12 வருடங்களுக்கு மேலாக "நக்கீரன்' படித்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை, துணிச்சல், தைரியம் என்றால் அது "நக்கீரன்'. யாராலும் தீர்க்க முடியாத, உண்மையான மக்கள் பிரச்சினைகளை நக்கீரனால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல லட்சோப லட்ச வாசகர் களுக்கும் உண்டு. அந்த நம்பிக்கையை இன்றளவும் எள்ளளவும் குறையாமல் தொடர்ந்துகொண்டிருப்பதுதான் நக்கீரனின் வெற்றிச் சரித்திரம்.
2019, அக்டோபர் 02-04 இதழ்:
நீட் வந்துவிட்டால் தகுதியான மாணவர்கள் டாக்டர் ஆவார்கள் என்றது மத்திய அரசு. ஆனால், இப்போதுதான், ஆள்மாறாட்டத்தின் மூலம் பல மாணவர்கள் மோசடியாக டாக்டர் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இப்படி, குறுக்கு வழியில் டாக்டர் ஆகும் மாணவர்கள்தான் மருந்துக் கம்பெனிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நோயாளிகளின் உயிருக்கு எதிரான எமனாக மாறுவார்கள். பிரபல கல்லூரிப் பேராசிரியையின் கதறல் வீடியோ பார்த்து பதைபதைத்துப் போனோம். "நக்கீரன்' போன்ற ஊடகங்கள் மட் டுமே என் மகள் போன்ற பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை இந்த இதழிலும் காண்பித்துவிட்டது.
மக்களுக்கு எதிரான காவல்துறை அதிகாரி களின் முகத்திரையை தொங்கப்போடுவதில் நக்கீரனுக்கு நிகர் "நக்கீரன்'தான். அதேபோல, மக்களுக்கு ஆதரவான, நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படும்போது அவர்களுக்கு துணை நிற்கிறது "நக்கீரன்'. ஒரு நேர்மையான அதிகாரி பாதிக்கப்படும்போது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். பந்தாடப்படும் அதிகாரிகளின் குரலாய் ஒலித்திருக்கின்றன "விக்கிரவாண்டி தேர்தலுக்காக பந்தாடப்படும் விழுப்புரம் டி.எஸ்.பி.' செய்தியும் "பந்தாடப் படும் உளவு அதிகாரி' செய்தியும். "என்ன டாக்டர் ரெண்டு மடங்கு ஃபீஸ் கேட்குறீங்க?' என்று கேட்கும் நோயாளியிடம் "எனக்கு பாதி எனக்காக நீட் தேர்வு எழுதினவனுக்கு பாதி' என்று சொல்லும் "வலைவீச்சு' சித்தரிப் புச் செய்தி உண்மையை மக்க ளுக்கு எளிமையாக விளக்குகிறது.
வாசகர் கடிதங்கள்!
எகிறும் எதிர்பார்ப்பு!
சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சே குறித்த தகவல்கள் இலங்கையின் அதிபர் தேர்தல் கள சூட்டைக் கிளப்புகின்றன. சிறு சிறு கட்சிகளின் கூட்டணி, சுயேட்சை வேட்பாளர்கள், ஈழத்தமிழர் களின் வாக்குகள் யாருக்கு? எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் பங்கேற்பு என உலக நாடுகளின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
-வ.கோசலை, இராமநத்தம்.
ஆதீன அடாவடி!
திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் மீது எவ்விதக் குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊர் நலத்துக்காக குளம் தூர் வாருதல் உட்பட நல்லதுதான் செய்திருக்கிறார். ஆதீனம், நிர்வாகி குருமூர்த்தி உள்ளிட்டவர்களை விசாரித்திருக்க வேண்டும். மாறாக, அரசியல் வாதிகளின் பேச்சைக் கேட்டு தம்பிரானின் "வேட்டி உருவலுக்கு' ஆதீனமும் ஒரு காரணியாகிவிட்டார்.
-எஸ்.கோபி, கடலூர்.