"ஹலோ தலைவரே, நாடாளு மன்றத்தோட நடப்பு குளிர்கால கூட்டத் தொடர்ல பரபரப்புக்கு பஞ்சமிருக்காது போலிருக்கே.''”

Advertisment

“"ஆமாம்பா... நாட்டோட தலை யெழுத்து நிர்ணயமாகிற இடமல்லவா, எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் வெச் சிருக்குன்னு சொல்லுப்பா?''”

Advertisment

“"ஆமாங்க தலைவரே... டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியிருக்கிற இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதால் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்காங்க.  குறிப்பா, எஸ்.ஐ.ஆர். விவகாரம், வாக்குத் திருட்டு, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீட்டில் வஞ்சனை, தமிழகத் திட்டங்களைப் புறக்கணித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி பார்லி மெண்டில் போர்க்குரல் எழுப்பப் போறாங்க. எதிர்க்கட்சிகள் என்னென்ன பிரச்சினைகளை எழுப்பும்னு உளவுத்துறை மூலமா அறிந்துள்ள பிரதமர் மோடி, இதற்கெல்லாம் தகுந்த விளக்கம் அளிக்க உங்களை தயார்படுத்திக்கோங்கன்னு  பார்லிமெண்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளால் இந்த கூட்டத் தொடரில் ரகளைக்கு பஞ்சமிருக்காது. இதனை உணர்ந்த அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தாங்க என அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி வேண்டுகோள் வைத்துள்ளார்.''”

"அப்ப இந்த கூட்டத்தொடர்ல பிரதமர், முதல்வர், அமைச்சர்களை குறிவைத்து கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க. ஆர்வம் காட்டும்தானே?''”

Advertisment

“"நிச்சயமா! கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள்மீது கடுமை யான குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தொடரில் எழுப்புவார் என பா.ஜ.க. தரப்பில் சொல்றாங்க. தீவிரமான குற்றச்சாட்டுகளில் பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய -மாநில அமைச்சர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டாலோ அல்லது 30 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவிநீக்கம் செய் வதற்கான சட்ட மசோதாவை கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்தார் அமித்ஷா. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பார்லிமெண்டில் ரகளையிலும் ஈடுபட்டனர். இம்மசோதாவை பார்லிமெண்ட் கூட்டுக்குழு அமைத்து விவாதிக்க வேண்டும் என்றும் குரலெழுந்தது.  இதனையடுத்து, இந்த மசோதா மீது விரிவான ஆய்வு நடத்த பார்லிமெண்ட் கூட்டுக் குழு அமைக்கப்படும் என அறிவித்தார் அமித்ஷா. கூட்டுக் குழுவில் உங்கள் கட்சியிலிருந்து யாரை உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்கிறீர்கள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை. இதனால் டென்ஷனான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இல்லாம லே பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா தலைமையில் அதிரடியாகக் கூட்டுக் குழுவை அமைத்து விட்டது. இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் உள்பட 31 எம்.பி.க்கள் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டிருக்காங்க. இந்த கூட்டுக் குழு விரைவில் கூடி விவாதித்து, சட்ட மசோதாவுக்கு ஓ.கே. சொல்லும். அதன் பரிந்துரைகளை ஏற்று இந்த கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இந்த மசோதா நிறைவேறினால், தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்து தமிழகத்தில் தான் முதலில் பயன்படுத்தும் என்கிறார்கள் மசோதாவின் ஆபத்தை உணர்ந்துள்ள வழக்கறிஞர்கள்.''” 

"முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் (29ஆம் தேதி) நடந்திருக்கே என்ன விஷயம்?''”

rang2

“"அதுவா தலைவரே, மாநில உரிமை களை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சித்தல், ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் போக்கு ஆகியவற்றில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்காங்க. மற்ற தீர்மானங்கள், மத்திய அரசை வலியுறுத்திப் போடப்பட் டுள்ளன. தி.மு.க. எம்.பி.க்களிடம் எஸ்.ஐ.ஆர். பணிகளில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்தும், அந்தப் பணிகள் எந்தளவுக்கு நடந்துமுடிந்துள்ளது என்பதையும் கேட்டறிந்தார். மேலும், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை எம்.பி.க்களிடமிருந்து பெறப்படும் அறிக்கை பற்றியும் விவாதித்த ஸ்டாலின், டிசம்பர் 1ஆம் தேதி கூடும் நாடளுமன்றக் கூட்டத் தொடரில் தமிழகத்தை வஞ்சித்துவரும் பா.ஜ.க. அரசை அம்பலப்படுத்தவேண்டும், தமிழக அரசின் சட்ட மசோ தாக்களுக்கு ஜனாதிபதி விரைந்து ஒப்புதலளிக்கவேண்டும், மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புத லளிக்க கால நிர்ணயம் செய்யவேண்டும்  உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது அவசியம். எந்த சூழலிலும் சமரசம் ஆகக் கூடாது என்றும் அட்வைஸ் பண்ணியிருக்கிறாராம்.''”

"எஸ்.ஐ.ஆரில், தமிழகத்துக்கு பெரிய ஆபத்து இருப் பதா சொல்றாங்களே உனக்கு ஏதும் விவரம் தெரியுமா?''”

"பி.எல்.ஓ.க்கள் முறையீட்டை ஏற்று டிசம்பர் 11-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலையும், பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியலையும் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. ஆனால், இந்த பட்டியல்கள் ரிலீஸாகும் போது தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப் பட்டிருப்பார்கள். அந்தளவுக்கு குளறுபடிகள் நடந்துள் ளன என்று அதிர்ச்சி தருகிறார்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தினர். பீகாரில் 67 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் அது தமிழகத்துக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி யெழுந்துள்ளது.''”

“"தேர்தல் ஆணையத்தின் முடிவால் எரிச்சலிலிருக்கும் டாக்டர் ராமதாஸ் நீதிமன்றப் படியேறப் போகிறாராமே?''”

rang4

"பா.ம.க. தலைவராக அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி ராமதாஸ் இருப்பார் என்று  தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ஏக குஷியில் இருக்கிறது அன்புமணி தரப்பு. இந்த நிலையில், இதனையெதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர டாக்டர் ராமதாஸ் முடி வெடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் வரை சென்று உண்மை யான பா.ம.க. என் தலைமையில் இருப்பதுதான் என்பதை நிரூபிப்பேன் என சூளுரை செய்திருக்கிறார். தேர்தல் ஆணையம் விலைபோய்விட்டது; நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் ராமதாஸ்.''”

"சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தின் பெயரில் ஊழல் நடந்திருக்கிறதாமே?''”

"சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மஸ்டர்ரோல் மெகா ஊழல் நடந்திருப்பதை கண்டறிந்துள்ளார் கராத்தே தியாகராஜன். இதுகுறித்து கார்ப்பரேசன் கமிஷனர் குமரகுருபரனிடம் நேரில் புகாரளித்தார். அம்பத்தூர் மண்டலத்தில் 1,400 தூய்மைப் பணி யாளர்கள் பணியாற்றுவதாக கணக்கு காட்டப் பட்டு சம்பளப் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 1,000 பேர் மட்டுமே அம்பத்தூர் மண்டலத்தில் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 400 பேர் வெறுமனே கணக்கு காட்டப்பட்டு, அவர்களது சம்பளப் பணம் சுருட்டப்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள் ளார் கராத்தே தியாகராஜன். இதனை விசாரித்த கமிஷனர் குமரகுருபரன், அம்பத்தூர் -வளசரவாக் கம் -புழுதிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 11 இன்ஜினியர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்தார். இந்த மஸ்டர் ஊழலில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை அறிய மத்திய மண்டல டெபுடி கமிஷனர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, 7 நாட்களில் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.''”

