parvai

"நக்கீரன்' -எனக்கு அரசியல் புரிந்தநாள் முதல் இன்று வரை விடாது நான் தொடர்ந்து வாசிக்கும் பத்திரிகை. உண்மை -துணிவு -உறுதி இவை வார்த்தைகள் அல்ல, நக்கீரனின் செயல்பாடுகளே. அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறு களை சுட்டிக்காட்ட தவறும் போது எதிர்த்துக் கேட்க துணிவு வேண்டும், அந்த துணிவு நக்கீரன் ஆசிரியர் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்பது உறுதியான கருத்து.

2019, ஆக. 28-30 இதழ்:

இந்த இதழ் வெகுசிறப்பு. படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம் குறித்து உண்மைச் செய்திகளை வெளியிட பெரும் பாலான ஊடகங்கள் -பத்திரிகைகள் தயங்கி நின்று, அரசின் புள்ளிகளில் சிக்கி நிற்கும் வேளை யில் ‘"மோடி வித்தை'’ ஆசிரியரின் நெத்தியடி தலையங்கம்; அதிலும் குறளோடு சொன்னது சிறப்பிலும் சிறப்பு.

Advertisment

என்.ஐ.ஏ.வின் பயங்கரவாத பூச்சாண்டி நாடகத்தை தோலுரித்த "பயங்கரவாதியா? பயமுறுத்திய என்.ஐ.ஏ!' கட்டுரை புதிய பரிமாணம். ப.சி. வழக்கில் இனி நடக்கப்போவது என்ன என்பதை துல்லியமாக சொல்லும் "கஸ்டடி நீட்டிப்பு! ரெடியாய் திகார் ஜெயில்!' ஆதாரத்துடன் செய்திகளின் அணிவகுப்பு அருமை.

பெரும் சரிவில் உள்ள பொருளாதார சிக்கலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலைப்பாடு, டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பின் உண்மை முகத்தை வெளிக்காட்டும். "நிர்மலா சொல்வது நிஜம்தானா?' சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட தொகுப்பு.

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள நக்கீரனின் வெற்றிகரமான பயணம் சிறப்புறட்டும்.

Advertisment

__________

வாசகர் கடிதங்கள்!

போச்சே!

உடைபட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாற்றாக புதிய சிலையைக் கொண்டுவந்து துரிதமாக செயல்பட்டிருக்கிறது அரசு. இருப்பினும், இரு சாதிகளுக்கிடையே புகை மண்டலம் கிளம்பும் முன்னே அந்த தலைவெட்டி வேதாந்திகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அறிவு இல்லாமல் போச்சே.

-ஆர்.கே.சுடலைமாடன், கூடலூர்.

களங்கமில்லா சேவை!

முதியோர் உதவித் தொகையைப் பெறுவதற்குக் கூட கையூட்டு கொடுக்க வேண்டிய வெட்கங்கெட்ட சூழ்நிலை. ஆனால் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் போன்றவர்கள் பயனாளிகளின் வசிப்பிடத்திற்கே சென்று உதவித்தொகை ஏற்பாடு செய்கிறார்கள் எனில், அதற்கும் ஒரு களங்கமற்ற சேவை மனப்பான்மை வேண்டும். பயன் அடைந்த முதியோர்கள் வட்டாட்சியரை நூறாண்டு வாழ வாழ்த்துவார்கள்.

-எஸ்.ஸ்ரீமதி, சங்கராபுரம்.