என்றும் எதிர் நீச்சலில் நக்கீரன்! , வழக்குரைஞர், மாவட்ட ம.தி.மு.கழக பொறுப்பாளர், ஈரோடு மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு.
தமிழக இதழியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய இதழியல் வரலாற்றில் நக்கீரன் அளவு ஆட்சியாளர்களால் பாதிப்புக்கு உள்ளான இதழ் இருக்கவே முடியாது. காரணம் சமரசம் இல்லாத ஆளும் கட்சி எதிர்ப்பு என்பதே. அதற்கு செயலலிதா முதலமைச்சராக இருந்த போது எழுதப்பட்ட, "இங்கேயும் ஓர் இட்லர்' தொடரே சான்று.
மேல்தட்டு அதிகார வர்க்கத்திற்கு இந்தியாவின் இரண்டாவது தலைநகரம் காஞ்சிபுரம். அங்கு நடந்த இந்தியா வையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சங்கர ராமன் கொலை பற்றி தொடர்ந்து எழுதி உண்மையை வெளிக்கொண்டு வந்து, இரண்டு சங்கராச்சாரியார்களும் ஓடி ஒளிந்து, கைதாக வேண்டிய நிலையை ஏற்படுத்திய பெருமை நக்கீரனுக்கு மட்டுமே உண்டு. அடர்ந்த சந்தனக்காடு களில் மறைந்து வாழ்ந்து வந்த வீரப்பனை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டியதுடன், "வீரப்பனுக்கு அரிசி பருப்பு கொடுத்தார்கள்' என்று குற்றம் சுமத்தி அப்பாவி மலைவாசிகளை, பழங் குடியின மக்களை இரு மாநில கூட்டு அதிரடிப்படையும் வேட்டையாடிய கொடூரத்தை வெளியுலகுக்கு அம்பலப் படுத்தி அம்மக்களின் நீதி, நிவாரணத் திற்காக துணை நின்றது "நக்கீரன்.'
2019, ஆக. 31-செப்.03 இதழ்:
"என்கவுன்ட்டருக்குப் பதில் மாவுக் கட்டு'. கழிவறைகளில் விசாரணைக் கைதிகள் மட்டுமே தொடர்ந்து வழுக்கி விழுவது, அவர்களுக்கு கை மற்றும் கால்களில் மட்டுமே எலும்பு முறிவு போன்ற காவல் துறையின் கதையை அம்பலப்படுத்தியது.
நக்கீரனை வாங்கியதும் நான் முதலில் படிப்பது அய்யா பழ.கருப் பையா அவர்களின் "அடுத்த கட்டம்' தொடர்தான். நாம் இந்துக்கள் அல்ல என்பது 100% உண்மை. மறைந்த எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடந்த கணக்கெடுப்பு படிவத்தில் "மதம்' என்ற இடத்தில் "திராவிட மதம்' என்றே அவரும், அவர் துணைவியார் வி.எம்.ஜானகி அவர்களும் பதிவு செய்துள்ளனர். அன்றே நாம் திராவிட மதம் என்றதை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும் . நான் சட்டப் படிப்பிற்கு முன்பே இதழியலில் முதுகலை எம்.ஏ. பட்டம் பெற்றவன் என்ற முறையில் நக்கீரனுக்கு எனது வாழ்த்துகள், பாராட்டுக்கள். தமிழ்ச் சமூகத்தின் போர்க்குரலாய் "நக்கீரன்' என்றென்றும் முழங்கட்டும்.
___________
வாசகர் கடிதங்கள்!
நச்!
""அரபு நாடுகளைப் போல பாலியல் குற்றங்களுக்கு உடனடி தண்டனை வேண்டும்'' என்கிற நடிகை திரிஷாவின் கருத்தைவிட "ஆன்ட்டி இந்தியன்' என்கிற மாவலியின் பதில் நச்.
-ஆர்.தேவதேவன், மயிலாடுதுறை.
மிகைப்படும் பொய்!
நடிகைகள் என்றால் தங்கள் அழகைத்தான் மிகைப்படுத்துவார்கள். ஆனால் வித்யாபாலனோ, உண்மையைத் திரித்து பொய்யை மிகைப்படுத்துகிறார். அவர் அனுபவித்த தமிழ் சினிமாவின் வாய்ப்புச் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேகணம், தனது அழகான "குண்டு' உடம்பாலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த இயலும் என்பதை விருதுகள் வழியே சாதித்தும் காட்டிவிட்டார்.
-கே.பி.ஜீவரத்தினம், அரியலூர்.