"“புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனைத் தேடிவரும் புதுச்சேரி அரசியல்வாதிகளோட எண்ணிக்கை அதிகமாவுதாமே''…”

rang1

"உங்க காதுக்கும் வந்துடுச்சா தலைவரே, புதுக்கோட்டை நகருக்குள் உள்ள ஜட்ஜ் சுவாமிகள் மடத்திலுள்ள புவனேஸ்வரி அம்மனை வழிபட்டால் அரச பதவிகள் கிடைக்கும் என்பது புதுச்சேரி அரசியல்வாதிகளின் நம்பிக்கை. புதுச்சேரி முதலமைச்சராக இருந்த ரெங்கசாமி பலமுறை இந்த கோயிலுக்கு தனியாக பைக்கில் வந்து வழிபட்டுப் போயிருக்கிறார். 2016-ல் ரெங்கசாமி இந்த ஆலயத்தை 36 முறை சுற்றிச்சென்றுள்ளதை அறிந்த நாராயணசாமி, பின்னாலேயே இந்த கோயிலுக்கு வந்து 56 முறை கோயிலைச் சுற்றி வழிபட்டுச்சென்றார். முதலமைச்சரானதும் மறுபடியும் வந்து நன்றி காணிக்கை செலுத்தினார். புவனேஸ்வரி அம்மனை வழிபட்டுச் சென்ற நமச்சிவாயத் திற்கும் பொதுப்பணித்துறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை வழிபட்டால் ஆட்சிக்கு வரலாம்கிற தகவலறிந்த புஸ்ஸி ஆனந்த் கடந்த சில வாரங் களுக்குமுன் கோயில் வந்திருக்கிறார். அவர் வந்த சமயம் கோயில் நடை சாத்தப்பட்டுள்ள தகவ லறிந்து கோயிலுக்கே வராமல் சென்றுவிட்டார். அம்மன் தரிசனம் கிடைக்காமல் போய்விட்டதை ஒரு அபசகுனமாகக் கருதும் புஸ்ஸி விரைவில் புதுக்கோட்டை போகணும் என்று தன் சகாக் களிடம் சொல்லிவருகிறாராம்.''

"செங்கோட்டையன் முயற்சிகளுக்கு எதிராக எடப்பாடி தடுப்பாட்டத்தைத் தொடங்கியிருக் கிறாராமே?''”

"ஆமாம், செங்கோட்டையனின் ஏரியாவான கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர்  30-ஆம் தேதி மிகப்பெரிய விழாவைக் கூட்டிய எடப்பாடி, "‘எம்.எல்.ஏ. ஆவதற்கு மக்களிடம் கேட்ட செங்கோட்டையன், ராஜினாமா செய்யும் முன் உங்களிடம் கேட்டாரா?'’என லாஜிக்காக கேள்வியெழுப்பியுள்ளார். செங்கோட்டையனைத் தொடர்ந்து இன்னும் பலர் அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்கு வெளியேறிச் செல்ல காத்திருக் கிறார்கள். அ.தி.மு.க.விலிருந்து வெளியேறிச் செல்பவர்களைத் தடுப்பதற்கு அனைவரிடமும் பேசி, அந்த முயற்சிகளைத் தடுத்துவருகிறார் எடப்பாடி. இதற்கெல்லாம் அசராத செங்கோட் டையனோ, எல்லோரிடமும் போன் போட்டு பேசி, "உங்களுக்கு எல்லா வாய்ப்புகளையும் பேசி வாங்கித் தருகிறேன்'’என்கிறாராம். பலர் பணத்தை எதிர்பார்த்து செங்கோட்டைய னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் செங்கோட்டையனும் ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து டீல் பேசிக்கொண்டி ருக்கிறார்களாம்.''”

