parvai

க்கீரன் எனக்குப் பிடித்தமான இதழ். இதனிலும் ஆசிரியர் நக்கீரன்கோபால் அண்ணனை ரொம்ப ரொம்பவே பிடிக்கும். புகைப்படங்களையும் புகைப்படக் கலைஞர்களையும் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்களையும் அதிகம் நேசிப்பவர் அவர்.

ஒவ்வொருமுறை வாய்ப்புக் கிடைக்கும்போதும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் புகைப்படக் கலைஞனான எனக்கு மேலோங்கும். பணிவோடு நெருங்கி மலரும் முகத்தோடு விருப்பத்தைச் சொல்வேன். ""அதற்கென்ன... வாங்க தம்பி'' குதூகலத்தோடு தோள்மீது கைபோட்டு உருத்தோடு புன்னகைப்பார்.

அன்பிற்கினிய டான்ஸ்மாஸ்டர் சாண்டி மாஸ்டரின் திருமண விழாவில் பரபரப்போடு வேலை செய்துகொண்டிருந்தோம். ஆசிரியர் நக்கீரன்கோபாலண்ணன், சாண்டி மாஸ்டரை வாழ்த்த வந்திருந்தார். வாழ்த்தி இறங்கியதும், ""அண்ணே... என்று புகைப்படக் குழுவினர் நெருங்கினோம். புகைப்பட முகம். வேண்டுமட்டும் எடுத்துக்கொண்டோம். நக்கீரன்கோபாலண்ணன் இருக்கும் இடம் தானாகவே கலகலப்பாகிவிடும். அவரைப் போலவே நக்கீரன் இதழும், உழைக்கும் மக்களுக்கே உரிய, சார்புடைய நலம்பேணும் கலகலப்பான இதழ். ஆகவேதான் நக்கீரன் இதழும் உழைக்கும் மக்களுக்கே உரித்தாகிவிட்டது.

Advertisment

2018, ஆக.8-10 இதழ்:

தனது உயிரினும் மேலான உடன்பிறப்புகளிடமிருந்து விடைபெற்று கண்ணாடிப் பேழைக்குள் இந்தியத் திருநாட்டின் கொடியைப் போர்த்தியபடி மீளாநித்திரையில் ஓய்வுகொண்ட கலைஞரின் நிறைவுப் படம் அட்டையில்... கண்கள் குளமாகின்றன.

25 பக்கங்களை முத்தமிழறிஞருக்கு ஒதுக்கி, ஒவ்வொரு பக்கத்தையும் உணர்ச்சிப் பெருக்கோடும், அழகியல் நயத்தோடும் மரியாதைச் சிறப்போடும் வரலாறாக்கியிருக்கும் நேர்த்தி, நெஞ்சை நிறைத்தது.

Advertisment

அரை நூற்றாண்டு அச்சாணிக் கட்டுரை, கலைஞரின் ஆளுமையை படம்பிடித்திருக்கிறது. கலைஞர் பெருமகனாரின் மீது நக்கீரன் இதழும் நக்கீரன் குடும்பமும் கொண்டிருக்கும் பேரன்பு, இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளி வீசுகிறது.

___________________

வாசகர் கடிதங்கள்!

ஆத்ம பந்தம்!

கலைஞரின் நினைவுகள் குறித்த நக்கீரன் ஆசிரியரின் தலையங்கத்தை வாசிக்கும்போதே அங்கம் சிலிர்க்கிறது. நக்கீரன், ஜெ. ஆட்சியில் பட்ட துயரங்கள், முன்னெடுத்த சட்டப் போராட்டங்களில் கலைஞருக்கும் ஆசிரியருக்குமான அரசியல் நிகழ்வுகள் என்பது, மக்கள் பணி கடந்து இருவருக்கும் இடையே ஓர் ஆத்மபந்தம் சுழல்வதை உணர முடிகிறது.

-கோ.அன்பரசன், விருத்தாசலம்.

புதிருக்கான தேடல்!

அரசின் சிக்கல்களில் தன்னை யாரும் முடிந்துவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார் அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா. அவர் மறுகூட்டல், வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிடுதல், அதன் விலை நிர்ணயம் என ஊழலுக்கான இலக்கை நோக்கிப் பாய்ந்த உமாவுக்கு எதிராக காரியம் சாதித்துள்ளார். இப்படி இன்னும் பல புதிர்களை அவிழ்ப்பதற்கான தேடல்களாக இருக்கின்றது நக்கீரன் செய்தி.

-சி.ஞானவேல், மதுரை.