மனதில் பட்டதை மறைக்காமல் அதிரடியாகப் பேசுபவர் பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். நடப்பு சூழல்கள் குறித்த கேள்விகளை அவர்முன் வைத்தோம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் தமிழக அரசின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கை சரிதான் என பா.ஜ.க. நினைக்கிறதா?
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என சொல்வார்களே; அதில் வாலையும் தமிழக அரசு விட்டுவிட்டது. அதாவது, போராட்டத்தின் துவக்கத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லது நூறாவது நாளிலாவது எடுத்திருக்க வேண்டும். கலவரம் வெடித்த பிறகு ஆக்ஷன் எடுக்கின்றனர். இது திறமையற்ற அரசாங்கம்.
"துப்பாக்கிச்சூடு கலவரத்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது' என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமானதுதானே?
நடந்துள்ள கலவரத்தை சட்டம்-ஒழுங்கு என்கிற சின்ன வட்டத்தில் அடைத்துவிடக்கூடாது. அதையும் தாண்டி பயங்கரவாதமாகத்தான் பார்க்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தை நிலைகுலைய வைக்கும் சதி நடந்து வருகிறது. மக்களின் வாழ்நிலையில் ஒரு அச்சத்தை; குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் வெளியே நடமாட அச்சப்படுமளவுக்கு சூழலை உருவாக்கும் சதி நடக்கிறது. இதனை முறியடிப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்திருக்கிறது.
துப்பாக்கிச்சூட்டில் படுகொலையானவர்களை பயங்கரவாதிகள் என சொல்கிறீர்களா?
அப்படி நான் சொல்லவில்லை. துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிகள் சிலரும் பலியாகியிருக்கலாம். ஆனால், தமிழக அரசின் வாதம் என்ன? பயங்கரவாதிகளால் தூண்டப்பட்ட கலவரத்தை ஒடுக்குவதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் சொல்லி கொல்லப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தந்திருக்கிறார் முதல்வர். ஆக, கலவரத்தை ஒடுக்க பயங்கரவாதிகளை குறிவைத்துதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு தருவது சரி என்றால் காவல்துறையின் துப்பாக்கிச்சூடு தவறு என பொருள். அந்த தவறை செய்த காவல்துறையினருக்கும், துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்குமளவுக்கு வலுவான ஒரு வழக்கை எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்பது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் கேள்வி. மத்திய உள்துறையின் உத்தரவில் தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைதான் துப்பாக்கிச்சூடு என வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து?
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசுக்குத்தான் அக்கறை அதிகம் உண்டு. அதனால் இந்த விசயத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதி மாநில நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் மட்டுமே கொடுத்திருக்க முடியும். தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது; அதையெல்லாம் மத்திய அரசிடம் அனுமதி பெற்று நடத்தினார்களா? இது உண்மை என்றால் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் ஆட்சியையும் கட்சியையும் நடத்தும் யோக்யதை கிடையாது.
துப்பாக்கிச்சூடு கலவரத்துக்கு சமூகவிரோதிகள்தான் காரணம் என நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் எழும் கண்டனங்களில் பா.ஜ.க.வின் நிலை என்ன?
தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதையும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் சமூகவிரோதிகளின் கைகள் ஓங்கியிருப்பதையும் சொல்லி நான் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறேன். ரஜினிகாந்தும் போராட்டங்களை கவனித்து வந்திருக்க வேண்டும். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் ஆராய்ந்து சொல்லியிருக்கலாம். மக்களை சமூக விரோதிகள் என ரஜினி சொல்லவில்லை.
பா.ஜ.க. மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் குரலைத்தான் ரஜினி பிரதிபலித்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டை தி.மு.க. முன்வைக்கிறதே?
மக்கள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர் என சொன்னால் தி.மு.க.வுக்கு ஏன் கோபம் வருகிறது? அப்படியானால் அவர்களின் கை அதில் இருக்கிறதா?
உங்களின் கருத்தைத்தான் ரஜினி பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிற நிலையில், அரசியல்ரீதியாக ரஜினியை பா.ஜ.க.தான் இயக்குகிறதா?
ரஜினி எனக்கு நல்ல நண்பர். பல முறை சந்தித்திருக்கிறேன். அதுபோல காங்கிரஸ், தி.மு.க தலைவர்களுக்கும் அவர் நண்பர். ரஜினியுடனான தனிப்பட்ட நட்பை வைத்து பா.ஜ.க.வை அவர் பின்தொடர்கிறார் எனச் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உடன்பாடும் இல்லை. எங்களுக்கும் அவருக்கும் உடன்பாடென்றால், அவர் எதற்கு தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்? பா.ஜ.க.வையும் ரஜினியையும் கண்டு பயப்படுபவர்களின் உளறல்கள்தான் ரஜினியை பா.ஜ.க. இயக்குவது என்பது.
நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தலை நடத்த பா.ஜ.க. தலைமை திட்டமிடுவதாக சொல்லப்படுகிறதே?
நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தலாம் என ஒரு சிந்தனை ஓட்டம் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தும் முடிவு எதுவும் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஆள ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர் மறைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியிருக்கிறார். அவரது ஆட்சி இன்னும் 3 வருடங்களுக்கு தொடருமா என்பது அ.தி.மு.க.வில் நடக்கும் அரசியலைப் பொறுத்தது.
-இரா.இளையசெல்வன்