நக்கீரன் பத்திரிகை மீதும், ஆசிரியர் மீதும் அரசியல் தாக்குதல், விமர்சனம், வீண்பழி போன்ற புயல்கள்..! அவை இமயத்தின் மீது வீசியிருந்தால் அந்த இமயம்கூட எங்கோ போயிருக்கும். ஆனால், நக்கீரன் எள்ளளவும் நகரவில்லை. என்ன காரணம்? நம்பிக்கை, உழைப்பு, நீதி நேர்மை அஞ்சாமை அனைத்தையும் உள்ளடக்கிய உண்மைச் செய்திகளே. முழுகாரணம்...!!!
அன்று முதல் இன்றுவரை அரசியல், சமூக நீதி, சமூகப் பிரச்சினை, தமிழருக்கு எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகள், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும்போது முதல்குரல் எழுத்து வடிவில் வருவது நக்கீரன் பத்திரிகையில்தான். அன்று நுழைவுத் தேர்வில் தொடங்கி இன்று நீட் வரை ஏழை மாணவர்களுக்காகப் போராடும் வார இதழ். தமிழர்களுக்கு போராட்ட குணத்தை ஊட்டும் பத்திரிகையாக -தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவே இருக்கிறது. 1993 முதலே தொடர்ந்து நக்கீரனைப் படிக்கத் தூண்டியது... இன்றுவரை தொடர்கிறது.
மக்களின் எண்ண ஓட்டத்தை எழுத்து வடிவில் எழுதி ஆட்சியாளர்களுக்கு பல சமயங்களில் சவுக்கு அடி கொடுத்து உண்மையை உரக்கச் சொல்லி பலநேரங்களில் பழிகளைச் சுமந்தாலும் வாழ்வது தமிழனாக இருக்கவேண்டும் என்னும் நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் களப்பணி செய்து வருகிறது.
2018, ஜூலை 7-10 இதழ்: "20 தொகுதி டார்கெட்.! வியூகத்தை கெடுத்த சிறுநீர்..!' என்ற தலைப்பில் பா.ஜ.க.வின் எண்ணத்தையும் தமிழகத்தில் கால் ஊன்ற தலித் வாக்கு வங்கியை குறிவைத்து காய் நகர்த்தினாலும் நெசவாளி குரங்கு வளர்க்கலாமா? பா.ஜ.க. டார்கெட்டை பிச்சிப்போட பா.ஜ.க.காரர்களே போதும்... என்ற சாட்டையடி அருமை. ஈரோட்டு பூகம்பம் பெரியார் மண்ணில் தாமரை மலராது என்பதை சுட்டிக்காட்டியது நக்கீரனின் வீரத்தின் பதிவு.
-----------------------------------------
வாசகர் கடிதங்கள்!
அனுதாபம்!
வயதானவர்களின் சொத்துகளை குறிவைக்கும் தாதாக்கள் கட்டுரை அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. இதில் டாக்டர் மாலதிக்கு பிரதமர் அலுவலக நண்பர்கள் உதவி செய்ததால் பிரச்சினை சுமுகமாக முடிந்திருக்கிறது. ஆனால், இதுவே சாமானியர்களுக்கு ஏற்பட்டிருந்தால் காவல்துறை எளிதில் ஆக்ஷன் எடுத்திருக்காது என்பது வெள்ளிடைமலை.
-ஆர்.மணிமேகலை, ஒரத்தநாடு.
ஓ.கே.
தமிழகம் ஓர் ஊழல் மாநிலம் என்கிற அமித்ஷாவின் கருத்து ஓ.கே. ஆனால் இதற்கு அமைச்சர் ஜெயக்குமாரும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் விடுத்திருந்த எதிரெதிர் பதில்களை வலைவீச்சுக்கே உரித்தான கமெண்ட்டாக்கிவிட்டனர் வாசகப் பெருமக்கள்.
-வி.பி.ராஜன், ஊத்துக்கோட்டை.