parvai

சிரியப் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை என்னுடன் பயணிக்கும் நக்கீரனைப் பற்றி எனது பார்வையா..? என்ற கேள்வியுடன்தான் இதனை எழுதுகிறேன். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உண்மையை மட்டும் படித்த மக்களிடமும், படிக்காத மக்களிடமும் எடுத்துரைப்பதோடு சமுதாய கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது நக்கீரன்.

தன்னுடைய கடமையை கவனமாக நெஞ்சில் நிறுத்தி நாட்டு நடப்புகளையும் பல அரிய உண்மைகளையும் நேர்மையின் பக்கம் நின்று எங்களைப்போன்ற மக்களிடம் சேர்க்கின்றது நக்கீரன். மக்கள் தீர்ப்பின்படிதான் அரசியல்வாதிகள் நடக்கவேண்டும் என்பதனை இலாவகமான எழுத்து நடை மூலம் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் புரியும்வண்ணம் செய்தியினை சேர்ப்பிக்கும் நக்கீரன் திறமை அளப்பரியது. முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் பல செய்தியினை போட்டி போட்டுக்கொண்டு மக்களிடையே நொடியில் சேர்ப்பித்தாலும் அந்த செய்தியின் பின்புலம் இதுதான் என தோலுரிப்பது நக்கீரன் மட்டுமே.!

2018, ஏப். 26-28 இதழ்:

Advertisment

செய்திகள் பல பின்புலத்துடன் நிறைந்திருந்தாலும் எனது மனதை வருடியது என்னவோ, "மிரட்டும் நீட்! ஏமாற்றும் அரசு!' என்கிற செய்திக் கட்டுரையே. நீட் தேர்வினைப் பற்றி தெளிவாகத் தெரியாத பல கருத்துகளைக் கூறியது கட்டுரை. அதுவும் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்நேரத்தில் என்பதால் அக்கட்டுரை வலிமையாகிறது. "ஆசிரியர்கள் அவலநிலை' செய்தியின் நிறைவில் "கோடை விடுமுறையை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, விடுமுறை நாளில் போராடும் இவர்களுடைய நேர்மையான போராட்டத்திற்கு இனியாவது விடிவு கிடைக்குமா?' என்கிற கேள்வி நக்கீரனின் இயல்பான வேட்கையை பளிச்சிட வைக்கிறது.

-------------------------------------------

வாசகர் கடிதங்கள்!

Advertisment

டண்டணக்கா உண்மைகள்!

கட்சியைக் கடந்து இப்போது சசிகலா குடும்பமும் "மாமா-மருமகன்' என ரெண்டுபட்டுக் கெடக்கு. இவர்களின் டண்டணக்கா குஸ்தியில் அரசியல் கூத்தர்கள் குளிர்காய்வதுடன், கதை கதையாம் காரணமாம்னு இனி கொழுந்துவிட்டுப் பேசுவார்கள். பல உண்மைகள் வெளிவரலாம்.

-ஆர்.வடிவேலன், ஆத்தூர்.

கோள்மூட்டும் கவர்னர்!

ஆளுநர், "உயர்கல்வித்துறை ஊழலை தட்டிக்கேட்டதால் என்னை சிக்க வைத்துவிட்டார்கள்' என்று மத்திய அரசிடம் கோள்மூட்டுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இதுல, "அவள தொடுவானேன் கவலப்படுவானேன்'னு சம்பந்தமில்லாமல் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

-ஆ.விசுவநாதன், குன்னூர்.