சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடிய பத்திரிகைகளைப்போல நக்கீரன், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகநீதி, சமத்துவத்திற்காக நடத்தப்படும் இதழ். அதுமட்டுமா... புலனாய்வு மூலம் அரசியல் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முகத்திரையைக் கிழித்து ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தது நக்கீரன். நக்கீரனும் அதன் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களும் ஊடக வரலாற்றில் ஆழமான தடம்பதிக்கப் பட்டபாடுகள், கொடுமைகள் ஏராளம்... ஏராளம். வாசகர்களின் பெரும் ஆதரவோடு தன்னிகரில்லாத் தமிழர் இதழ் பணிகளைத் தொடர எமது வாழ்த்துகள்.
2018, ஜூலை 28-31 இதழ்
"சிக்கிவிட்டார் ஓ.பி.எஸ்.', "ராஜினாமா முடிவில் ஓ.பி.எஸ்.' என்கிற செய்திகள் மூலம் ஓ.பி.எஸ்.ஸை மோடி அரசு எப்படி, தன் கைப்பாவையாக நடத்துகிறது என்பதையும் அதோடு எடப்பாடியையும் கூர்சீவி விட்டு இருவரையும் தராசுத் தட்டில் வைத்து ஏற்ற இறக்கத்தையும் காட்டிவருகிறது. எப்போது ஒருதட்டு தாழ்ந்து மறுதட்டு உயர்ந்தாலும் இரண்டு தட்டையும் கவிழ்த்து ஆட்சிக்கு முடிவு கட்டலாம் என்று வித்தை காட்டும் செய்திகளாக அமைந்துள்ளது.
"மாணவிகளுக்கு வலைவீசிய கோவை நிர்மலாதேவி' என்ற செய்தி ஏற்கனவே ஒரு நிர்மலாதேவி விவகாரத்தை பகிரங்கப்படுத்தியது நக்கீரன். கோவை பெண்கள் ஹாஸ்டலில் இருந்த கல்லூரி மாணவிகளை கழுகுகளுக்கு இரையாக்க நினைத்த வார்டன் புனிதா போன்றவர்கள் மீது இரக்கம் காட்டக்கூடாது.
திண்ணைக் கச்சேரி, பெண்களே பெண்களின் சிலேடை மொழியால் பேசுவது போன்று பெண் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அலுவலர்கள் பற்றிய தகவல்களை நயமாகச் சொல்லி, படிப்பவர்களை பரவசப்படுத்துகிறது. நாட்டுநடப்புகளை இப்படியும் சொல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டான தலைப்பும் அதில் உள்ள செய்திகளும் திண்ணை போன்று தரமாகவே உள்ளன.
வாசகர் கடிதங்கள்!
விலங்கை உடைக்கும் சுதந்திரம்!
கருத்துச் சுதந்திரத்திற்கு விலங்கு மாட்ட தமிழ் ஊடகத்தினரை குறிவைக்கும் பா.ஜ.க.வின் டி.எம்.ஜி. திட்டம், நீர்மேல் எழுத்து. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பத்திரிகையாளர்களை கருத்தியல் ரீதியாக பா.ஜ.க. தாக்க நினைத்தால், மக்களின் கோபங்களுக்கு ஆளாவதுடன், "தமிழகத்தில் தாமரை' என்கிற எதிர்காலக் கனவில், தானே சேற்றை அள்ளிப் பூசிக்கொள்வதற்குச் சமம்.
-அரிமா.கைலாசம், ஸ்ரீமுஷ்ணம்.
அம்பலமான ரகசியம்!
பஃபூன் கேரக்டர் மாதிரி ஆகிப்போச்சு இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர். ராணுவ ரகசியத்தை பாதுகாக்கத் தெரியாத இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் எங்ஙனம் நாட்டுமக்களை காப்பாற்றப்போறாங்க. இவுகள நம்பி உதவிசெய்யப் போன மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் "வலைவீச்சு'வாதிகளிடம் விவாதப்பொருளானதுதான் மிச்சம்.
-பொ.அரங்கநாயகம், திருச்சி-2.