ராணி காமிக்ஸ்ல வர்ற ஜேம்ஸ்பாண்ட் கதைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கற்பனைக் கதைகளே அப்படியிருக்குன்னா, அது கதையல்ல நிஜம்னு நக்கீரன் துப்பறிந்து சொல்லும்போது எப்படியிருக்கும்? அதனாலதான், ஒன்பதாவது படிக்கும்போதிலிருந்து நக்கீரனை படிச்சுக்கிட்டிருக்கேன்.
நடக்கப்போறதை முன்கூட்டியே ரகசியமா கண்டுபிடிக்கிறது சாதாரண விஷயமில்ல. அதை, முன்கூட்டியே சொல்றதுக்கும் ஒரு தில்லு வேணும். அது, எல்லாமே நக்கீரனிடம் இருக்கு. ஒவ்வொரு ஸ்டோரியும் ஒரு ஹாலிவுட் த்ரில்லிங் படத்தை பார்த்த மாதிரி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதனாலதான், நான் எப்பவுமே சொல்வேன்... பத்திரிகை உலகில் நக்கீரன் வேற லெவல். கிரைம் -த்ரில்லிங் சினிமாக்களை எடுக்கக்கூடிய ஒவ்வொரு இயக்குநரும் நக்கீரனைப் படிக்கணும். ஆல்ரெடி படிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க, அதிலிருந்து, பல தகவல்கள் சினிமாக்களாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
2018, ஏப்ரல் 29-மே 01 இதழ்:
நல்ல பழக்கவழக்கங்களைப் போதித்து நல்வழிப்படுத்தவேண்டிய பேராசிரியரே, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம்... பெண் பிள்ளைகளை பெற்ற என்னைப்போன்ற தகப்பன்களுக்கு மட்டுமல்ல,… ஒவ்வொரு பெற்றோருக்கும் பகீரூட்டக்கூடிய செய்தி.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து பாண்டிச்சேரியில் ஒரு தீர்ப்பு. தமிழகத்தில் ஒரு தீர்ப்பு என மாறுபட்ட தீர்ப்புகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஏன் தனியாக வைத்துக்கொண்டு… அதையும் தமிழக அரசுத்துறைகளின்கீழ் கொண்டு வந்துவிடலாமே என்று சொல்லத் தோன்றுகிறது. தி.மு.க. குடும்ப அரசியல் என்று சொல்லிவந்தார்கள். தற்போது, அதிகாரத்தை கைப்பற்ற அ.தி.மு.க.வின் குடும்பங்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.
--------------------
வாசகர் கடிதங்கள்!
உரியடிப்பு!
திருப்பதி தேவஸ்தானம் போர்டுக்குள் மற்ற மாநிலத்தவர்களின் பங்களிப்பு இருந்துவிடக்கூடாது, முழுக்க முழுக்க ஆந்திர ராஜாங்கத்தில் இருக்கவேண்டும் என்பதற்கான ஓர் உரியடிப்புதான் தமிழகத்துக்கான உறுப்பினர்களை நியமிக்காதது. சந்திரபாபு நாயுடு, ஒட்டுமொத்த தெலுங்கர்களின் இத்தகைய எண்ணத்தை தம் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டதுடன் கர்நாடகத்துக்கும் "பெப்பே' காட்டிவிட்டார்.
-தயா.மணிமொழி, நூரோலை.
ஏழும் ஏழரையும்!
டி.என்.ஏ. சோதனை கேட்கிற அம்ருதாவுக்கும் "ஜெ.வின் ரத்த மாதிரிகள் இல்லை' என்கிற அப்பல்லோவுக்கும் அப்படி ஒன்றும் ஏழாம் பொருத்தம் இல்லைதான். ஆனால் இதெல்லாம் நினைத்தபடி நடந்தால் ஏழரைச்சனிதான்.
-ஆர்.கண்ணப்ப மணிமாறன், சேந்தமங்கலம்.