்ட் கமெண்ட் செம.
-கரு.ஆறுமுகம், திருத்தணி.