""டெல்லியில் ஏற்பட்ட அவமானம் ஓ.பி.எஸ்.சை விரக்தியடைய வைத்திருக்கிறது. "அழைத்து அவமானப்படுத்தியிருக்க வேண்டாம்' என பா.ஜ.க. தலைவர்களுக்கு தகவல் பாஸ் செய்திருக்கும் ஓ.பி.எஸ்., "தனக்கேற்பட்ட அவமானத்திற்கு எடப்பாடிதான் காரணம்' என குமுறிக்கொண்டிருக்கிறார்'' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

eps

அண்மைக்காலமாகவே இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இரு தரப்பிடமும் இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, ஓ.பி.எஸ்.சுக்கான ஆதார சுருதியாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள்கூட ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுத்தே வந்தனர். இந்தச் சூழலில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க ஓ.பி.எஸ்.-க்கு 24-ந் தேதி மதியம் 2:45-க்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதனையறிந்து மிகுந்த உற்சாகத்துடன் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் சகிதம் கடந்த 23-ந் தேதி டெல்லிக்குப் பறந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுத்து தனது அமைச்சக வளாகத்திலிருந்த அவரை திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன்.

இதுகுறித்து ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விவாதித்தபோது, ""தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பிரதமர் மோடியை சந்திக்க விரும்பினார் ஓ.பி.எஸ். அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணாகிப்போனது. இந்த நிலையில், சென்னை வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்திக்க தனது மகனை அனுப்பி வைத்தார் ஓ.பி.எஸ். அந்த சந்திப்பினைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை சந்திக்கும் முயற்சியை அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் மூலம் ஓ.பி.எஸ். எடுத்தார். ஓ.பி.எஸ்.சுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது.

Advertisment

என்ன காரணத்துக்காக டெல்லி வந்திருக்கிறார் என்கிற விவரம் பத்திரிகையாளர்களுக்கும் அவர் தங்கியிருந்த டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கும்கூட தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களாக இருக்கும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் அவரை சந்தித்து டெல்லி பயணம் குறித்து கேட்டபோது மட்டும், "உடல்நலம் மோசமாகிவிட்ட என் சகோதரர் பாலமுருகனை மதுரையிலிருந்து சென்னை அப்பல்லோவில் சேர்க்க வேண்டியிருந்தது. அவரை மதுரையிலிருந்து கொண்டுவருவதற்கு ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவினார் நிர்மலாசீதாராமன். அதற்கு நன்றி சொல்லவே வந்திருக்கிறேன். இதனை வெளியே பகிர்ந்துகொள்ள வேண்டாம்' என சொல்லியிருந்தார் ஓ.பி.எஸ்.

மறுநாள் மதியம் 2 மணி. நிர்மலா சீதாராமனை சந்திக்க தமிழ்நாடு இல்லத்திலிருந்து கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியனுடன் கிளம்பினார் ஓ.பி.எஸ். இல்லத்திலிருந்து வெளியே வந்த அவரிடம் மீண்டும் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதோ உணர்ச்சி வயப்பட்டவராக, "நிர்மலா சீதாராமன் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்' என்பதை வெளிப்படுத்தினார். ஓ.பி.எஸ்.சின் இந்தப் பேட்டி டெல்லியில் பரபரப்பையும், பா.ஜ.க. தலைவர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த விசயம் எதுவும் அறியாத ஓ.பி.எஸ்.சின் கார், பாதுகாப்பு அமைச்சக வளாகத்துக்குள் நுழைந்தது. ஓ.பி.எஸ். வந்திருப்பதை நிர்மலா சீதாராமனிடம் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்க, "மைத்ரேயனை மட்டும் உள்ளே அனுப்புங்கள் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை' என சொல்லியிருக்கிறார். இதனை மைத்ரேயனிடம் பாதுகாப்பு அதிகாரி சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். கடைசியில், மைத்ரேயன் மட்டும் உள்ளே சென்று நிர்மலாவை சந்தித்துவிட்டு 25 நிமிடத்தில் வெளியே வந்தார். அந்த 25 நிமிடமும் செக்யூரிட்டி அறையிலேயே தவிப்புடன் காத்திருந்தனர் ஓ.பி.எஸ்.சும் மற்றவர்களும். ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுத்த விபரத்தை அவரிடம் மைத்ரேயன் சொல்ல, ரொம்பவே அப்-செட்டானார். மன உளைச்சலுடனே சென்னை திரும்பினார்''’என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

