தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என கேட்டால்... "அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றது, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்' என கோபமாகவே சொல்கிறார்கள்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்தவர்களுமே.
முதல்வராக இருந்த பொழுதும், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகும், எடப்பாடிக்கு ஓ.பி.எஸ்.ஸை பிடிக்கவே பிடிக்காது. அவருடன் இணைந்து செயல்பட அவர் விரும்பியதே இல்லை. ஓ.பி.எஸ்.ஸும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வைத்து எடப்பாடியை மிரட்டிக்கொண்டிருந்தார். மத்திய பா.ஜ.க.தான் இருவரையும் ஒற்றுமையாக வைத்திருந்தது.
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், ராஜீவ்காந்தியிடம் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவை, தனது கடைசி காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். ஒதுக்கியதைப் போல எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அந்த நேரத்தில்தான் டிசம்பர் மாதத்திற்குள் உள்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கட்டாயம் தேர்தல் கமிஷன் மூலம் வந்தது.
கட்சிக்குள் இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமைதான் என்கிற கோஷம் எடட்பாடியால் முன்வைக்கப்பட்டது. வெளியில் சசிகலாவால் முன்வைக்கப்பட்ட கோஷத்தை எடப்பாடி அ.தி.மு.க. கட்சிக்குள் முன்வைத்தார். அதை நடைமுறைப்படுத்த தனது பலத்தை திரட்டினார். ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அவைத்தலைவர் பதவி எடுத்துக்கொள்ளட்டும், டிசம்பர் மாதம் பொதுக்குழு, எடப்பாடி பொதுச்செயலாளர் என வேகமாக முன்னேற ஆரம்பித்தார்.
பயந்துபோன ஓ.பி.எஸ்.ஸுக்கு பா.ஜ.க. கை கொடுக்கவில்லை. சசிகலா விவகாரத்தில் யார் சொல்வதையும் எப்படிக் கேட்கவில்லையோ, அதேபோல் பொதுச்செயலாளர் விவகாரத்திலும் வேகமாக எடப்பாடி செயல்பட்டார். அதைச் சமாளிக்க சசிகலாவுடன் நெருக்கம் காண்பித்தார் ஓ.பி.எஸ்.
டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்.ஸின் இந்த நகர்வை ஆதரித்தார். தென் மாவட்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் தனது சசி ஆதரவு நிலைக்கு ஆதரவு திரட்ட முயன்றார் ஓ.பி.எஸ். என்னை விலக்கினால் நான் கட்சியை உடைப்பேன் என ஓ.பி.எஸ். நின்ற பிறகு எடப்பாடி இறங்கிவந்தார்.
ஓ.பி.எஸ்., சசி ஆதரவு நிலைக்குச் சென்றால் அதை பா.ஜ.க. ஆதரிக்கும், ஓ.பி.எஸ்.ஸை முன்னிறுத்தி அரசியல் செய்ய சசியும் தயார் என்கிற நிலையை மாற்ற எடப்பாடி செய்துகொண்ட சமரசம்தான் நடந்து முடிந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என விளக்குகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். எடப்பாடி மட்டுமல்ல, ஓ.பி.எஸ்.ஸும் இதில் சமரசம் செய்துகொண்டார். இனி ஓ.பி.எஸ்.ஸை, சசிகலா நம்பமாட்டார். எடப்பாடியின் கைப்பாவையாக மட்டுமே ஓ.பி.எஸ்.ஸால் செயல்பட முடியும். மறுபடியும் எடப்பாடியின் கை ஓங்குமானால், ஓ.பி.எஸ்.ஸுக்கு சசி ஆதரவு கிடைக்காது என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். இந்த தேர்தலை சீர்குலைக்க சசிகலா தேவையான அளவு முயற்சிகளை எடுக்கவில்லை.
கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் "ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையாக நடக்கவேண்டும், அதன் முடிவு நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது. அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்தால், நீதிமன்றம் ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்துசெய்ய முடியும்' என தீர்ப்பளித்தது.
அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் விதித்த நிபந்தனை என்பது, 32 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிதலுடன் இரண்டு நபர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதுதான். யாராவது இரண்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பின்னால் 32 பொதுக்குழு உறுப்பினர்களை நிற்க வைத்திருந்தால் போட்டி ஏற்பட்டிருக்கும்.
