தி.மு.க.வின் 15-வது உட்கட்சி தேர்தல் கிளை முதல் தலைமைக் கழகம் வரையிலான நிர்வாகிகளுக்கு நடந்துமுடிந்து அனைவரும் பதவிகள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தி.மு.க.வில் உள்ள இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி உட்பட 21 அணிகளுக்கான மாநிலம் முதல் ஒன்றியம் வரை யிலான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தேர்வில் சலசலப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலர், “"கழக வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்பவர்கள் அரசு வழக்கறிஞ ராக, கூடுதல் வழக்கறிஞராக, அரசு குற்றவியல் வழக்கறிஞராக, அரசுத் துறைகளின் வழக்கறிஞராக என எதிலும் இருக்கக்கூடாது என கூறுகின்றனர். கட்சியில் வழக்கறிஞர் அணியில் உறுப்பினராகி கட்சிக்காக, கட்சிக்காரர்களுக்காக பல ஆண்டுகள் உழைத்தபின்பே அரசு வழக்கறிஞர் பதவி ஏதாவது ஒன்றுக்கு வரமுடியும். அரசுப் பதவி என்பது 5 ஆண்டுகள் மட்டுமே, அதன்பின் அவர் கட்சிப் பணிக்குத்தான் வந்தாகவேண்டும். இப்போது கட்சிப் பதவிக்கு வந்தவர், ஆட்சி முடிவுக்கு வந்து எதிர்கட்சியினரானபின் அரசு வழக்கறிஞர் பதவி காலாவதியாகிவிடும். நாங்கள் மீண்டும் கட்சிப் பணிக்கு வந்தால் பொறுப்பிலுள்ளவர்கள் விட்டுத்தந்துவிடுவார்களா? அல்லது வேறு அணியில் பொறுப்பு கேட்டாலும் யாரும் விட்டுத்தரமாட்டார்கள்.

ss

Advertisment

கட்சியில் பொறுப்பு வேண்டாம் அரசுப் பதவி போதும் எனச்சொன்னால் அதன்பின் எங்களுக்கும் கட்சிக்கும் பெரிய இடைவெளி விழுந்துவிடும்.

5 ஆண்டுகளுக்கு அவர்களாலும் கட்சிப் பொறுப்பில் நீடிக்கமுடியாது. அவர்களுக்கும் கட்சியில் சீனியாரிட்டி போய்விடும், பிறகு எப்படி அவர்கள் தொடர்ந்து கட்சிக்காக உழைப்பார்கள். இதற்கு மாற்று ஏற்பாடுகளை தலைமை செய்யவேண்டும்''’ என்றனர்.

மூத்த வழக்கறிஞர் ஒருவர், "வழக்கறிஞர் அணிக்கு இப்படியொரு விதி வைக்கும் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் மா.செ.க்களாக, ந.செ., ஒ.செ.க்களாக உள்ளார்கள். அவர்களிடம் எம்.எல். ஏ.வா இருக்கீங்க, அமைச்சரா இருக்கீங்க, பதவியில் இருக்கும்வரை கட்சிப் பதவியில் இருந்து வில கிடுங்க அப்படின்னு சொல்லமுடியுமா? இது காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் வகுத்துத் தந்த கே பிளான்போல் உள்ளது. அது பெயிலியரான ப்ளான் என்பதை இதனை நடைமுறைப்படுத்த துடிக்கும் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் உணர வேண்டும்''’ என்றார்.

Advertisment

இதுகுறித்து மாநில வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவருடன் பேசியபோது, “"அரசு வழக்கறி ஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பதவிக்கு வந்து அரசு சம்பளம் பெறுபவர்கள் அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது விதி. இது அரசுப் பணிக் காக விண்ணப்பம் அனுப்பும்போதே அவர்களுக்கும் தெரியும். இந்த விதியை கடந்த காலத்தில் எந்த ஆட்சியினரும் கடைப்பிடித்ததில்லை. உயர்நீதி மன்றத்தில் நியமிக்கப்படுபவர்கள் மட்டும் அதனை கடைப்பிடிப்பார்கள். மாவட்ட, தாலுகா அளவில் பெரும்பாலும் கட்சிப் பதவி, அரசு பதவி இரண்டி லும் இருப்பார்கள். அரசு சம்பளம் பெறுபவர்கள் கட்சிப் பதவியில் இருந்தால் சட்டப்படி தவறு. அந்த தவறை கட்சியில் யாரும் செய்யக்கூடாது. சட்டத்தை, விதிகளை தி.மு.க. வழக்கறிஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் அந்த தவறை மற்றவர்கள் செய்யும்போது நாம் கேள்வி கேட்கமுடியும் என நினைக்கிறார் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ. அதனாலயே பொறுப்பு கேட்டு மனு செய்யும்போதே கட்சிப் பதவியா? அரசுப் பதவியா? எது என்பதை நீங்களே முடிவுசெய்து மனு செய்யுங்கள் எனச் சொல்லியுள்ளார்'' என்றார்.

-கிங்