ஏர்போர்ட்டிலிருந்து வீடு திரும்பிய ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். எடப்பாடிக்கு எதிரான கோபம் அவரிடமிருந்து வெடித்திருக்கிறது. இது பற்றி நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ""நான் அவமானப்பட்டதற்கு காரணம் எடப்பாடிதான். மனிதாபிமானமாக நிர்மலா சீதாராமன் செய்த உதவியை சர்ச்சையாக்கியவர் அவர்தான். 24-ந் தேதி காலையில் வண்டலூரில் பேட்டியளித்த எடப்பாடி, "என் சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்த உதவிக்காகத்தான் நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கிறேன்'னு அவர் சொன்னதால்தான், இதை மறைக்கத் தேவையில்லையே என நினைத்து நானும் டெல்லியில் பேட்டியளித்தேன். ஆனா, இதனை சுட்டிக்காட்டி என்னை சந்திக்க மறுத்திருக்கிறார் மத்திய அமைச்சர். எடப்பாடி காட்டிக் கொடுத்ததனால்தான் எனக்கு இந்த நிலை'' என கோபப்பட்ட ஓ.பி.எஸ்., ஒரு கட்டத்தில், "நான் பதவியில் இருப்பது அவருக்கு (எடப்பாடி) பிடிக்கவில்லைன்னா ராஜினாமா செய்துவிடுகிறேன். அவர் இப்படி கேம் ஆடுவது சரியாகப் படவில்லை' என ஆதங்கப்பட்டிருக்கிறார்'' என்கிறார்கள்.

பா.ஜ.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, ""ஓ.பி.எஸ்.சின் சகோதரரருக்கு ஏர்ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியது பெரிய சட்டமீறல் கிடையாது. அமைச்சருக்கென இருக்கும் தனி அதிகாரத்தில் மனிதாபிமான முறையில் ஏர் ஆம்புலன்ஸை கொடுத்து உதவி செய்யலாம். அதற்கான பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் கட்டினால் போதும். இது பெரும்பாலும் சீக்ரெட்டாகத்தான் இருக்கும். அதனை ஓ.பி.எஸ். பகிரங்கப்படுத்தியதுதான், அமைச்சரை (நிர்மலா சீதாராமன்) கோபப்படுத்தியது.

ops

ஓ.பி.எஸ்.சின் பேட்டி டெல்லியில் பரபரப்பான நிலையில்... பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, ஏற்கனவே ரஃபேல் விவகாரத்தில் உங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சனை செய்கின்றன. இப்போ, பன்னீர்செல்வத்தின் பேட்டியையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கினால் தேவையற்ற சிக்கல் ஏற்படும். அவரை சந்திக்க வேண்டாம். ரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியாதவர்களுக்கெல்லாம் எதற்கு உதவுகிறீர்கள்?' என கடிந்துகொண்டனர். இதனால், மேலும் கோபமடைந்தார் நிர்மலா. அதேசமயம், "நிர்மலாவை சந்திப்பதற்கு முன்பே, அவரை சந்தித்தேன்' என ஓ.பி.எஸ். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த விசயமும் அறிந்து மேலும் டென்சனானார் நிர்மலா சீதாராமன். எல்லா கோபமும் ஒன்று சேர, அதை மைத்ரேயனிடம் காட்டினார் நிர்மலா''என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

