சமூக அக்கறை குழைத்து எழுகின்ற படைப்புகள் மட்டுமே எதார்த்த சமூகத்தின் இருதயப் பள்ளங்களில் தவழுகின்றன. மண்ணின் மகிழ்ச்சியையும் மக்களின் எழுச்சியையும் தனது கருத்தியல் புரட்சியால் வலிமையாக்குகிற முயற்சியில் நக்கீரன் இதழ் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டிற்குரியது.
தமிழக அரசியல் போக்கைப் புரிந்து கொள்வதற்காக வாசிக்கவேண்டிய இதழ் “நக்கீரன்’’என்கிற வரம்பைத் தாண்டி, சொல்லத் துணியாத உண்மைகளையும், பேச அஞ்சிய அநீதிகளையும்’’ செய்தியாக்கும் தனித்துவமே நக்கீரன் இதழை நேசிக்க வைக்கும் நெற்றிக்கண் குறியீடாகும்.
எளிய மக்களும் உழைக்கும் வர்க்கமும் வாசித்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில் செய்திகளை வழங்கும் எளிமையான சொற்களின் நடையும் கூடுதல் சிறப்பிற்குரியது. ஆகவே, நக்கீரன் இதழ் 30 ஆண்டுகளைக் கடந்து பயணிப்பதற்கு மக்களின் வாழ்த்துகளை உள்ளடக்கிய வரவேற்பும் நக்கீரன்கோபால் அவர்களின் அர்ப்பணிப்பும், நேர்மை நிறைந்த கடும் உழைப்பும் காரணங்களாகும். எனவே, நக்கீரன் இதழ் நூற்றாண்டின் இனிப்பை அள்ளி முகம் கழுவும் என்பது உறுதி.
2018, ஏப்ரல் 23-25 இதழ்:
குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவது அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அரசின் பிரதிநிதியான கவர்னராகவே இருந்தாலும் துணிந்து அம்பலப்படுத்தும் போக்கு மற்ற ஊடகங்களுக்கு உண்மையின் வழிகாட்டியாகவும் துணிச்சலின் மொழிகாட்டியாகவும் நக்கீரன் செய்திக் கட்டுரைஅமைவது வரவேற்கத்தக்கது.
‘சிறையில் பிணமான வீரப்பன் கூட்டாளி சைமன்’ செய்தியில் 25 வருடச் சிறைவாழ்வின் வன்கொடுமையையும் விடுதலைக்காற்றைத் தன் நுரையீரலுக்குள் நுழைய அனுமதிக்காமல் மரணத்தைச் சிறையில் சுவாசித்த சைமனின் வாழ்க்கைச்சுவடை மனித உரிமைத்தளத்தில் இருந்து உற்று நோக்குகிறது இப்பதிவு.
"பாழாகும் பவானி ஆறு' செய்தியில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் அக்கறை அவிழ்வதை உள்வாங்க முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் அரசியல் புலனாய்வுப் பல்கலைக்கழகம் நக்கீரன் இதழ்.
வாசகர் கடிதங்கள்!
அரசாங்கமே துணை!
மணல் கொள்ளை பழுதில்லாமல் நடக்க யாகம் கூடவா நடத்துவார்கள்? அரசாங்கம் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும்னு பார்த்தால் திருட்டுக் கும்பலுக்கு துணைபோவது நல்லாவா இருக்கு?
-சு.சிவா, தேனி.
இ.எஸ்.ஐ.க்கு சிகிச்சை!
இ.எஸ்.ஐ.க்கு பணம் கட்டும் தொழிலாளர்களில் பலர் அந்த மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டுதான் மருந்து பர்ச்சேஸில் ஏராளமாகச் சுருட்டுகிறார்கள். இதற்கான அறுவை சிகிச்சை அவசியம்.
-சு.பாண்டிக்குமார், மதுரை-629 002.