நான் நக்கீரனின் வாசகன்; ரஜினியின் ரசிகன் என்பதில் கௌரவமும் பெருமையும் கொண்டவன். நக்கீரனைப் போலவே நக்கீரனிலிருந்து வெளிவந்த "ரஜினி ரசிகன்' இதழும் எனக்கு மிகுந்த நெருக்கமாக இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை, வாழ்வை, கருத்துகளை, உழைப்பை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தது நக்கீரன்தான்.
இவைமட்டுமல்ல... இந்தியாவை, தமிழகத்தை, தமிழக அரசியலை, தமிழ்மொழியின் பண்பாட்டின் அருமைகளை என்னைப் போன்றோர் புரிந்துகொள்ள வைத்தது நக்கீரனே!
அரசியல், சினிமா, மொழி மற்றும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, அவை குறித்து சிந்தித்து முடிவெடுக்கும்படி தூண்டும் செய்திகளையும் கட்டுரைகளையும் தந்துகொண்டிருப்பதும் நக்கீரனே!
2018, ஜூன் 20-22 இதழ்:
வழக்கம்போல கடைசிப் பக்கங்களைப் புரட்டி வலைவீச்சைத்தான் முதலில் படிப்பேன். இந்த வலைவீச்சுப் பகுதி... அரசியலை, அமைச்சர்களை, திட்டங்களை உதறிப்போட்டு அலசி ஆராய வைக்கிறது. அதோடு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும் வைக்கிறது.
கரூர் பைபாஸ்-தில்லை நகர் வழியே புறப்பட்ட நைட் ரவுண்ட்ஸ் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வரை நீண்டு, தலைமைத் தபால் நிலைய டீக்கடையில் விடிந்தது. நானே பயணித்தது போலிருந்த மிட்நைட் மசாலா.
டில்லி அரசியல், தமிழக அரசியல், மாவட்டங்களின் நிலை என்று மட்டுமே நின்றுவிடுவதில்லை நக்கீரன். சென்னை -ராயபுரத்தில் சலவைத் தொழிலாளர்களுக்காக கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாத "பெனிபிட் பிரச்சினை'க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறீர்களே... அதுதான் எங்கள் நக்கீரன்.
வாசகர் கடிதங்கள்!
திருப்பணி!
ஆவின் நிர்வாகப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் தயிரென உறைந்து கிடக்கிறது. பணம் இல்லாமல் வேலை இல்லை என்பதில் வெண்ணெய்யாகச் செயல்படுகிற அதிகாரிகளிடம் மொத்த ஒன்றியங்களுக்குமான கடைந்தெடுத்த விசாரணையை எங்ஙனம் எதிர்பார்க்க முடியும். மக்கள் நலத்துக்கான அந்த திருப்பணியையும் நக்கீரனே ஆய்ந்து, அரசின் செவுளைப் பதம் பார்க்க வேண்டும்.
-ஆர்.தனவேல், வேலூர்.
தொடரும் கொடூரம்!
பசுமைவழிச் சாலையை எதிர்ப்போருக்கு சிறை, ஸ்டெர்லைட் அபாயத்துக்கு எதிராகப் போராடுவோரின் கை-கால் உடைப்பு என அரச பயங்கரவாதம் இன்னும் எத்தனை காலத்துக்கு கொடூரமாகத் தொடருமோ!
-மா.அமராவதி, மேட்டூர்.