பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் வரும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு, தலைமைக்குத் தூதுவிட்டு வரும் நிலையில், இளைஞர்களும் சீட்டுக்காக கோதாவில் இறங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், தொகுதி மறுவரையறைக்குப் பின் கபிலர்மலை சட்டமன்றத் தொகுதி கலைக்கப்பட்டு, புதிதாக பரமத்திவேலூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களை இந்தத் தொகுதி சந்தித்துள்ளது.
பரமத்திவேலூரில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் பெரும்பான்மையாக உள்ளனர். வேட்டுவக் கவுண்டர், வன்னியர், சோழிய வேளாளர், பட்டியல் சமூகத்தினர் கணிசமாக உள்ள இந்தத் தொகுதியில் வேளாண் மையும், வேளாண் சார்ந்த தொழில் களும் பிரதானமாக உள்ளன. இத்தொகுதி, ஆரம்பத்திலிருந்தே தி.மு.க.வைக் காட்டிலும் அ.தி. மு.க.வுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்துவருகிறது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமத்திவேலூரில் தி.மு.க., அ.தி.மு.க.வில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது குறித்து தொகுதியில் விசாரித்தோம்.
"பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொ.வே.கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரைத்தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே வேட்பாளராகக் களமிறக்கும். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் அந்த சமூகத்தினரையே இரு கட்சிகளும் நியமித்துள்ளன.
தி.மு.க.வில், நாமக்கல் மேற்கு மா.செ.வான கே.எஸ்.மூர்த்தி, ஏற்கனவே 2016, 2021 வரை இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்விய டைந்தார். தொகுதி முழுவதும் அறியப்பட்ட முகம். சீனியர். 65 வயதுக்குமேல் ஆகிவிட்டதால் தனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என தலைமையைப் பெரிதும் நம்புகிறார்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, அப்போது அமைச்சர்களாக இருந்த தங்கமணி, காமராஜ் ஆகியோர் உதவியால் நெல் அரவை ஆலைகளைத் தொடங்கினார். தங்கமணியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற புகாரால்தான் அவருடைய மா.செ. பதவி பறிபோனது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் தயவால்தான் கே.எஸ்.மூர்த்தி மீண்டும் மா.செ. ஆனார். தற்போது சீட்டுக்காகவும் அவர்களையே பெரிதும் நம்பியிருக்கிறார்'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
அதேநேரம், பரமத்திவேலூரில் வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப் படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதுபற்றி தி.மு.க. முக்கியஸ்தர்களிடம் கேட்டோம்.
''நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணையமைப்பாளரான நவலடி ராஜாவுக்கு ஜாக்பாட் அடித்தாலும் ஆச்சர்ய மில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், இவரும், திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அதனால் இளம் தலைவருடனும் நல்ல நெருக்கம்.
ஆதரவற்ற இல்லங்களுக்கு நல உதவிகள், பொருளாதாரரீதியாக நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற சமூகப்பணிகளை சத்தமின்றி செய்துவருகிறார். தவிர, இளைஞரணி மாநாடு, சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், உறுப்பினர் சேர்க்கை என களத்தில் நவலடி ராஜா "ஆக்டிவ்'வாக வலம்வருகிறார். குடும்ப செல்வாக்கு, கொ.வே. சமூகப் பின்னணி துணையுடன் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
அதேபோல, நாமக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் மா.செ. மதுரா செந்தில்குமாரும் ஆரம்பத்தில் பரமத்திவேலூரில் களமிறங்கும் நோக்கில் புரமோஷன் வேலைகளைச் செய்துவந்தார். பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை விரிவாக்கம், இந்த தொகுதியில் சில ஒன்றியங்களில் கூட்டுக்குடிநீர் ஆகிய திட்டங்கள் வருவதற்கு மதுரா செந்திலின் பங்கு முக்கியமானது. மதுரா செந்திலின் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இவர்கள் தவிர, 2011ல் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் களமிறங்கி வெற்றிபெற்ற கொ.இ.பேரவை தனியரசு, இந்தமுறை தி.மு.க. கூட்டணி சார்பில் களமிறக்கப்படலாம் என்ற பேச்சிருக்கிறது மேலும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஆக உள்ள கொ.ம.தே.க. ஈஸ்வரன், பரமத்திவேலூர் பக்கம் நகரவும் யோசித்துவருகிறார். இவர்கள் தவிர, தி.மு.க.வில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி மகிழ்பிரபாகரன் பெயரும் அடிபடுகிறது.
அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம், "பரமத்திவேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க.வின் சேகர், கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் திருமணம் முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் தவறாமல் சென்றுவருகிறார். கட்சியினர் மத்தியில் நல்ல பெயரிருக்கிறது. இவருடைய தம்பி ராஜா, முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு மிகவும் நெருக்கம். சேகருக்கு அரசியல் முகம் என்றால், அவரை பின்னின்று இயக்குவது எல்லாமே ராஜாதான். வரும் தேர்தலில் மீண்டும் "சிட்டிங்' சேகருக்குதான் சீட் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இவர் தவிர, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு இறுதி வரை "டஃப்' கொடுத்த அ.தி.மு.க.வின் வர்த்தகர் அணி நிர்வாகி "ராஹா' தமிழ்மணியும், பரமத்திவேலூர் தேர்தல் களத்திலிருக்கிறார். பரமத்திவேலூரில் சீட் கிடைக்காதபட்சத்தில் திருச்செங்கோடு தொகுதியில் களமிறங்கவும் தயாராக இருக்கிறார்.
கடந்த முறை எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு வந்திருந்தபோது 200 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைத்து கவனம் ஈர்த்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான கண்ணன் ராசப்பனும் சீட் எதிர்பார்க்கிறார்'' என்கிறார்கள் இலைக்கட்சி ர.ர.க்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/paramathi-2025-12-22-17-12-18.jpg)