அயனாவரம் சிறுமி பாலியல் புகாரில் கைதுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சிறுமியின் தாய் தந்த புகார் உள்பட அனைத்தையும் பல கோணங்களில் கவனிக்க வேண்டியுள்ளது என திடுக்கிட வைக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
அயனாவரம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்த முதல் குற்றவாளி ரவிக்குமார், ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு… ஐந்து வயது குழந்தையை வேட்டையாடிய மிருகம்தான்’ என்பதை நக்கீரன் முதன்முதலில் அம்பலப்படுத்தியதால்… அதுகுறித்தும் தோண்ட ஆரம்பித்திருக்கிறது காவல்துறை. நாம் விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ""சிறுமியின் குடும்பம் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்து பரபரப்பானதால்… உடனடியாக எஃப்.ஐ.ஆர். போட்டு அதிரடியாக கைதுசெய்யவேண்டிய சூழல். இன்னும் சொல்லப்போனால், அயனாவரம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டரும் விசாரணை அதிகாரியுமான விஜய சந்திரிகாவேகூட முழுமையான விசாரணையில் ஈடுபடவில்லை. சிறுமியின் பெற்றோரும் அக்காவும் கொடுக்கும் வாக்குமூலங்களை வைத்தே விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
புரசைவாக்கத்திலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு 10 சதவீதம் காதுகேட்கும் திறன் குறைவுதானே தவிர, மாற்றுத்திறனாளியோ மனவளர்ச்சி குன்றியவரோ கிடையாது. ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேர் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக சொல்வதையும் முறையாக விசாரிக்க இருக்கிறோம். அதுவும், ‘ரவிக்குமார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும்போது இரண்டு பெல்டுகளால் கண்களையும் கழுத்தையும் கட்டிவிடுவான். போதை மருந்துகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறான்’ என்று புகாரில் தெரிவித்திருக்கிறார் சிறுமியின் தாய். போதை ஊசியோ, பவுடரோ பயன்படுத்தும் போது கண்விழிக்க குறைந்தபட்சம் அரை நாள்கூட ஆகலாம். அதுவரை சிறுமியின் தாய்க்குத் தெரியாமல் இருக்காது. எனவே போதை ஊசி பயன்படுத்தப்பட்டதா, என்ன வகை மருந்து என்பதையெல்லாம் போலீஸ் தனது கோணத்தில் விசாரிக்கும். புகாரில் உள்ள வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளாது'' என்கிறார்கள்.
நாம் இதுகுறித்து தமிழக அரசின் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""இதுபோன்று பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் சி.டபுள்யூ.சி. எனப்படும் குழந்தைகள் நலக்குழுமம். ஆனால், எங்களையே விசாரிக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள் சிறுமியின் பெற்றோர். 17 அக்யூஸ்டுகளின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதுபோன்ற நேரத்தில் புகாரின் அடிப்படையில் சிறுமி முரண்பட்டுவிட்டால் வழக்கே நிற்காமல் போய்விடும். அதனால், எங்களைப்போன்ற அரசு அமைப்பு… உண்மையை விசாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும். அந்த அடிப்படையில் சிறுமியின் வாக்குமூலம் இருந்தால்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
மேலும், சிறுமியிடம் நல்லா படிப்பீங்களாம்மா? விளையாடுவீங்களா? அப்பா சாக்லேட் வாங்கித் தருவாரா? ஐஸ்க்ரீம் வாங்கித் தருவாரா? என்று மிகவும் கேஷுவலாகத்தான் பேசினோம். அதற்குள், சிறுமியின் அப்பா ’"என்ன இப்படில்லாம் பேசுறீங்க? இப்படியே பேசினா அவ எதையாவது சொல்லுவா. பிரச்சனையாகிடும்' என்று அழைத்துச் சென்று காரில் உட்காரவைத்துவிட்டார். 40-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களை அழைத்துவந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார். இச்சிறுமி வளர்ப்புமகள் எனவும் தெரியவருகிறது. அதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்பார்ட்மெண்டிலுள்ள மொட்டைமாடி, தரைத்தளம், பப்ளிக் வாஷ் ரூம், ஜிம் என பல இடங்களுக்குச் சென்று சீரழித்ததாக குறிப்பிடுகிறார்கள். அந்த இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் கடந்த 6 மாதங்களாக பழுதாகியிருக்கிறது என்று சிறுமியின் அம்மா கூறுகிறார். சிறுமியின் கழுத்தில் கத்தியால் கீறியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. "அதற்கான "தடயங்களே இல்லை. நாங்க டெல்லியில் உள்ள சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்கள்' என்கிறார் அப்பா. "நாங்க பஞ்சாப்காரங்க' என்கிறார் அம்மா. சிறுமி பாலியல் ரீதியாக கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பது உண்மை. அது தொடர்பான மற்ற உண்மைகளையும் வெளிப்படுத்த பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். செக்யூரிட்டிகள், ப்ளம்பர்கள், கார்பெண்டர்கள் என வேலை ஆட்களைத்தாண்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இருந்திருக்கிறது. இதை விசாரிக்க விடாமல் தடுக்கிறது சிறுமியின் குடும்பம். அச்சிறுமியிடம் பொறுமையாக அமர்ந்து பேசினால் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்'' என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை மீண்டும் முழு உடல் மற்றும் மனரீதியான பரிசோதனையின் போதும் எந்தக் காயங்களும் இல்லை. டி.என்.ஏ. பரிசோதனையில் உண்மை தெரிய வரும். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மிருகங்கள் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும் என்றால் உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
-மனோசௌந்தர்