ம்பேத்கர் மணிமண்டபத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த தோழியரை ஏமாற்றாமல் அழைத்துச் சென்றார் மெரீனா.

""நடப்பது உடம்புக்கு நல்லது. வாங்க நடக்கலாம்'' என்று கூறி, பறக்கும் ரயிலில் இருந்து பசுமைவழிச் சாலை நிலையத்தில் இறங்கி நடந்து, மண்டபத்தை அடைந்தார்கள் நக்கீரன் மகளிர் அணியினர். அழகியதாக, அமைதி தருவதாக, அண்ணல் அம்பேத்கருக்கு பெருமையூட்டுவதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. அங்கே அமர்ந்து கச்சேரியை ஆரம்பித்தார்கள்.

thinaikatchery

Advertisment

மெரீனா: போன வாரம் பரபரப்பா வெளியானதே அந்த பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் நடந்து 60 நாளைக்கு மேலே ஆச்சாமே?

கோமுகி: ஆமாமா! தாக்கிய தி.மு.க. செல்வகுமாரும், தாக்கப்பட்ட "மயூரி' சத்தியாவும் அப்பவே காவல் நிலையத்துக்குப் போய் "எங்களுக்குள்ள நல்ல நட்பும் அண்டர்ஸ்டாண்டிங்கும் இருந்தது. கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுவிட்டது. நாங்கள் சமாதானமாகிவிட்டோம்'னு எழுதிக் கொடுத்துவிட்டு, கண்ணும் கண்ணும் வச்ச மாதிரி வந்துட்டாங்க. இப்ப சத்தியாவின் இன்னொரு நட்பு, திடீர்னு களத்தில் இறங்கி புட்டேஜை வாங்கி வெளியிட்டு செல்வகுமாரின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட வச்சிட்டாராம்.

மல்லிகை: எப்படிப்பட்ட கொடுக்கல்-வாங்கல்?

Advertisment

கோமுகி: "மயூரி' சத்தியாவின் கணவர் ஏதோ கல்லூரியில் விரிவுரையாளராம். மகனுக்கு பத்து வயசு. சத்தியா மூணு இடத்தில மயூரி பியூட்டி பார்லர் நடத்துறார். நட்பின் நெருக்கம் காரணமாக தொழிலை டெவலப் பண்றதுக்காக, செல்வகுமார்கிட்ட 20 லட்சம் வாங்கினாராம்.

thinaikatcheryபவானி: கொடுத்த பணத்தை கேட்டுத்தான் பிரச்சினையா?

கோமுகி: சேச்சே... நான் கேள்விப்பட்டவரை அவங்க பிரச்சினை பணம் மட்டுமில்லை? நட்பு திசை மாறாம இருந்திருந்தால் பணத்தை செல்வகுமார் கேட்டிருக்கவேமாட்டாராம். பியூட்டி தொழிலை இன்னும் டெவலப் பண்றதுக்காக செல்வகுமாரை விட்டுட்டு, பிரபாகரன் மேல அபார நட்பு பாராட்டினாங்களாம் மயூரி சத்தியா.

மெரீனா: அது யாரு பிரபாகரன்? அவர் எவ்வளவு கொடுத்தாராம்.

கோமுகி: அவரும் தி.மு.க.தான். பிரபாகரன் இப்ப ந.செ.யாக இருக்கிறார். 2006-இல் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க. வேட்பாளரா களமிறங்கித் தோற்றவர்.

நாச்சியார்: ஏய்... ஒரு வேலைக்காரர் டீன்ஏஜ் பொண்ணை...

கோமுகி: அது தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜ்குமார். இந்த பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகவே இல்லை. இந்த பிரபாகரன்தான் சத்தியாகிட்ட புட்டேஜை வாங்கி பிரச்சினையை ஹெலிகாப்டர்ல ஏத்தினாராம்... பேச்சு அப்பிடித்தான்.

மல்லிகை: நோண்ட நோண்ட கவுச்சியாவுல இருக்கு. இந்த கூடா நட்பு ஏடாகூடமாகி, கட்சித்தலைமைக்கு நெருக்கடி கொடுத்து, கட்சி இமேஜை மீடியாக்களில் டேமேஜாக்கிடிச்சே...

