வழக்கறிஞராக இருப்பதால் எனக்கு நக்கீரன் எளிதாக இருந்தது. வழக்கறிஞர்களுக்கும் நக்கீரனுக்குமான இணக்கம் நெருக்கமானதாக இருக்கும். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மக்கள் மன்றத்திலே எடுத்து அதை வெளிக்கொண்டு வருவதே நக்கீரனின் நெறி.
நக்கீரன் அட்டை டூ அட்டை அரசியல் செய்திகளால் அமர்க்களப்படுகிறது. "இறுதிச் சுற்று' செய்தியில் கூட இறுதி நிமிடங்களில் செய்திகளை துல்லியமாக, துரிதமாக கொடுப்பது நன்று.
2018, ஆக.29-31 இதழ்:
"போராடுவியா? தலைவர்களை ஒடுக்கும் அரசு!' போராடுபவர்களை ஒழிப்பதன் மூலம் போராட்டங்கள் ஓய்வதில்லை என்கிற செய்தி நிதர்சனம்.
48 பக்கங்களில் திண்ணைக்கச்சேரி, டூரிங் டாக்கீஸ், ராங்கால் சங்கர்லால், வலைவீச்சு என அனைத்துப் பகுதிகளும் முதன்மைச் செய்திகள் வரிசையில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் திண்ணைக் கச்சேரி நான் விரும்பிப் படிக்கும் பகுதி, அரசியலில் பெண்களுக்கு என்று தனி பகுதி ஒதுக்கிய பெருமை நக்கீரனையே சாரும்.
தி.மு.க.வுடன் எடப்பாடி கூட்டணி, வெளுத்த தினகரன், பந்தாடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எடப்பாடிக்கு பணிந்த கிரிஜா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதல், அப்பல்லோவில் நடந்தது என்ன? அதிர வைத்த எய்ம்ஸ் மருத்துவர்கள் என செய்திகள் அனைத்தும் நக்கீரனின் தரமான செய்தியை, நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது. இவை நிகழ்கால அரசியலை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.
இவ்வளவு விறுவிறு அரசியல் செய்திகளுக்கு நடுவே சிறு இடம் கிடைத்தாலும், பக்கத்தின் மேல்புறமும் கீழ்புறமும், வள்ளுவன் வாக்கியங்களும், சின்னச் சின்ன செய்திகளும் வாசிப்போரை நேசிக்க வைக்கிறது.
வாசகர் கடிதங்கள்!
ஓட்டுக்கு நோட்டு!
புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் ஆன்லைன் தேர்தலில் முதல்வரின் மகன் களம் இறங்குவதை அவரது ஆதரவாளர்களே விரும்பவில்லை எனும்போதே வெற்றியின் சதவிகிதம் குறைந்துவிட்டது. பிறகு ஏன் மகனின் நண்பனை நிறுத்தி ரிஸ்க் எடுக்கவேண்டும். தலைவர் நமச்சிவாயம் தரப்பை ஜெயிக்க வைத்ததுடன் ஓட்டுக்கு கொடுத்த நோட்டுக்கும் பலன் இல்லாமல் போய்விட்டது.
-சி.ஆர். நட்ராஜ், மேட்டுப்பாளையம்.
போராடினால் குற்றவாளி!
மக்களின் எண்ணங்களை முழங்குகிற தலைவர்களான "த.வா.க.' தலைவர் வேல்முருகன், "நாம் தமிழர்' சீமான் உட்பட யாராக இருந்தாலும் மத்திய-மாநில அரசுகளின் பார்வையில் குற்றவாளிகளே. "மே-17 இயக்கம்' திருமுருகன் காந்தி "உபா' சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும்கூட இதன் உள்ளடக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
-அ.மணிமாறன், காங்கேயம்.