ஜூன் 23-ஆம் தேதி நடைபெற விருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில்.. தற்போதைய தலைவரான நாசர் தலைமையில் மீண்டும் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது.

கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு தீவிரமாக பணியாற்றிய நடிகர்- தயாரிப்பாளர்- கல்வி நிறுவனங்களின் அதிபர் ஐசரி கணேஷ் இந்தமுறை, சங்கர தாஸ் சுவாமிகள் அணியில் செயலாளார் பதவிக்கு... விஷாலை எதிர்த்து போட்டி யிடுகிறார்.

விஷால் -ஐசரி கணேஷ் இடையே பிரிவு வந்தது ஏன்?

பாண்டவர் அணியின் வெற்றிக்காக செயல்பட்ட ஐசரி கணேஷ் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தந்தார். நடிகர் சங்க இடத்தில் சத்யம் தியேட்டர் கட்டிடம் கட்டிக்கொள்ள சரத் தலைவராக இருந்தபோது போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த தலைவர் நாசர் -செயலாளர் விஷால் -பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஐசரிவேலனிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று சத்யம் நிர்வாகத்திற்கு செட்டில் மெண்ட் செய்தனர். அந்தத் தொகை நடிகர் சங்கத்தால் அவருக்கு திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது. அதன்பின்பு நடிகர் சங்கத்திற்காக இரண்டு கோடி ரூபாய் கடன் ஐசரியிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் அருகே குடியிருக்கும் பிரபல தயாரிப்பாளர்... (இப்போது விஜய்யை வைத்து படம் தயாரித்து வரும் கல்பாத்தி அகோரம்... நடிகர் சங்க கட்டிடம் கட்ட சில இடைஞ்சல்களை மறைமுகமாக கொடுத்ததாக வும், அதைமீறி தனது செல்வாக்கால்... கட்டிட பிளானுக்கு சி.எம்.டி.ஏ.வின் அப்ரூவலை வாங்கித் தந்தவர் ஐசரி. இப்படி பல உதவிகளைச் செய்த தால்... ஐசரிக்கு நடிகர் சங்க அறக் கட்டளை யில் பதவி கொடுத்தனர். விஷால் டீமும் புதிய கட்டிடப் பணிகளில் இரண்டு ஷிஃப்ட் ஆட்களை வைத்து கட்டிடத்தின் முக்கால்வாசி வேலையை முடித்திருக்கும் நிலையில்தான்... விஷால் -ஐசரி இடயே சில தகராறுகள் ஏற்பட்டன.

Advertisment

tt

நடிகர் சங்க நிதிக்காக ஐசரி பணம்போட்டு ஒரு படத்தை தயாரிக்கவும், அந்த படம் வெளியாகும்போது கிடைக்கும் லாபத்தை சங்கமும், ஐசரியும் பகிர்ந்துகொள்வதாகவும் ஏற்பாடானது. இதில் விஷால், கார்த்தி... இருவரும் நடிக்க சம்ம தித்ததோடு, தங்களுக்கான இந்தப் பட சம்பளத்தை நடிகர் சங்க நிதிக்கு தந்துவிடவும் முடிவுசெய்தனர். பிரபுதேவா இயக்கவும் முடிவானது.

"வெள்ளைராஜா கறுப்புராஜா'’என்ற தலைப்பில் பட ஏற்பாடுகள் நடந்தன. டைரக்டர் கே.சுபாஷ் இதற்கான கதையை எழுதியிருந்தார். கதை கேட்ட விஷாலும், கார்த்தியும் திருப்தி யடைந்தனர். ஆனால்... கே.சுபாஷ் மாரடைப்பால் காலமானதையடுத்து... பிரபுதேவாவும், ஐசரியும் இந்தக் கதையில் நிறைய மாற்றங்களைச் செய்தனர். சுபாஷ் சொன்னபடியே கதை இருக்கட்டும்'’என விஷால் சொன்னதை ஐசரியும், பிரபுதேவாவும் ஏற்கவில்லை. இதனால் கருத்து வேறுபாடு உருவாகி... விஷாலும், கார்த்தியும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். இந்தப் படத்தின் சம்பளம் மூலம் நடிகர் சங்கத்திற்கு நிதி தரமுடியாமல் போனதால்.. சொந்தப் பணத்தி லிருந்து கார்த்தி ஒருகோடி ரூபாயும், விஷால் 25 லட்சமும் கொடுத்திருக்கிறர்கள் இப்போது.