""ஓ.பி.எஸ்.சின் டெல்லி பயணம் தோல்வியடைந்ததில் உற்சாகமாக இருக்கிறார்கள் எடப்பாடியும் அவரைச் சார்ந்துள்ள அமைச்சர்களும். ஓ.பி.எஸ்.சுக்கு நிர்மலா சீதாராமன் செய்த உதவி அப்போதே எடப்பாடிக்கு தெரியும். இது பற்றி ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி கேட்ட போதும்கூட, நன்றி தெரிவிக்க செல்வதாக மட்டுமே கூறியிருந்தார் ஓ.பி.எஸ்.! ஆனால், எடப்பாடிக்கு அதில் நம்பிக்கை இல்லை. தனக்கு எதிராக ஊழல் புகார்களை வாசிக்கவும், முதல்வர் பதவியிலிருந்து தன்னை அப்புறப்படுத்துவதற்கான அரசியலை அழுத்தமாக செய்துவிட்டு வரவேண்டும் என ஓ.பி.எஸ். திட்டமிட்டிருந்ததாகவும் நம்பினார் எடப்பாடி. மேலும், "தி.மு.க.வுடன் ரகசியமாக கைகோ(ர்)த்துக்கொண்டு என்னை எடப்பாடி அழிக்கப்பார்க்கிறார்' என புகார் சொல்லவும் முடிவு செய்திருந்தார் ஓ.பி.எஸ்!

manajo

குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் தனக்கு எதிராக தி.மு.க. தந்திருக்கும் புகாரும், அதே புகார் தொடர்பாக தி.மு.க. போட்டுள்ள வழக்கும் எடப்பாடியின் யோசனைப்படியேதான் நடக்கிறது என சொல்வதற்கும் திட்டமிட்டிருந்தார் ஓ.பி.எஸ்.! அதனால், நிர்மலா-ஓ.பி.எஸ். சந்திப்பை எப்படி தடுப்பது என யோசித்தார் எடப்பாடி.

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு இல்லத்தில் தன்னை சந்தித்த எம்.பி.க்களிடம், நிர்மலா செய்த உதவியை பகிர்ந்துகொண்டதுடன் இதனை வெளியே பகிர்ந்துகொள்ள வேண்டாம் என ஓ.பி.எஸ். எச்சரித்த விசயம் எடப்பாடிக்கு 23-ந்தேதி இரவே கிடைத்திருக்கிறது. எதை சொல்ல வேண்டாம் என ஓ.பி.எஸ். நினைக்கிறாரோ அதை போட்டுடைத்தால் என்ன? ராணுவ ஆம்புலன்ஸ் விவகாரம் என்பதால் பத்திரிகைகள் ஊதிப் பெரிதாக்கும். பா.ஜ.க. தலைவர்கள் டென்சன் ஆவார்கள். அதன் மூலம் சந்திப்பும் ரத்தாகலாம் என கணக்குப் போட்ட எடப்பாடி, மறுநாள் 24-ந்தேதி காலையில் வண்டலூரில் பேட்டியளித்தபோது ரகசியத்தைப் போட்டுடைத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சர்ச்சைகள் உருவாகி சந்திப்பும் கேன்சலானது'' என விவரிக்கின்றனர் ஆட்சியாளர்களோடு தொடர்புடையவர்கள்.

""ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடியும், எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ்.சும் நடத்தும் ரகசிய வியூகங்களில் எடப்பாடி தரப்பே நான்கு ஸ்டெப் முன்னாடி போய்க்கொண்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை கோர்ட்டின் உத்தரவால் வழக்குப் பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை துவக்கியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரை கோர்ட்டில் சொல்ல வைத்திருக்கிறார் எடப்பாடி. அதேசமயம், தொடர் நடவடிக்கையை எடுக்காமல் கால தாமதம் செய்து, கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாவதுபோல் நடந்துகொண்டு வழக்கை சி.பி.ஐ.யிடம் மாற்ற கோர்ட்டே உத்தரவிடும் சூழலை ஏற்படுத்துவதே எடப்பாடியின் அடுத்த திட்டம்'' என்கிறார்கள் ரகசியங்களை அறிந்த உளவுத்துறையினர்.

-இரா.இளையசெல்வன்