தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.

dd

தி.மு.க.வில் என்ன நடக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மா.செ.க்கள் சிலரிடம் விசாரித் தோம். ’தி.மு.க.வில் காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.ஐ., சிபி.எம்., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகள் இருக்கின்றன. வேல்முருகனின் தமிழக வாழ் வுரிமைக் கட்சியும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு எண்ணிக்கை என்பதையும் கடந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுவது, விரும்பும் தொகுதிகளை பெறுவது என்பதால்தான் இழுபறி நீடிக்கிறது. சூரியனில் போட்டியிடச் சொல்லி வலியுறுத்தவில்லை என எங்கள் தலைமை சொன்னாலும், அதற்கான வலியுறுத்தல்கள் உண்டு. அதாவது, 200 தொகுதிகளில் உதயசூரியன் நிற்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் இலக்கு.

Advertisment

rr

காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தால் அவைகளுக்கான எண்ணிக்கைக் குறையும். அந்த வகையில், 34 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு 200 இடங்களில் தி.மு.க. நேரடியாக களமிறங்கும்.

அதுவே, கூட்டணி கட்சி களுக்கு எண்ணிக்கையை தி.மு.க. உயர்த்தினால் அந்த எண்ணிக்கையில் சரிபாதியாக தனிச்சின்னத்திலும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டி யிட கூட்டணி கட்சிகள் சம்மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் 180 இடங்களில் தி.மு.க. போட்டியிட ஸ்டாலின் சம்மதிப்பார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கை 34-லிருந்து 54 ஆக உயரும். அது கட்சிகளின் தன்மைக்கேற்ப பகிர்ந்தளிக் கப்படும்.

Advertisment

இது ஒரு புறமிருக்க, தற்போது தி.மு.க. ஜெயித்துள்ள சிட்டிங் தொகுதிகளோடு, வெற்றி வாய்ப்புள்ள மேலும் 100 இடங்களை அடையாளம் கண்டறிந்து அதனை ஸ்டாலினிடம் தந்துள்ளது ஐ-பேக். அதில் பல தொகுதிகள் கூட்டணி கட்சிகள் அழுத்தமாக கேட்கும் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. அதனை விட்டுக் கொடுக்க தி.மு.க. தயாராக இல்லை.

இதனால், எண்ணிக்கையும் குறைவு, தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட வேண்டும், ஆனாலும் விரும்பிய தொகுதிகள் கிடைக்காது என்றால் எப்படி என்கிற ஆதங்கம்தான் கூட்டணி கட்சிகளிடம் இருக்கிறது. இதனால்தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை துவங்கவில்லை.

தற்போதைய சூழலில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு மட்டுமே இரட்டை இலக்கத்திலும், மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கத்திலும்தான் ஒதுக்க சம்மதிக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, மதி.மு.க., சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியவை களுக்கு தலா 5 சீட் என சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய தேர்தலில் மதி.மு.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டிருப்பதால் அதைச் சுட்டிக்காட்டி 5 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது தி.மு.க.

சூரியனில் போட்டியிடுவதாக இருந்தால், எண்ணிக்கையை கூடுதலாக்குகிறோம். அதில் நீங்கள் விரும்பும் சில தொகுதிகளும் நாங்கள் தரும் தொகுதிகளும் இருக்கும் என சிறுத்தைகளிடமும், அதேபோல, 5 சீட்டுகளுக்கு ஒப்புக் கொள்ளுங்கள்; ராஜ்யசபா தேர்தலின் போது உங்களுக்கு சீட் தரப்படும் என கம்யூனிஸ்டுகளிடமும் தி.மு.க. தெரியப்படுத்தியிருக்கிறது. ஆனால், தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என தெரியாத நிலையில் ராஜ்யசபா என்கிற கமிட்மெண்ட்டை எப்படி ஏற்பது என்கிற குழப்பம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது. இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் வெளிப்படையான பேச்சுவார்த்தை தி.மு.க.வில் துவங்கவில்லை'' என்கிறார்கள் விரிவாக.