கோமுகி: செல்வகுமார், பிரபாகரன் ரெண்டுபேருமே ஆ.ராசாவால் வளர்ந்து சத்தியாவால் உடைந்திருக்காங்க.

மெரீனா: டாப்பிக்கை மாத்துங்க. வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி, 2016 எம்.எல்.ஏ. எலெக்ஷன்ல, கே.வி.குப்பம் தொகுதியில தனக்கு சீட் தரலைனு கோவிச்சுகினு இலையில இருந்து தாமரைப்பூவுக்கு போனாங்களே... அங்கேயும் பிரச்சினையோ?

கோமுகி: செப்டம்பர் ஆறாம் தேதி, வேலூர்ல பா.ஜ.க.வின் அகில பாரத இணை பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையில தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்துச்சு. அதுக்கு கார்த்திகாயினி வரலை. உடனே கட்சி மாறப்போறதா செய்தி அடிபட்டுச்சு.

மல்லிகை: அவுங்களை உனக்கு நல்லாத் தெரியும்தானே... நேரடியா கேட்க வேண்டியதுதானே?

கோமுகி: போன்ல பேசினேனே... "பா.ஜ.க. தலைமை என்ன விருதுநகர்-சிவகாசி தொகுதி பார்வையாளரா நியமிச்சிருச்சு. சிவகாசிக்கு வந்துட்டேன். கட்சியில் சொல்லிட்டுத்தான் வந்தேன். அதுக்குள்ள என் அன்பான எதிரிகள் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க'னு கார்த்திகாயினி வருத்தப்பட்டாங்க.

நாச்சியார்: சரி... சரி... கார்த்திகாயினி கட்சிக் கடமைகளில், கண்ணா இருக்கிறதா பதிவு பண்ணியாச்சு. இப்ப நான் ஒரு பட்டாசு தாக்கலைச் சொல்றேன், கேளுங்க. விருதுநகர் மாவட்டத்தின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநராக சித்ரா என்பவர் இருக்காக. அவங்க கட்டுப்பாட்டுல 300 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்காம்.

மெரீனா: எவ்வளவுக்கெவ்வளவு அதிக ஆலைகள் இருக்கோ அவ்வளவு வருமானமும் இருக்குனு சொல்றீங்களா?

நாச்சியார்: தானா கனிஞ்சா பரவாயில்லையே... தடி கொண்டு அடிச்சுக் கனிய வைக்கிறாங்களாம்.

கோமுகி: உங்ககிட்ட புகார் சொன்னது யாரு?

நாச்சியார்: மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்திதான் எரிச்சலோடு வாசிச்சார். தலா 30 ஆயிரம்னு ரேட் பிக்ஸ் பண்றாங்க. 30 ஆயிரத்தை 300 ஆல் பெருக்கிப் பாருங்கனு வெடிச்சாரு. நான் அந்தச் சித்ராம்மாகிட்ட நெஜந்தானான்னு விசாரிச்சேன்.

பவானி: "நீங்க லஞ்சம் வாங்குறீங்களா'னு அவுங்ககிட்டயே கேட்டீங்களாங்க?

நாச்சியார்: அட ஆமாத்தா! "நான் என் டூட்டில கரெக்டா இருப்பேன். நான் எதுக்கு பணம் வாங்கப் போறேன்'னு அவுங்களே சொல்லிட்டாங்க.

மெரீனா: சட்டமேதை காதில நாம பேசினதெல்லாம் விழுந்திருந்தா என்ன நெனைச்சிருப்பார்?

மல்லிகை: கஷ்டப்பட்டு உருவாக்கித் தந்த அரசியல் சாசனத்தை அதிகாரத்தில் இருக்கிறவங்க எப்படியெல்லாம் வளைக்கிறாங்கன்னு நினைச்சிருப்பாரு.

-சி.என்.ராமகிருஷ்ணன், எஸ்.பி.சேகர், து.ராஜா