தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி..துரைசாமி, அறிவாலயத்திலிருந்து கமலாலயத்தின் கதவைத் தட்டி, பாஜ.க.வில் சேர்ந்து விட்டார். அவரது இடத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போது ராஜ்யசபா எம்.பி.யுமான அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மிகக் குறுகிய இடைவெளியில் இரண்டு பொறுப்புகளைப் பெற்றிருக்கும் அந்தியூர் செல்வராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ss

நக்கீரன்: சில நாட்களுக்கு முன்புதான் எம்.பி. பதவி இப்போது கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவி பெற்றுள்ளீர்களே... எப்படி அமைந்தது இந்த வாய்ப்பு?

Advertisment

செல்வராஜ் : ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான நான், சிறுவயதிலிருந்தே தி.மு.க.வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் வளர்ந்தேன். 1996-ல் அந்தியூர் தொகுதியில் சீட் கொடுத்து வெற்றிபெற வைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர் தலைவர் கலைஞர். அதேபோல் தற்போதைய ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு நானாகத்தான் விண்ணப்பம் கொடுத்தேன். மொத்தம் 12 பேர் சீட் கேட்டிருந்தனர் நான் யாரிடமும் எந்த சிபாரிசும் வேண்டவில்லை. ஆனால் தலைவர் அவர்கள் என்னை எம்.பி.யாக அறிவித்தார். அடுத்து, தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்கே, துரோகம் செய்துவிட்டு போனவர் வி.பி.துரைசாமி. ஆகவே அருந்ததியர் சமூகத்திற்கு தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு என்றென்றும் இருக்கவேண்டும் என்பதற்காகவே தலைவர் எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். சாதாரண கிராமத்தைச் சேர்ந்த தொண்டனுக்கும் கட்சியில் உயர் பொறுப்பு கிடைக்கும் என்பதை தி.மு.க. தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதற்கு நானே உதாரணம்.

நக்கீரன்: வி.பி.துரைசாமியும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான், கட்சியில் சீனியராக இருந்தவர் அவர் தனக்கும் பதவி வேண்டும் என எதிர் பார்ப்பது தவறு இல்லையே?dd

செல்வராஜ்: வி.பி.துரைசாமி சீனியராக இருந்தார். ஆனால் கட்சிக்கு சின்சியராக இல்லை. துணை சபாநாயகர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளைப் பெற்றபோதும் மேல்சாதி தோரணை யுடன் உலா வந்தவர். எந்த ஒரு காலனிக்கும் சென்று மக்களிடம் நெருங்கவில்லை. ஒரு இயக்கம் எந்தவொரு மனிதனுக்கும் எப்போதும் பதவி கொடுத்துக் கொண்டே இருப்பேன் என அந்த மனிதனுக்கு இயக்கம் எதுவும் எழுதிக் கொடுக்க முடியாது. வி.பி.துரைசாமி அவர் வகித்து வந்த எந்தப் பதவியிலும் கட்சிக்கோ கட்சியின் கொள்கைக்கோ அல்லது தொண்டர்களின் நலனுக்கோ முழுமையாக இயங்கவில்லை. தன் குடும்பத்தை மட்டும் உயர்த்திக்கொண்டார். பதவிக்காக மட்டுமே ஒரு மனிதனை கட்சியில் வைத்திருக்க முடியாது.

Advertisment

நக்கீரன்: உங்களுக்கு கொடுத்த எம்.பி. பதவியை வி.பி.துரைசாமிக்கு கொடுத்திருந்தால் அவர் கட்சி விலகியிருக்க மாட்டார் என அவர் தரப்பினர் கூறுகிறார்களே?

செல்வராஜ் : அவரைத் தாண்டி இந்த சமூகத்தில் யாரும் மரியாதைக்குரிய பதவிகளில் இருக்கக்கூடாதா? ஏன் நானும் அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவன்தானே? ஒரே சமூகத்தில் இருந்து கொண்டு மற்றவனுக்கு பதவி கிடைத்து விட்டது என அதை ஜீரணிக்க முடியாத இந்த துரைசாமி, எப்படி சாதி, சமய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடுவார்? வருணாசிரமக் கொள்கையை கடைப்பிடிக்கும் பா.ஜ.க.வுக்கு சென்றதை அவர் பிறந்த இந்த சமூகம் எப்போதும் மன்னிக்காது.

நக்கீரன்: தி.மு.க.வில் சாதி பாகுபாடு உள்ளது என வி.பி.துரைசாமி கூறியிருக்கிறாரே?

செல்வராஜ் : பதவி கிடைக்காததால் தி.மு.க.மீது கல் எறிகிறார். ஒடுக்கப்பட்ட, அருந்ததியின சமூகத்திற்கு தலைவர் கலைஞர் ஆட்சியில் தானே 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வேலை வாய்ப்புகளில் கொடுக்கப்பட்டது. அதன் பலனாகத்தான் இன்று பல ஆயிரக்கணக்கான படித்த அருந்ததியின சமூக இளைஞர்கள், பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளில் அமரும் நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு காரணம் தி.மு.க.தான்.

நக்கீரன்: நீங்கள் தி.மு.க.வின் ஆதிதிராவிட நல குழு அமைப்பின் பொறுப்பாளராக தானே உள்ளீர்கள். உங்கள் செயல்பாடும் திருப்தியாக இதுவரை இல்லை என்றே கூறப்படுகிறதே?

செல்வராஜ் : சில இடங்களில் நிர்வாக அமைப்பு ரீதியாக அருந்ததியின சமூகத்தினர் உள்ள இடங்களில் சென்று கூட்டம் நடத்தவோ தனித்து இயங்கவோ முடியாத நிலை இருந்தது. ஆனால் இனிமேல் அப்படி இல்லை. கட்சித் தலைமை எனக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கி உள்ளது. ஆகவே தமிழகம் முழுக்க பயணிப்பேன். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வை எங்கள் சமூக மக்கள் வாழும் பகுதி களில் மிகவும் வலுவான இயக்கமாக மாற்றுவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து செயல் படுவேன்.

அடுத்து நாம் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளள வி.பி.துரைசாமியின் கருத்தறிய தொடர்ந்து முயன்றோம். நீண்ட முயற்சிக்கு பிறகு தொடர்பில் வந்த அவர்,

""இப்போது வேண்டாம், பிறகு எல்லாம் பேசுகிறேன், ஒரு வாரம் ஆகட்டும்...'' என்றார் ""உங்களுக்கு பா.ஜ.க. கொடுக்கப் போகும் பதவி....'' என நாம் கூற... உடனடியாக தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

வி.பி.துரைசாமியின் பதில் எப்போது கிடைத்தாலும் பதிவிட நக்கீரன் தயாராக உள்ளது.

-ஜீவாதங்கவேல்