Skip to main content

பார்வை! -வழக்கறிஞர் த.ராதாகிருஷ்ணன்

டிகர் திலகம் தொடங்கி வைத்த நக்கீரன்! வழக்கறிஞர் த.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட (கிழக்கு) காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காமராஜர் நற்பணிமன்றத் தலைவர்.

parvai

வாள்கள் தோற்றுப்போன வரலாறுகள் உண்டு. ஆனால் பேனாமுனைகள் தோற்றுப்போன வரலாறு கிடையாது என்பது அறிஞர் கூற்று. அந்த அடிப்படையில் நக்கீரனும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராய் விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், நக்கீரன் இதழில் கட்டுரைத் தொடர் எழுதி வெளியீட்டை தொடங்கி வைத்தார். அப்போது முதல் இப்போதுவரை நக்கீரன் வாசித்துக்கொண்டு வருகிறேன். நக்கீரனின் அட்டைப்படம் எப்போதுமே புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும். அட்டைப் படத்தின் வடிவமைப்பு ஒரு கருத்துப் படம்போல், சில தகவல்களை நமக்குப் புரிய வைத்துவிடும். புத்தகம் முழுவதும் அடர்த்தி தன்மையில்லாமல் பக்கத்துக்கு பக்கம் தகுந்த படங்களுடன் செய்திகளை எளிதில் படிக்கும் வண்ணம் அச்சாக்கப்படுவதால் பேருந்து பயணங்களிலும் ஒரு மணி நேரத்தில் புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட முடிகிறது.

நக்கீரன் ஆசிரியர் நெஞ்சுரம் கொண்ட மனிதர். வீரப்பன் பரப்பரப்பு அதிகரித்த நேரத்தில் துணிச்சலாகக் காட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்த நக்கீரன் ஆசிரியர், தமிழக பத்திரிகை வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது துணிச்சல்மிகு பத்திரிகையாளராக ஒரு ராஜதந்திரிபோல் தன் கடமையைச் செய்து, ராஜ்குமார் அவர்களை மீட்டதற்கு நக்கீரன் ஆசிரியர் பெரும்பங்கு வகித்தார். இந்தியப் பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு கொள்கை கொண்டுவந்த உயர்தர பண நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது ஏ.டி.எம். சென்டர்களிலும், வங்கிகளிலும் மக்கள் பட்ட துயரத்தினை வெளிக் கொண்டுவந்து காட்டியது.

2018 ஜூலை 11-13 இதழ்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சனையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, இரத்தக்கறை படிந்த ஒரு வரலாறு. இன்னும் தூத்துக்குடியில் இரத்தவாடை குறையவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதிகார மீறல்கள் ஜூலை 11-13 நக்கீரன் இதழ் "சுட்டுக்கொன்ற காக்கிகள் -பகீர் வாக்குமூலம்' என்ற தலைப்பில் பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

"காதல் சகமுசா சர்வீஸ்' என்ற தொடர் கட்டுரையில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை படம்பிடித்து காட்டியுள்ளது. எங்கள் மாவட்டத்தில் இப்படியும் நடைபெறுகிறதா என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

"லோக் ஆயுக்தாவா? ஜோக் ஆயுக்தாவா?' என்ற தலைப்பு மட்டுமே கட்டுரையின் உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் புரிய வைத்துவிடுகிறது. "உதிர்ந்து கிடக்கும் விவசாயிகள் ஒற்றுமை'’என்ற கட்டுரை தமிழக விவசாயிகளின் ஒற்றுமையின்மையையும், ஏன் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தாக்கத்தையும் நமக்கு எடுத்து இயம்புகிறது.

மாவலி பதில்கள், திண்ணைக் கச்சேரி, கூத்து, வலைவீச்சு போன்ற பகுதிகள் ரசனையைத் தூண்டுகிறது.

____________________
வாசகர் கடிதங்கள்!

முதலைகளுக்குச் சாமரம்!

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த பிறகுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல. அதுவரை மோடி-எடப்பாடி அரசுகளின் செயல்பாடுகள் அதானி போன்ற பண முதலைகளுக்கு சாமரம் வீசும்.

-எ.எஸ். கோவிந்தராஜன், கோடம்பாக்கம், சென்னை.

ஊழல் நாற்றம்!

இறந்தவர்களின் பெயரில் கழிவறை ஊழல், நாற்றம் பிடித்த நிர்வாகத்தைக் காட்டுகிறது. இளம் பத்திரிகையாளரின் ஆதாரப்பூர்வ செய்தி அரசின் முகமூடியைக் கிழிக்கிறது.

-ம.தூயவன், கடலூர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்