இருபது வருஷமா நக்கீரன் படிக்கிறேன். அப்ப ஊட்டி மலையில தேயிலைத் தோட்டத்துல வேலை. வாழ்க்கை காடாகிப் போனமாதிரி மலைக்காடு. நக்கீரன் கட்டாயத் தேவையாகிப்போனது. தமிழக நிலவரத்தை, அரசியலை, நல்லது கெட்டதை எனக்கு நக்கீரன்தான் சொல்லும்... சமூகம் குறித்த சிந்தனையைத் தூண்டும்.
ரொம்ப எளிமையா இருக்கும். படிக்கப் படிக்க சுவையாக இருக்கும். சூடுசொரணை குறையாம இருக்கும். நக்கீரன்ல வர்ற செய்தியைக் காட்டி யாரிடமும் என்னால் விவாதம் செய்ய முடியும். அந்த அளவுக்கு நக்கீரனோடு ஒன்றிப்போனேன்.
மலைக்காட்டில் வாழ்ந்த நாங்கள்கூட, அடர்வனத்திற்குள் செல்வதற்கு அச்சப்படுவோம். ஆனால் ஆசிரியர் நக்கீரன்கோபால் ஆறாயிரம் கி.மீ. பரப்பளவுள்ள கடும் காட்டுக்குள் கொடிய மிருகத்தைவிடக் கொடிய கொலைகாரனான சந்தனவீரப்பனை சந்தித்து, புத்திமதி கூறி, அவனிடம் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டுவந்தார் என்றால் எப்படிப்பட்ட துணிச்சல் வேண்டும்.
அந்தத் துணிவுதான் நக்கீரனின் முதுகெலும்பு.
2018, செப்.8-11 இதழ்:
குட்கா ஊழலைத் தொடர்ந்து வெளியிட்டு, அதை இன்றளவும் மக்களிடம் கொண்டு சென்று வெளிச்சப்படுத்தியதில் நக்கீரன் பங்கு பெரிது.
""வேகம் காட்டும் தினகரன்! அமைதி காக்கும் அ.தி.மு.க., தி.மு.க.'' தலைப்பிலேயே திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் களத்தை திறந்து வைத்துவிட்டீர்கள்.
""108-க்கு அவசரமாக போன் செய்ய வேண்டுமென்றால்கூட 20 கி.மீ.க்கு அப்பாலுள்ள வருஷநாட்டுக்கு போகவேணும்ங்கய்யா'' வாலிப்பாறை மக்களின் கோரிக்கையைக்கூட உரத்த சத்தத்தோடு நக்கீரனால்தான் முழங்க முடியும்.
""முதல்வர் விஜய்! முதலிடம் தனுஷ்!'' டூரிங் டாக்கீஸ் நல்ல விறுவிறுப்பு... சபாஷ்!
வாசகர் கடிதங்கள்!
"சிக்னல்'ல கல்யாணம்!
பூம்புகார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜின் இளையமகன் திருமணத்துக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வந்து வாழ்த்தினார்கள். அமோக ஆடம்பரச் செலவு. தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் மக்கள் வாலன்டரியா ஆஜராகி, கூட்டம் காட்டியிருப்பாங்க. ஆனாலும் நக்கீரன், மணவிழா புகைப்படத்தை "சிக்னல்'ல அச்சிட்டு லட்சக்கணக்கான வாசகர்களை கண்டுகளிக்க வச்சிடுச்சி.
-எஸ்.சந்திரசேகரன், கடலூர்.
தற்காலிக தொண்டர்கள்!
அழகிரியின் அமைதிப் பேரணிக்கு தற்காலிக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருப்பாங்கபோல. இருப்பினும் தனது அரசியல் பலத்துக்கு சுயபரிட்சை வைத்த அஞ்சாநெஞ்சனைப் பாராட்டத்தான் வேண்டும்.
-எம்.கே.நெப்போலியன், காஞ்சிபுரம்.