நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், தமிழகத்திலுள்ள மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைத்தும் தங்களுடைய தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் இம்மாதத்தில் தங்களுடைய மாபெரும் மாநாடு களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

Advertisment

தி.மு.க. தரப்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவுபெற்று, தற்போதுவரை கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

dd

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, மாநிலம் முழுக்க கழக மாவட்டங்களை 5 மண்டலங்களாகப் பிரித்து, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Advertisment

டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் தெற்கு, திருச்சிராப்பள்ளி தெற்கு, திருச்சிராப்பள்ளி மத்தி, திருச்சிராப்பள்ளி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய 15 கழக மாவட்டங்களில் மாவட்ட கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பொறுப் பாளர்கள் 13,500 பேரை தேர்வுசெய்துள்ளனர்.

வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி (புதன்கிழமை) திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். அதற்கான ஆயத்தப்பணிகளை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேரில் பார்வை யிட்டு ஆய்வுசெய்தார்.ee

அதேசமயம் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தொண்டர்களின் ஆதரவோடு மதுரை பழங்காநத்தம் பகுதியில் வருகின்ற 29-ஆம் தேதி நடத்த உள்ள மாநாட் டில் பல லட்சம் தொண்டர்களைக் கூட்ட திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், டெல்டா மாவட் டங்களில் இருந்தும் அதிகமான தொண்டர் களை அழைத்துவரும் பணியினை திருச்சி முன் னாள் எம்.பி. குமார் ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

Advertisment

இவர்களுக்குப் போட்டியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னுடைய நடை பயணத்தைத் தொடங்கவுள்ளார். ராமநாத புரத்தில் வரும் 28-ஆம் தேதி அமித்ஷா முன்னிலையில் பாதயாத்திரையைத் தொடங் கும் அண்ணாமலை, அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

மதுரை மாவட்டத்தில், மதுரையில் 7-ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார். மதுரையில் மாபெரும் மக்கள் திரளைக் கூட்ட பா.ஜ.க. முடிவுசெய்துள்ளது.

அதேபோல காங்கிரஸும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தி.மு.க.விடம், கடந்த தேர்தலைவிட ஒரு தொகுதியாவது அதிகமாகக்கோரிப் பெற மாநில தலைமை திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில், தனது ஆதரவாளர்களுடன் தனிப்பயணம் செய்துவரும் ஓ.பி.எஸ்., தனது மகன் ஓ.பி.ஆரின் வெற்றி செல்லாதென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அப்செட்டில் இருந்தார். உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்ப்பு வாங்குவதற்குள் தற்போதைய மத்திய அரசின் காலம் நிறைவுக்கு வந்துவிடு மென்பதால், அதை மறந்துவிட்டு திருப்பூர் மாநாட்டுப் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறார்.

அதேபோல ஜெ., சசியின் நம்பகமான உதவியாளராகத் திகழ்ந்த பூங்குன்றனின் முயற்சியில் தினகரன், ஓ.பி.எஸ்., சசிகலா ஒருங்கிணைப்பு நடைபெறுமென்றும், அது எடப்பாடித் தரப்புக்கு வலுவான சவாலைத் தருமென்றும் தினகரன் அணியினர் நம்பிக்கையுடன் சொல்லிவருகிறார்கள்.

எனவே வரும் ஜனவரி மாதம் வரை மாநாடு, பொதுக்கூட்டம், நடைபயணம் என பாராளுமன்ற தேர்தல் ஆயத்தத்தால் தமிழகம் திக்குமுக்காடப் போகிறது. கூடவே இதற்கெல்லாம் தொண்டர்கள் கூட்டம் தேவையென்பதால் கட்சிக் கூட்டங்களை எதிர்பார்க்கும் தொண்டர்களின் காட்டில் அடைமழை பெய்யப்போகிறது.