honor kill

மதமோதல்களும் ஆணவக்கொலைகளும்தான் இனி புதிய இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களாக இருக்கும்போலிருக்கிறது. தமிழகத்தில் சமீப காலங்களாக கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. புத்தாண்டுத் தொடக்கத்திலேயே பறிபோயுள்ள கடலூர் மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமனின் உயிர், சாதி ஆணவத்திற்கான பலியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisment

தனியார் சர்க்கரை ஆலையொன்றில் ஒப்பந்தத் தொழிலாளி சபாபதி. இவரது மூத்த மகன் பரந்தாமன். இளங்கலை வேதியியல் படித்துவிட்டு தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றிவந்த பரந்தாமன், வேலைவிஷயமாக ரயிலில் புனே செல்லும்போது சிவானி அறிமுகமாகியுள்ளார். மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள முத்தையம்பட்டி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ராமு என்பவரின் மகள்தான் சிவானி. புனேவில் குடியேறிவிட்ட சிவானி, பெற்றோருடன் ரயிலில் வந்தபோது பரந்தாமனின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

அறிமுகம் காதலாக மாறி வீட்டுக்குத் தெரியவர, சிவானியின் பெற்றோர் அவளைக் கண்டித்துள்ளனர். காதலைக் கைவிடமுடியாத சிவானி ஏப்ரல் மாதம் தமிழகத்துக்குவர, ஊத்துக்கோட்டை கோவிலில் திருமணம் செய்துகொண்டு சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்துள்ளனர்.

Advertisment

விஷயம் வீட்டுக்குத் தெரியவந்த நிலையில், தனது மகளை பரந்தாமன் கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், சிவானி பதினெட்டு வயது பூர்த்தியடையாதவரென்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு கொடுத்தார். இதையடுத்து காவல்துறை பரந்தாமனின் தந்தையையும், அவனது நண்பர்கள் செல்வம், கார்த்திக்கையும் கைதுசெய்து சிறையிலடைத்தது. மூவரையும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விஷயமறிந்த பரந்தாமன், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, "நாங்கள் இருவரும் மேஜர். விருப்பத்துடனே திருமணம் செய்துகொண்டோம்'’என்று கூறியுள்ளனர். இதனை ஆட்சேபித்த சிவானியின் தந்தையின் வக்கீல், "அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை' என பள்ளிக்கூட சான்றிதழை சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், சிவானி தான் படிக்காதவள், பள்ளிக்கூடமே செல்லாதவள் என கூறினார். ஆதார் அட்டையில் 18 வயதென குறிப்பிட்டிருப்பதைக் குறித்தும் நீதிமன்றம் கேள்வியெழுப்பி, சிவானியை காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டது. எனினும் சிவானி தரப்பினர் சிவானி 18 வயது அடைந்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவச் சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். இதனால் பரந்தாமன் போக்ஸோசட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் சிவானியைச் சமாதானப்படுத்தி பூனே அழைத்துச்சென்றுள்ளனர். 69 நாள் சிறைவாசத்துக்குப்பின் டிசம்பர் 29-ஆம் தேதி ஜாமீனில் வெளியே எடுக்கப்பட்ட பரந்தாமன் அதுமுதல் சிந்துபட்டி காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவந்தார்.

ஆனால் ஜனவரி 4-ஆம் தேதி காலை பூனே ராஜ்கோட் நகரிலுள்ள தனியார் விடுதியில் தூக்குமாட்டி இறந்துகிடந்ததாக தகவல்வர, பரந்தாமனது பெற்றோர் அதிர்ந்துபோயிருக்கின்றனர்.

"என் மகன் தூக்குப் போட்டுக்கொள்ளுமளவுக்கு கோழையில்லை. தூக்குப்போட்டவனோட கால் எப்படி தரையைத் தொடுறமாதிரி இருக்கும். அவர்கள்தான் என் மகனைக் கொலைசெய்துவிட்டனர்''’’ என கதறுகிறார். சிவானியின் அண்ணன் முத்து ஹோம் என்ற தனியார் விடுதியில் மதுரையைச் சேர்ந்த 15 பேர், பூனே ரவுடிகள் 6 பேர் சகிதமாகத் தங்கி பரந்தாமன் விடுதலையான பிறகு அவனைக் கண்காணித்து வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பரந்தாமன் விவகாரம் குறித்து, ""தொடர்ந்து ஆணவக்கொலைகள் honor killநடைபெறும்போதும் இந்த அரசு கண்டுகொள்ளாமலே இருக்கிறது. திருமணத்தைப் பதிவுசெய்த சார்பதிவாளருக்கோ காதல் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கோ, ஆட்கொணர்வு வழக்கு நடைபெற்ற மதுரை நீதிமன்ற நீதிபதிகளுக்கோ பெண்ணின் வயதுகுறித்த சந்தேகம் எழவில்லை. பெண் 18 வயதுக்குக் கீழானவர் என நம்பவைக்க, போலீசார் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். பெண்ணின் பெற்றோருக்கு காவல்துறை உடந்தையாக இருந்துள்ளனர். ஒவ்வொரு விசாரணையின்போதும் நான்கு வெவ்வேறு ஆவணங்களை பிறந்தநாளுக்கான சான்றாக வழங்கியுள்ளனர். பரந்தாமனுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். உண்மை வெளிவர, அரசு சந்தேகத்துக்குரியவர்கள்மேல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்வதோடு, பரந்தாமன் உடலை மறுகூறாய்வு செய்யவேண்டும்'' என்கிறார்.

-அ.அருண்பாண்டியன்