"தென்மாவட்டத்திலுள்ள அந்த முன்னாள் அமைச்சர் கட்சி மாறப்போறதா பேச்சு அடிபடுதே?''”

rang3

"என் காதிலயும் அந்தத் தகவல் விழுந்துச்சு தலைவரே, ஆனா அதை பூடகமா சொல்றேன் கேளுங்க. அ.தி.மு.க. ஆட்சியில தொடர்ந்து ஒரே துறையில் 10 வருடங்களா அமைச்சராக பணி செய்தவர். அணைகள்ல நீர் ஆவியாதலை தடுப்பது எப்படி..?ன்னு அறிவுப்பூர்வமா சொன்ன யோசனையால கவனிக்கப்பட்டவர். சசிகலா விசுவாசியானபோதும் தனக்கான அடையாளம் வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின்கீழ் அ.தி.மு.க.வில் இயங்கிவருபவர். தற்பொழுதும் கட்சியின் மா.செ.வா இருந்தாலும், அவ ரால் கட்சிக்குள் எந்த ஒரு முடிவையும் எடுக்கமுடியாத சூழ்நிலை. குறிப்பாக, அதே மாவட்டத்தின் புறநகர் மா.செ. இவருடைய மாவட்டத்திற்குள் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்துவதும், கோலோச்சுவதும் அவரை அப்செட்டாக்கியிருக்கிறது. இவர் அப்செட்டாக இருக்கும் விவரம் தெரிந்து செங்கோட்டையன் சூசகமாக வலைவீச, அதனை நாசூக்காக மறுத்துவிட்டு தி.மு.க. தரப்பிலிருந்து நல்ல பதில் வருமா என காத்திருக்கிறாராம்.''”

"வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கினால் கட்சி தாவும் மனநிலையில் இருக்கின்றனராமே அ.தி.மு.க.வினர்?''

"அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கூட்டணி அமைந்தாலும் இரு கட்சிகளிடமும் இருக்கும் தொண்டர்களிடம் இணக்கமான போக்கு நிலவவில்லை. விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருந்துவரும் நிலையில் அந்தத் தொகுதியில் பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவர் கோபால்சாமி போட்டியிட தற்போது வேலை செய்துவருகிறார். அதேபோல் மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்புள்ள வடக்கு தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவதற்கான வேலையை தற்போது துவக்கியுள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியிலும் பா.ஜ.க. மாநில நிர்வாகி பொன் பாலகணபதி தேர்தல் வேலைகளை துவக்கியுள்ளார். பா.ஜ.க.வினரின் இத்தகைய செயலால் அதிர்ச்சியான அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. தலைமை தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் கட்சியிலிருந்து விலகி தி.மு.க., த.வெ.க.விற்கு செல்லும் மூடில் இருக்காங்களாம்.''”

"ராமநாதபுரம் அ.தி.மு.க. மா.செ. சம்பந்தமா சலசலப்பு எழுந்திருக்குதே… என்ன விவரம்?''”

"தென்மாவட்டங்களில் இருக்கும் அனைத்து மாவட்டங்களையும் நிர்வாகரீதியாக இரண்டாகப் பிரித்துள்ளது அ.தி.மு.க. ஆனால் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மட்டும் தற்போது வரை பிரிக்கப்படாமல் உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் நிர்வாகரீதியாக இரண்டாகப் பிரிக்க இயலாமைக்கு முக்கிய காரணம் ஆர்.பி.உதயகுமார்தான் என்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மா.செ. முனியசாமி, ஆர்.பி.உதயகுமாரின் உறவினர், செந்தில்நாதன் அவரது நெருங்கிய ஆதரவாளர் என்ற காரணம் மட்டுமே. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை நிர் வாகரீதியாக அ.தி.மு.க. தலைமை பிரிக்காவிட்டால் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் என்கின்றனர் மாவட்ட அ.தி.மு.க.வினர்.''”

"தி.மு.க. மா.செ. ஒருவருக்கும், தொண்டனுக் கும் இடையே நடந்த ஆடியோ உரையாடல் ஒன்று கோவை மாவட்ட தி.மு.க.வையே கலகலக்க வைத்துள்ளதே...''