dd

தி.மு.க. வைத்திருக்கும் இப்படிப்பட்ட நிபந்தனைகளை கூட்டணி கட்சிகள் தங்களின் உயர்மட்ட குழுவில் விவாதித்து வருகின்றன. அநேகமாக, பிப்ரவரி 15-க்குள் கூட்டணி கட்சிகள் தங்களின் இறுதி முடிவை தி.மு.க.வுக்கு தெரிவித்து விடும் என்கிற எதிர்பார்ப்பு அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சிகளாக பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகியவை இருக்கின்றன. த.மா.கா.வை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி சொல்வதை ஏற்கும் முடிவில் இருக்கிறது. அதேசமயம் தேமுதிகவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எடப்பாடி. அதனால் பாஜக, பாமகவுடனான ரகசிய பேச்சு வார்த்தையை மட்டுமே நடத்துகிறது அ.தி.மு.க.! இந்த இரு கட்சிகளை சம்மதிக்க வைத்தபிறகே தேமுதிகவை பார்ப் போம் என சீனியர்களிடம் சொல்லி வருகிறார் எடப்பாடி.

அதி.மு.க. கூட்டணியில் நடப்பது என்ன என்று மேல் மட்டத்தில் விசாரித்தபோது, அ.தி.மு.க. கூட்டணியை பா.ஜ.க. உறுதிப்படுத்தியிருந்தாலும் கூட்டணியின் முதல்வர் வேட் பாளராக எடப்பாடியை ஏற்கிறோம் என எந்த உறுதியையும் பாஜக தலைமை தரவில்லை. சீட் எண் ணிக்கையை அதிகரிக்கவே இந்த யுக்தியை அவர்கள் கையாண்டு வருகிறார்கள். அதனை உடைத்து முதல்வர் வேட்பாளராக தன்னை பாஜக ஏற்க வைக்கும் யுக்தி எடப்பாடிக்கு தெரியும். அதற்கான வியூக முயற்சிகள் தனி ட்ராக்கில் ரகசியமாக நடந்து வருகிறது.

rr

அதேபோல, கூட்டணியில் இரண்டாவது இடம், அதிக தொகுதிகள், தேர்தல் செலவுகள் ஆகியவைகளை முன்னிறுத்தி கூட்டணியைப் பேசுகிறது பாமக. இதற்காகத்தான் இட ஒதுக்கீடு பிரச்சனை மூலம் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தருகிறார் டாக்டர் ராமதாஸ். இதுகுறித்து அமைச் சர்கள் கே.பி.அன்பழகன், தங்க மணி, வேலுமணி ஆகியோர் ராமதாசுடன் தைலாபுரத்தில் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும், 20 சீட்டுகள் தருகிறோம்; தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்காத பாமக, 35 சீட்டுகள் வேண்டும்; தேர்தல் செலவுக்கான தொகையை எங்களிடமே தர வேண்டும் என வலியுறுத்தியது. இதனை எடப்பாடி ஏற்காததால் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க கட்சியின் நிர்வாக குழுவை 31-ந்தேதி கூட்டுவதாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.

இதனையடுத்து, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோருடன் விவாதித்த எடப்பாடி, அதிக தொகுதிகளையும் கொடுத்து இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஏற்றால் பாமகவுக்கு லாபம். அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம் என கேட்டார். அதற்கு அமைச்சர்கள், ராமதாசின் கோரிக்கையை ஏற்பதை விட அவர்களை கழட்டி விடுவதே நல்லது என தெரிவித்தனர். ஆனாலும் பாமகவை வைத்திருந்தால்தான் கூட்டணி வலிமையாகத் தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கணக்குகளை கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோரை 30-ந்தேதி தைலாபுரத்திற்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி.

.அந்த சந்திப்பில், தமிழகத்தில் 24 சதவீதமும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 75 சதவீதமும் வன்னியர்கள் இருக்கும் நிலையில், நாங்கள் தனி இட ஒதுக்கீடு கேட்பது எப்படி தவறாகும்? தனி இடஒதுக்கீடு கொடுக்க உடனடி சாத்தியமில்லை என இப்போது சொல்றீங்க. அப்படின்னா உள் இட ஒதுக்கீட்டில் அதிக பட்ச சதவீதத்தை ஒதுக்கலாமே? அதாவது, 16 சதவீதம் தருவது சரியானது. இதைக்கூட செய்யலைன்னா எப்படி? இது சாதி பிரச்சனை இல்லை. சமூகப் பிரச்சனை என சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.

