சாதனை புரிந்த திருநங்கையரை அழைத்து விருது கொடுத்துப் பாராட்டி, பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது கலைத்தாய் அறக்கட்டளை. நாகை மாவட்ட மங்கைநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அறக்கட்டளையின் விழா, மயிலாடுதுறையில் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட சாதனைத் திருநங்கையர் உற்சாகமான வாழ்த்துக்களுக்கு மத்தியில் பதக்கங்களைப் பெற்றனர்.
திருநங்கையரின் நாட்டுப்புற இசை, நடனத்துடன் தொடங்கிய விழா, கடைசிவரை விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. அறக்கட்டளையின் நிறுவனர் கிங் பைசல் தன் உரையில் ""பள்ளிப் பருவத்திலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். எங்கள் குழுவில் பெண் வேடமிடும் அத்தனை பேருமே திருநங்கைகள்தான். அவர்களும் மனிதர்கள்தான், சாதனையாளர்கள்தான் என்கிற சமூக சிந்தனையோடு இந்த விழா நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு தளங்களிலும் சாதனை படைத்து வரும் திருநங்கைகளை அழைத்துப் பாராட்டுவிழா நடத்துவதில் மகிழ்கிறோம்''’என்றார் உற்சாகமாக.
விருது பெற்றவர்களில் நாட்டியக் கலைஞர் ராஜகுமாரியோ ""திருநங்கைகள் என எங்களுக்கு அழகான பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தியவர் கலைஞர். எங்களுக்காக அவர் நலவாரியம் அமைத்துக் கொடுத்தார். அத னால் இன்று நாங்கள் சாதிக்கிறோம். திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வந்து வீதி வீதியாக நிற்பதற்கு காரணமானவர்கள் அவர்களின் பெற்றோர்தான். ஒரு குழந்தை ஊனமாக பிறந்தாலும், குருடாக பிறந்தாலும், வளர்ந்த பிறகு குடிகாரனாக இருந்தாலும், ரவுடியாக வளர்ந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும், விபச்சாரம் செய்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்கின்ற பெற் றோர், எந்தத் தவறும் செய்யாத எங்களை ஏன் உதாசீனப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்கள்? இந்த சமூகத்தின் மீது குறை சொல்வதைவிட பெற்றவர்களையே முதலில் குறை சொல்லவேண்டும்''’என்றார் அழுத்தமாக.
எம்.சி.ஏ. படித்து இன்று தொழி லதிபராக வலம் வரும் சாய்னாபானு, ""மனித சமூகத்தில் சாதிகள், மதங்கள் புரையோடிக் கிடக்கின்றன. ஆனால் எங்கள் திருநங்கையர்களிடம் சாதிகள் இல்லை. அப்படி இருந்தும் எங்களை இந்த சமூகம் இழிவாகவே பார்க்கிறது. யாரோ ஒருசில திருநங்கையர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த திருநங்கைகளை யும் கொச்சைப்படுத்துவது என்ன நியாயம்?
நான் பிறக்கும்பொழுதே எங்கள் அப்பா இறந்துட்டாரு, அதனால் நாங்கள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களை உறவினர்கள் அவ்வளவு அவமானப்படுத்தினார்கள். அதையும் தாண்டித்தான் சாதித்து வருகிறேன். இன்று நான் ஒரு ஓட்டலை உருவாக்கிப் பலருக்கும் வேலை கொடுத்து வருகிறேன். இளைய தலைமுறை திருநங்கையரை நான் படிக்கவைத்து வருகிறேன்''’’ என்றார் நெகிழ்ச்சியாய்.
திருநங்கையருக்காக மறுவாழ்வு மையம் நடத்திவரும் அசினாநாயக்கோ ""எந்த தவறும் செய்யாத திருநங்கைகள் வாழும் மாவட்டமாக எங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தை மாற்றிக் காட்டுவதில் முழு முயற்சியாக இருக் கிறோம். எங்கள் மறுவாழ்வு மையத்தின் மூலம் இளம் திருநங்கையரின் வளர்ச்சிக் காக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்திட மிருந்தும் சமூக அக்கறை உள்ளவர்களி டம் இருந்தும் அவர்களுக்கு வேண்டிய உதவியை இயன்றவரைப் பெற்றுக்கொடுக் கிறோம், வீட்டுமனைப் பட்டா வாங்கிக் கொடுப்பது, படிப்புக்கான செலவுகளை செய்வது, நலிவடைந்த திருநங்கைகளுக்கு தொழில் உதவி செய்துகொடுப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களில் ஆதரவற்ற பெண்களை தேடிச் சென்றும் ஆதரவு கொடுக்கிறோம். முதியவர்களுக்கும் உதவி செய்கிறோம்.
காதல் திருமணத் தில் கைவிடப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை இனம்கண்டு, அவர் களுக்கு வேண்டிய உதவி களைச் செய்து வரு கிறோம். பெண்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தைல மரக்காடுகளை வளர்க்கவும் உதவுகிறோம். திருநங்கைகளை காவல் துறை அதிகாரியாக மாற்றவும் உரிய தேர்வை எழுத வைத்து வெற்றி பெறவும் வைத்திருக் கிறோம். படித்த திரு நங்கைகளுக்கு மேல் படிப்பு படிக்கவும் சுய தொழில் செய்யவும் இயன்றதை செய்து வருகிறோம். நாங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் அல்ல, பெற்றோர்களால் புறக் கணிக்கப்பட்டவர்கள். அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண் டும். எங்களில் சிலர் கடைக்குக் கடை சென்று கையேந்திப் பிச்சை எடுப்பதையும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் முயற்சிக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்''’என்கிறார் கண்கள் விரிய ஆர்வமாக.
சாதனையின் உச்சத்திற்கே சென்ற திருநங்கையான நர்த்தகி நடராஜன் இன்று பாடப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். "என்மீது எல்லோரும் கல்லை வீசினார் கள், அதை நான் படிக்கற்களாக மாற்றிக்கொண் டேன்'’என்பார் அவர். இந்த வைர வரியை நடைமுறையாக்க தீவிரமாக வியர்வைத் துளிகளை விதைக்கத் தொடங்கிவிட்டார்கள் திருநங்கையர்.
-க.செல்வகுமார்