சட்ட அறிவின் நுணுக்கங்களை கற்கின்ற காலந்தொட்டே நக்கீரனின் கருத்தாழங்களை கண்டு வியப்படைந்துள்ளேன். அறிந்திடாத எண்ண ஓட்டங்கள், கண்டிராத புகைப்படங்கள், சமரசமற்ற செய்திகள் என தீப்பிழம்பாய் நான் கண்ட இதழ் "நக்கீரன்' மட்டுமே. ஒற்றை இதழில் உலகின் அனைத்து அலசல்களையும் ஆய்வறிய செய்வதில் தனித்துவமான திறமை வெளிப்படுகிறது.
இருள்சூழ் மேகங்களை கூறிட்டு ஒளி வீசும் பகலவனை போல் மக்களுக்கான நல்தீர்வு செய்திகளை பல தடைகளையும், பகைமைகளையும் கடந்து வெளியிடும் தனி துணிவுகள் தொடர வேண்டும் என்பது எல்லோருக்குமான எண்ணம்.
மண் தொட்டு பொன் விளைவிக்கும் ஏர் உழவர்கள் முதல் குளிரூட்டு அலுவலக அபிமானிகள் வரை தவறாது தவழ்கிற "நக்கீரன்' இதழ்கள் காலங்கடந்த தலைமுறைகளின் தொடக்கம்.
2020, மார்ச் 18-20 இதழ்:
"இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை! களமிறங்கிய ரசிகர்கள்...' செய்தியும்,
"கலைஞர் போட்ட உத்தரவு ரத்தா? கலங்கும் முதியோர்கள்'! செய்தியும் உண்மையை உரக்க எடுத்தியம்புகின்றன.
_______________
வாசகர் கடிதங்கள்!
மானுட அறிவு!
திருக்குறளுக்கு மணக்குடவனார் தொடங்கி எத்தனையோ ஆளுமைகள் உரை எழுதிவிட்டார்கள். இப்போது "திரையுலக மார்க்கண்டேயர்' சிவகுமாருக்கும் அதில் ஈடுபட ஆர்வம் பிறந்திருக்கிறது. அவரது எளிய தமிழில் வள்ளுவரின் மானுட அறிவு இன்னும் விசாலமாகட்டும்.
-மு.சடையப்பன், விழுப்புரம்.
எடப்பாடிக்கு களங்கம்!
கஞ்சா, லாட்டரி, சில்லிங், விபச்சாரம் ஆகியவற்றைத் தூர்வாருவதற்கு கடமைப்பட்டிருக்கிறது காவல்துறை. ஆனால் கோவை காவல்துறையோ, பணத்துக்காக புறங்கையால் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சட்டம்-ஒழுங்கை வைத்திருக்கும் எடப்பாடியாருக்கு களங்கம் கற்பித்துவிட்டது.
-எஸ்.மணி, வாழப்பாடி.
சமூக யதார்த்தம்!
"கடவுளுக்கான கரசேவகர்கள் நாங்கள் எனச் சொல்கிறவர்களிடமிருந்து தள்ளியே இருங்கள்' என்கிற நடிகர் விஜய்சேதுபதியின் "வலை வீச்சு' கமெண்ட் சமூக யதார்த்தம்.
-மு.அருணாசலம், வேலூர்.