இதனை ஆமோதித்துள்ள அமைச்சர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதி தரு கிறோம். அதேபோல, 25 சீட்டுகள் வரை கொடுக் கிறோம். இது குறித்துப்பேச ஒரு குழுவை அமையுங்கள். இரு தரப்பும் பேசி சுமுகமாக இறுதி செய்வோம் என சொல்ல அதனை ராமதாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் திருப்தியுடன் சென்னைக்கு திரும்பியுள்ளனர் அமைச்சர்கள். இரு தரப்பும் சென்னையில் பேசுவதற்காக பிப்ரவரி 3-ந்தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சுமுகமான தீர்வு காணப்படும். அதேபோல, பாஜகவை 20 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள வைக்க கடைசி கட்ட முயற்சி களை எடப்பாடியின் டெல்லி லாபிகள் எடுத்து வருகின்றன. பாமகவை இறுதி செய்து விட்டால் மற்றவை எல்லாமே ஈசிதான்'' என்கிறார்கள்.

அதேசமயம், நேரடி அரசியலில் இல்லாத தனது நெருக்கமான நண்பர் ஒருவரை 28-ந்தேதி தோட்டத்துக்கு அனுப்பியிருந்தார் எடப்பாடி. அந்த சந்திப்பில், இட ஒதுக்கீடு அல்லாத மற்ற விசயங்கள் பேசி முடிக்கப்பட்டதையடுத்தே அமைச்சர்களை அனுப்பி வைத்தார் எடப்பாடி என்கிற தகவலும் அதி.மு.க.வில் சிறகடிக்கிறது.

இந்த நிலையில் 31-ந்தேதி கூடிய பாமக நிர்வாகக் குழுவில் அமைச்சர்கள் தன்னை சந்தித்துப்பேசிய விபரங்களை பகிர்ந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், இட ஒதுக்கீடு குறித்து பேச அரசு தரப்பில் அழைத்துள்ளனர். 3-ந்தேதி நடக்கும் அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். அதன் பிறகு இறுதி முடிவெடுப்போம் என சொல்லியுள்ளார்.

இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தைன்னா இழுபறி இருக்கத்தான் செய்யும். அதை புரிந்து கொள்ளாமல் பிரேமலதாவும் அவரது மகனும் எடப்பாடியின் தலைமையை விமர்சிப்பதை அவர் ரசிக்கவில்லை. இது குறித்து அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி, ""விஜயகாந்த் ஆரோக்கியமாக அரசியல் செய்த போது தேமுதிகவுக்கு இருந்த செல்வாக்கு அவர்களுக்கு இப்போது இல்லைங்கிற எதார்த்தத்தை அந்தம்மா (பிரேமலதா) புரிந்து கொள்ளாமல் பேசுகிறது'' என கமெண்ட் பண்ணியிருக்கிறார்.

பல்வேறு கணக்குகள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என கூட்டணி கட்சிகள் ரவுண்ட் கட்டுவதால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கின்றன தி.மு.க., அதி.மு.க. தலைமைகள்.

______________

எவ்வித தொடர்புமில்லை!

"போஸ்டிங் ரேட்! சீரழியும் உயர்கல்வித்துறை' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் குறித்த செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதில் கோபிநாத் என்பவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து அவரது மறுப்புக் கருத்துகளையும் சேர்த்தே வெளியிட்டிருந்தோம். கோபிநாத் அவர்களின் மனைவி காரைக்குடி அழகப்பா கல்லூரி பேராசிரியராகவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ள நிலையில், தனக்கும் தனது மனைவி பணியாற்றும் துறைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை மீண்டும் தனது வழக்கறிஞர்மூலம் தெரிவித்திருக்கிறார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ள கோபிநாத் தன்னைப் பற்றி வந்துள்ள செய்திகளை முழுமையாக மறுக்கிறார். நக்கீரன் வெளியிட்ட செய்தியில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(-ஆர்)