"ஆமாங்க தலைவரே.. கோவை மாவட்டத் தினை கட்சி ரீதியாக மாநகரம், வடக்கு மற்றும் தெற்கு என பிரித்துள்ளது தி.மு.க. தலைமை. இதில் சமீபத்தில் மாநகர மா.செ.மாற்றப்பட்டார். ஏனைய மா.செ-க்களுக்கு என்ன கதி.? என்ற நிலையில் தானாக வாயைக் கொடுத்து சிக்கியிருக்கின்றார் கோவை வடக்கு மா.செ.வான தொண்டாமுத்தூர் ரவி. 90வது வார்டை சேர்ந்த செந்திலோ, "அ.தி.மு.க. விலிருந்து நேற்று வந்த தகுதியே இல்லாதவருக்கு பகுதி கழக செயலாளர் பதவி கொடுத்திருக்கீங்க.. எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாங்க." என மா.செ-விடம் பேச, அவரோ, "அதிமுகவில் இருந்து வந்தவர்தானே செந்தில் பாலாஜி.? எனவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசிய ஆடியோ ஒன்று மாவட்டத்தில் வெளியாக, "7 பஞ்சாயத்துக்களை மட்டும் கொண்ட தொண்டாமுத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப் பாளராக இருந்தவருக்கு மா.செ.பொறுப்பு வரக் காரணமாக இருந்தவர் செந்தில்பாலாஜி. அவரை விமர்சிக்கவும் வேலுமணிக்கு காப்பத்துவதற்காகவும் தான் மா.செ.பொறுப்பா.?" என தொண்டாமுத்தூர் ரவிக்கு எதிராக கொதித்து வருகின்றனர் கழக உடன்பிறப்புக்கள். மேலும், வடக்கு மாவட்டத் தினைப் பொறுத்தவரை பணம் இருந்தால் பதவி கிடைக்கும். பணம் கொடுத்துக் கொண்டே இருந்தால் பதவி நீடிக்கும். அ.தி.மு.க.விற்காக மறை முகமாக கடுமையாக உழைக்கிறார் தொண்டா முத்தூர் ரவி என்பது தான் நிதர்சனமான உண்மை. இப்படி இருந்தால் எப்படி தி.மு.க. வெல்லும்.?" என்ற கேள்விகளை புகாராக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர் கழக உடன்பிறப்புக்கள்.''

"நானும் முக்கியமான தகவல் ஒண்ணு சொல்றேன்... தன்னுடைய தொகுதியிலுள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்து சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில், "தேவர் திருமகன் அம்மா அவர்களின் சகோதரி வழி உறவுமுறையே நான்' என்றார் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வின் மா.செ.வும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம். இந்த நிலையில், தேவரின் குடும்ப உறவுகளை விவரித்து, அதில் காதர்பாட்ஷாவின் பாட்டி மீராக்காள் எப்படி தேவரின் குடும்பத் துக்கு உறவாக முடியும். பொய்யான தகவல்களை தவறான முறையில் அரசியல் சுயலாபத்திற்கு சொல்லி வருகின்றார் என உண்மையை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி காத்திருக் கின்றனர் பசும்பொன் தேவரின் நேரடி வாரிசுகள்.''”


__________________
இறுதிச்சுற்று!

மூவர் குழு அதிகாரி கரூர் வருகை!

கரூர் த.வெ.க. பிரச்சார உயிர்ப்பலி விவ காரத்தில், சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக் கும் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் ஒருவரான சுமித் ஷரன் ஐ.பி.எஸ்., டிசம்பர் 1-ஆம் தேதி கரூர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்துள் ளார். கரூரில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரி கள், சம்பவத்தில் இறந்தவர்கள், காயமடைந் தவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், போலீசார், த.வெ.க. மாநில நிர்வாகிகள், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக உயிரிழந்தவர்களில் 12 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது தொடர்பாகவும் இறந்தவர்கள் தொடர்பாகவும் அவர்கள் கூறிய கருத்துகளைக் கேட்டு பதிவு செய்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்நிலையில் கரூர் வந்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சுமித் சரண், சி.பிஐ. இதுவரை விசாரணை செய்த தரவுகளை தன் குழுவினருடன் இணைந்து ஆய்வுசெய்ய உள்ளாராம்.                       

-மகேஷ்