Skip to main content

பார்வை!-ரமேஷ் கிருஸ்டீ

parvai

னக்கு "நக்கீரன்' புத்தகத்தை அறிமுகப்படுத்தியது, என் கிராமத்தில் சைக்கிள் பஞ்சர் போடும் மெக்கானிக் மின்னல் ராஜா என்பவர்தான். 90, 91 காலகட்டம் அது. அவர் நக்கீரனின் தீவிர வாசகர். "நக்கீரன்' வாங்க திருவண்ணா மலை சென்று புத்தகம் வாங்கிக்கொண்டு ஊருக்கு வருவார். என்னுடைய 16து வயதில், அவர் கடைக்கு பஞ்சர் போட போகும்போது "நக்கீரன்' படிக்க ஆரம்பித்தேன். வீரப்பன் செய்தி, பிரபாகரன் பற்றிய செய்தி, ஜெயலலிதா குறித்த "இங்கே ஒரு ஹிட்லர்' போன்ற தொடர்களின் தொடர் வாசகனானேன். ஆட்டோ சங்கர் எழுதிய தொடருக்காகவும், வீரப்பன் செய்திக்காகவும் நக்கீரன் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் அரசின் தூதுவராக காட்டுக்குள் சென்ற நக்கீரன் ஆசிரியர் எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், அவருக்காக நக்கீரன் குடும்பம் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, அப்பப்பா அத்தனையும் கண்முன் வருகிறது.

2019, செப். 07-10 இதழ்:

ராங்-கால் பகுதியில் வரும் செய்தி 100 சதவிகிதம் அப்படியே நடந்துவிடும் என்பது வரலாறு. அதனால் அதைத்தான் முதலில் படிப்பேன். "அடுத்து தி.மு.க., அமித்ஷா வேகம்' என்கிற செய்தி தி.மு.க. தலைமை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதைக் காட்டியது.

"அறை எண் 7, திகாரில் ப.சி.' என்கிற செய்தியின் இறுதியில் சொல்லியிருப்பதை போல இது முழுக்க முழுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பழிவாங்கும் நடவடிக்கை. இது தேசிய அரசியலுக்கு சரியானதல்ல.

"ஒன்சைடு கமல், பிக்பாஸ் மோசடி, தோலுரித்த மதுமிதா' என்கிற செய்தியில் அவர் சொல்லும் குற்றச்சாட்டை, அந்த நிறுவனம் "எங்களிடம் ஒப்பந்தம் உள்ளது' என சாதாரணமாக கடந்து செல்கிறது. பிக்பாஸ் என்பது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட். இப்படி பேச வேண்டும், இப்படித்தான் நடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்படுகிறது, மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையே இல்லை.

"பொதிகை மலை விற்பனைக்கு' என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. பூர்வகுடி மக்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டுவதைக் கண்டு மனசாட்சியுள்ள யாரும் எதிர்த்து நிற்பார்கள்.

___________
வாசகர் கடிதங்கள்!

மக்களோடு மக்களாக!

வேலூர் மாவட்டத்தை மூணா பிரிக்கும் முன்பே நாலாவட்டத்திலும் பதவிக்கு மல்லுக் கட்டுறாங்க. மாவட் டத்தின் முதல் மா.செ. பதவியை தி.மு.க., அ.தி.மு.க. என யார் வேண்டுமானாலும் தக்கவைத்துக் கொள்ளட்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மறக்காமல், அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தால் அதுவே போதும்.

-எஸ்.அஸ்கர் அலி, கும்பகோணம்.

பல்பு எரியுமா?

"இது எப்படி இருக்கு' வெளி நாட்டு ஆல்பம் கமெண்ட் ஹார்ட் டச். ஏற்கனவே போடப்பட்ட தொழில் ஒப்பந்தங்களே பல்பு வாங்கியாச்சு. பார்ப்போம், மந்திரிக இப்ப ஃபிளைட் பிடிச்சு ஃபாரின் போயிட்டு வந்த செலவுக்காவது ஏதாவது பல்பு எரியுதானு.

-கே.மணிமேகலை, விழுப்புரம்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்