இதிலிருந்துதான் தொடங்கியது பிரச்சினை.

"நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலை நுழைக்கிறார்கள்'’ என விஷால் குற்றம்சாட்டியது எதனால்?

நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் போதுமான மரியாதை ஐசரிக்கு கொடுத்தபோதும்... ‘உரிய மரியாதை தரவில்லை... ஐசரியின் ஆலோசனைகளை விஷால் கேட்பதில்லை..’ என்கிற அதிருப்தி ஐசரி தரப்பிற்கு. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் வேட்புமனு தாக்கல் செய்தது,.. ஆளும்கட்சி யை கடுமையாக விமர்சித்தது... சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘"கமலுக்கு ரஜினி ஆதரவு தரவேண்டும்'’ என பேசியது... என தனிப்பட்ட விஷயத்தில் விஷால் அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபட்டே நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வேலைகள் தொடங்கி வருகிறார். இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றதால்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் விஷால். சமீபத்தில் விஷாலையும், கார்த்தியையும் அழைத்துப்பேசினார் ஐசரி. ‘"வெள்ளைராஜா கருப்புராஜா'’ படத்தில் இருவரும் நடிக்க மறுத்தது பற்றி தொடங்கிய பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல ஆவேசமாகியிருக்கிறது இருதரப்பிற்கும் இடையே.

""நீங்க எப்படி மு.க.ஸ்டாலினைப் போய் பார்க்கலாம்?''’’

""தேர்தல்ல மக்கள் ஆதரவோட பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிற ஒரு கட்சியோட தலைவரை பார்த்து தனிப்பட்ட முறையில் நான் வாழ்த்துச் சொன்னேன். இதுல என்ன தப்பு? உதயநிதி ஸ்டாலின் என்னோட காலேஜ்மேட். என் ஃப்ரெண்ட்டோட அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா?''’’

""நடிகர் சங்கத்துல பதவியில இருந்துக்கிட்டு நீங்க போய் பார்த்தது தப்பு. நீங்க நடிகர் சங்க தேர்தல்ல நிற்கக்கூடாது.. நின்னா தோற் கடிப்போம்''’’

""உங்களால முடிஞ்சதை செஞ்சுக்கங்க''’’

- இப்படி விஷாலுக்கும், ஐசரிக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதன் பின்னணி என்ன?

"சர்கார்'’ கதைத் திருட்டு பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் செயல்பட்ட விதம் பெரும் பாராட்டைப் பெற்றது. நடுநிலையானவர் என்கிற இமேஜையும் வாங்கித் தந்தது. இதனால் பாக்யராஜை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு முன்னிறுத்த அவரிடம் பேசினார் ஐசரி. முதலில் மறுத்தாலும்... "நீங்க எங்ககூட இருந்தா போதும். நாங்க பார்த்துக்குறோம்'’’ என ஐசரி சொன்னதையடுத்தே பாக்யராஜ் சம்மதித்தார். ஏற்கனவே விஷால் டீமிலிருந்து விலகிய குட்டி பத்மினி, உதயா போன்றவர்களும் ஐசரிக்கு ஆதரவாக களமிறங்க... "சங்கரதாஸ் சுவாமிகள் அணி' ஐசரியால் வலுவான எதிரணியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பாரதிராஜாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுத்துள்ளது அச்சங்கத் தின் 99-வது பொதுக்குழு. இதில் பேசிய பாரதிராஜா... “""டைரக்டர் சங்கத்துக்கு என்னை தலைவராக்கிட்டீங்க. என் சிஷ்யன் நடிகர் சங்கத்துல தலைவரானா நல்லா இருக்கும். நம்ம சங்கம் பாக்யராஜை ஆதரிக்கணும்''’எனச் சொல்லியுள்ளார்.

இரண்டு அணிகளில் "ஒஸ்தி யாரு' என்கிற குஸ்தி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

-இரா.த.சக்திவேல்