சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை குறிவைத்து, நூதன முறையில் நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பள்ளிப்படிப்பைக்கூட முடித்திடாத பரோட்டா மாஸ்டர் ஒருவர், அதிக வட்டி தருவதாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 3 கோடி ரூபாய் வரை சுருட்டியது சேலம் பெரிய கொல்லப்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த முனியம்மாள் கொடுத்த புகாரில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்கில் முதல் குற்றவாளியான கண்ணன், எட்டாம் வகுப்பைக்கூட தாண்டாதவர். மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த இவர், தற்போது சேலத்தில் செட்டிலாகிவிட்டார். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி நிதி மோசடியில் ஈடுபடும் பாலபாடத்தை இவருக்குக் கற்றுக்கொடுத்ததும், இன்னொரு பகாசூர மோசடிப் பேர்வழியான சிவக்குமார்தான். வின்ஸ்டார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்துவந்த கண்ணன், குருவின் வழியிலேயே கடந்த 2016-ஆம் ஆண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், "திருமலை டிரேடர்ஸ் குரூப் ஆப் கம்பெனீஸ்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு கண்ணன் நிர்வாக இயக்குநர். இரண்டாவது குற்றவாளியான ஜான்சன், பொதுமேலாளர்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்தான் இந்த கும்பலின் முதல் இலக்கு. இதற்காகவே அவர்களிடம் டெலிபோனில் குழைந்து குழைந்து பேச முப்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை பணியிலமர்த்தியுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு திரட்டிக் கொடுத்தால் 5000 ரூபாய் கமிஷன். லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பத்தாவது மாதத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயாக பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துள்ளனர். பெற்றுக்கொள்ளும் தொகைக்கு வெற்றுக்காசோலைகள் மற்றும் ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அதில் கண்ணன் கையெழுத்திட்ட ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளார்.
பத்து மாதத்தில் முதலீட்டு தொகையை எப்படி ஒன்றரை மடங்காக திருப்பிக் கொடுக்கமுடியும் என விசாரித்தோம். கோரிமேடு, கருப்பூர், பேளூர் ஆகிய இடங்களில் ஆடு, மாடு, கோழிப்பண்ணைகள் வைத்திருப்பதாகவும், காமலாபுரம், ஓமலூர் பகுதிகளில் வீட்டுமனைகளில் முதலீடு செய்திருப்பதாகவும், கணிசமான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தைக் கொடுத்து வருவதாக பலரையும் நம்ப வைத்துள்ளனர் கண்ணனும், ஜான்சனும். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட மூன்று இடத்திலும் பெயரளவுக்கு நாட்டு மாடு, ஆட்டுப்பண்ணைகள் வைத்துவிட்டு, ஒரே மாதத்தில் அவற்றை காலிசெய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நாம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த சிலரிடம் நேரில் பேசினோம். சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த பெஞ்சமின், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர், ""எனக்குத் தெரிந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பலர், கண்ணன் நடத்திவந்த திருமலை டிரேடர்ஸ் நிறுவனத்தில் முதலீடுசெய்து, அதன்மூலம் லாபமும் அடைந்திருந்தனர். அதை நம்பி நானும் இந்த நிறுவனத்தில் 2 லட்சம் முதலீடு செய்தேன். என் மகன் ஜீசஸ் ராஜன் பலரிடம் கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடகுவைத்தும் 15 லட்சம் முதலீடு செய்தார். பேரனும் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார்.
திடீரென்று பணத்தை தராமல் கண்ணன் இழுத்தடித்து வருகிறார். ஒவ்வொரு முறை நாங்கள் கேட்கும்போதும், ஏதாவது ஒரு தேதியைக் குறிப்பிட்டு வாய்தா கேட்பாரே தவிர பணத்தைத் தந்ததில்லை. இதனால் நாங்கள் பணத்தைத் தொலைத்தது மட்டுமின்றி, குடும்பத்தின் நிம்மதியையும் தொலைத்துவிட்டோம்,'' என்று புலம்பினார்.
திருமலைகிரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிவில் சப்ளைஸ் துறை ஊழியர், தனக்குக் கிடைத்த ஓய்வுக்கால பணப்பலன்கள், உறவினர்களிடம் பெற்ற தொகை என மொத்தமாக 41 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இன்னும் அவருக்கு சல்லிக்காசுகூட கிடைத்தபாடில்லை என்கிறார்கள் சக முதலீட்டாளர்கள். கருப்பூர் ராஜன் என்பவர் 3 லட்சம், ஆத்துக்காடு ஜெயராமன் என்பவர் 2 லட்சம் ரூபாய், கோரிமேடு சம்பூர்ணம் 15 லட்சம் ரூபாய் என இந்த பட்டியல் நீள்கிறது.
சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஸிடம் கேட்டபோது, ""கண்ணன், பரோட்டா மாஸ்டராக வேலை செய்துவந்திருக்கிறார். அந்த அனுபவத்தில் திருமலை ஹோட்டல் என்ற பெயரில் சின்னதாக ஒரு உணவகம் நடத்திவந்தார். பின்னர் நிதிநிறுவனம் தொடங்கி, அதிக வட்டி கொடுப்பதாகக்கூறி முதலீடுகளை திரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் பத்து மாதங்களில் முதலீட்டு தொகையைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகமாக தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அதிக முதலீடுகளை திரட்டுவதற்காக 100 நாள்களில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி, பணத்தை திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. கண்ணன், ஜான்சன் ஆகியோர் மீது இதுவரை 15 பேர் புகாரளித்துள்ளனர். இருவரும் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கலாம் எனத் தெரிகிறது'' என்றார்.
நிதி நிறுவனம் மூலம் தமிழர்களை ஏமாற்றுவது என்பது மரபணுக்களிலேயே இருக்கும்போல.…
-இளையராஜா