தமிழகம் முழுக்க அனைத்து அ.தி.மு.க. கிளைகளிலும் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும்... ஏகப்பட்ட குழப்பம் நடந்திருக்கும்... சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் எதிரான போட்டியாக மாறியிருக்கும். அதைச் செய்ய சசிகலா தவறிவிட்டார். சசிகலாவின் பெரிய பலவீனமே இந்த தயக்கம்தான். எடப்பாடியுடன் தினகரன் மோதும்போது எடப்பாடியை திவாகரன் ஆதரித்தார். தினகரன் தனிக்கட்சி கண்டார். அந்த நேரத்தில் சசிகலா அ.தி.மு.க.வை உடைத்து வெளிப்படையாக போட்டி அ.தி.மு.க.வை உருவாக்கியிருக்க வேண்டும். சிறையை விட்டு வெளியே வந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டிருந்தால், அதன் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். அ.தி.மு.க.வை சசிகலா உடைத்திருந்தால் ஒருவேளை இரட்டை இலை முடக்கப்பட்டிருக்கும். சசிகலா இதையெல்லாம் செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் இடையே கூவத்தூர் முகாமில் எடப்பாடி ஆட்சி அமைய சசிகலா செலவு செய்த பணம் பற்றிய தகராறு இருக்கிறது. "அந்தப் பணம் உங்கள் பணம் அல்ல, நாங்கள் சம்பாதித்துத் தந்ததுதான் அந்தப் பணம்'' என எடப்பாடி அதனைத் திருப்பித் தர மறுக்கிறார். இப்போதும்கூட "சசி வந்தால் பரவாயில்லை... அவரது குடும்பத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்' என்பதுதான் எடப்பாடியின் நிலை.
சசிக்கு, தினகரனை பிடிக்காது. அதனால் தினகரன் தன்னை ஒரு குட்டி கட்சித் தலைவராக மாற்றிக்கொள்வதை ரசிக்கிறார். சசி சீரியஸாக இல்லை. அவரது பலவீனமான தயக்கம் அவரை தோல்வியடைய வைத்துள்ளது என்கிறார்கள் சசி ஆதரவு அ.தி.மு.க. தலைவர்கள்.
"இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது. வெறும் செயற்குழுவில் முடிவெடுத்து தேர்தல் நடத்தி, பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுகிறார்கள். அ.தி.மு.க.வில் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கிய பொதுக்குழு முடிவை எதிர்த்து சசிகலா வழக்கு போட்டிருக்கிறார். இவர்கள் பொதுக்குழுவை கூட்டாமல் தேர்தல் நடத்தியது நிச்சயம் சசிகலாவுக்கு வலு சேர்க்கும்'' என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.
படங்கள்: அசோக், குமரேஷ்
_____________
ஓயாத மோதல்!
"கொடநாட்டில் கொள்ளையடித்த எடப்பாடி ஒழிக!' என ஜெ. நினைவுநாள் அன்று அ.ம.மு.க.வினர் எடப்பாடிக்கு எதிராக ஜெ.வின் சமாதியில் கோஷம் போட்டனர். பொதுவெளியில் நடந்த இந்த தாக்குதல்களால் எடப்பாடி நிலைகுலைந்து போனார். உடனே "அ.ம.மு.க.வினரை வைத்து, அ.தி.மு.க.வின் தலைவர்களை அவமானப்படுத்தியது தி.மு.க. அரசு' என சூடாக அறிக்கை வெளியிட வைத்தது அ.தி.மு.க. தலைமை.
செல்லூர் ராஜுவின் சசிகலா ஆதரவு பேச்சு லீக் ஆனதை ஜெயக்குமார் ரசிக்கவில்லை. அதில் ஜெயக்குமாரின் தந்தை தி.மு.க. கவுன்சிலர் துரைராஜ், எம்.ஜி.ஆரை தாக்கியதாக செல்லூர் ராஜு பேசியிருந்தார். தலைமைக்கழகத்தில் இருவரும் மோதிக்கொண்டனர். "எங்கப்பாவைப் பற்றி எப்படி பேசலாம்?'' என ஜெயக்குமார் எகிற... "அது மிமிக்ரி'' என சமாளித்தார் செல்லூர் ராஜு. "உங்க மிமிக்ரி கதையெல்லாம் என்னிடம் வேண்டாம்...'' என கடுமையாகத் திட்டினார் ஜெயக்குமார். இடையில் எடப்பாடி புகுந்து இருவரையும் சமரசம் செய்யும் அளவிற்கு இருவரும் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். "இது உண்மையில் சசிகலா, எடப்பாடி மோதல்... செல்லூர் ராஜூ, சசிகலா ஆதரவாளர்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.