புலனாய்வுப் பத்திரிகை வரிசையில் தன்னுடைய பெயருக்கு ஏற்றவண்ணம் குற்றம், குறைகளை எங்கு கண்டாலும் மக்களின் நலனுக்காக ஆண்டவனாக இருந்தாலும் சரி -ஆளும் ஆட்சியாளராக இருந்தாலும் சரி... "குற்றம் குற்றமே' என துணிச்சலுடன் பயப்படாமல் எழுதும் "நக்கீரன்' குழுமத்தையும், அதை வழிநடத்தும் பாசக்கார அதேசமயம் ரோசக்கார மீசை அண்ணாச்சியையும் பாராட்ட வேண்டும். பத்திரிகையின் துணிவு, உறுதிக்கு அண்ணாச்சி யின் உருவமே சாட்சி.
அரசின் செங்கோல் எப்படி யாருக்காகவும் வளையாதோ அதேபோன்று இவரின் எழுதுகோலும் யாருக்காகவும் வளையாது. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அரசின் கவனத்திற்கு உரிய முறையில் நக்கீரன் எடுத்துச் செல்கிறது. இந்தச் செயலைப் பாராட்ட வேண்டும். நக்கீரனின் துணிவை ஒரு சக பத்திரிகையாளனாக நான் அறிவேன். கடந்த 30 ஆண்டுகளாக "நக்கீரன்' கடந்து வந்த பாதையே இதற்குச் சாட்சி. மொத்தத்தில் பத்திரிகை உலகில் சாதனை படைக்கவே பிறந்ததுதான் "நக்கீரன்.'
2019, நவ.16-19 இதழ்:
பாத்திமாவின் மறைவு தொடர்பான கட்டுரையை படித்தபோது கண் கலங்கியது. "வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்' இப்படி ஒரு சம்பவமா? மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருடன் கேரள மாநில முதல்வர் அன்பு பாராட்டும் படம் என் மனதை உருக்கியது. விதுர நீதி, ஒரு துறவி என்பவர் யார் என்பதற்கு சரியான விளக்கத்தைக் கொடுத் துள்ளது. அதன்படி நடக்காமல் சந்நியாச தர்மத்திற்கு மாறுபட்டு அருண் சுவாமிஜி நடந்திருந்தால் அது குற்றம். கலைஞானம் அவர் களின் கிட்டூர் ராணி சென்னம்மா கதையின் மையக்கரு பெண் களுக்கும் வீரம், விவேகம் உண்டு என்பதை உணர்த்து கிறது. பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்பற்ற செயல் அங்கு படிக்கும் மாணவர்களின் மன நிலையை பாதிக்கும். இப்போதைய திராவிட இயக்கத் தலைவர் களுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என சரியான ஒரு வரியை திரு. பழ.கருப்பையா பதிவு செய்துள்ளார்.
____________
வாசகர் கடிதங்கள்!
திருந்தாத சுயநலக்கிருமிகள்!
கொடிக்கம்பங்களும் ப்ளக்ஸ் போர்டுகளும் கூடாது என நீதிமன்றமும் சில அரசியல் தலைவர்களும் பிரச்சினையின் அக்கறையில் சொல்லலாம். எனினும் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலக் கிருமிகள் திருந்தாதவரை உயிரைப் பறிகொடுக்கும், காலை இழக்கும் துர்சம்பவங்கள் அங்கங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
-எஸ்.சிவா, மேட்டுப்பாளையம்.
ஆசையின் யுக்தி!
உள்ளாட்சித் தேர்தல் சீட்டுக்காக வசூல் செய்தால் தனக்கு கெட்டபெயர் வரும்னு தெரிகிற எடப்பாடிக்கு தி.நகர் எம்.எல்.ஏ. சத்யாவை கூப்பிட்டு சத்தம் போட திராணி இல்லை. ஆனால் பாருங்க... இதையே சாக்கா வச்சி, யாராவது வழக்கு போட்டு தேர்தலுக்கு ஸ்டே வாங்கச் சொல்லும் தன் ஆசைக்கான யுக்தி மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
-வி.கிருத்திகா, தஞ்சாவூர்.