நெல்லை மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பகுதியின் எம்.சாண்ட் குவாரியிலிருந்து மணல் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் ஜூலை 20 அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அக்.31-நவ.3 நக்கீரன் இதழில் "கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்பாற்றும் அதிகாரிகள்! சிக்கிய டைரி!'’என்ற தலைப்பில் எம்.சாண்ட் குவாரியில் மணல் லோடுகள் கேரளாவிற்குக் கடத்தப்பட்டதையும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றியும், ஏ டூ இசட் அம்பலப்படுத்தியிருந்தோம்.
பொட்டலைச் சேர்ந்த வண்டல் ஓடைப் பகுதியில் கடந்த 2019 டிசம்பரில், கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், ரெவரண்ட் ஃபாதர் ஜோஸ் மற்றும் ரெவரண்ட் ஃபாதர் கிரிக்கோரியாஸ் என மூவர் அடங்கிய பங்காளிகள், அரசின் வருவாய்த்துறை உத்தரவு மூலம் அங்கு பூமி எம் சாண்ட் குவாரி அமைத்திருக்கிறார்கள். சரல் மணல் மற்றும் மண லுடன் கூடிய பாறைக்கற்களை உடைத்து எம்.சாண் டாக கட்டுமானத்திற்கு அனுப்புகிற குவாரி அது.
இந்த குவாரி நஷ்டத்தில் இயங்குவதை அறிந்து அதனை விற்க முன்வந்தபோது ரமேஷ் என்பவர் உள்ளே வந்திருக்கிறார். எம்.சாண்ட் குவாரியை விற்கவேண்டாம், இதே லேபிளில் நாம் அங்கிருந்து மணலை அள்ளி அனுப்பினால் நமக்கு வருமானம் கொழிக்கும் என்று ஐடியா கொடுத்திருக்கிறார். கேரள பங்காளிகளும் அதற்கு சம்மதித்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக ரமேஷ், அரசாங்கத்தின் கீழ்மட்டம் முதல் கலெக்டர் ஷில்பாகுமார் சதீஷ்வரை வளைத்திருக்கிறார். நாளொன்றிற்கு இந்த வழியில் சுமார் 300 லோடு மணல் கடத்தப் பட்டிருக்கிறது. தினமும் லோடுகணக்கில் மணல் வெளியேறுவதால் விவசாயம் பாதித்ததோடு அணையும் வீக்காகிக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய பொட்டல் பகுதி விவசாயிகள், சுகுமார் தலைமையில் மணல் கடத்தலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். அத்துடன் நின்று விடாமல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் முறைகேடுகள் பற்றி ஆதாரங்களோடு வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அன்றாடம் எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய டைரியை மெயின்டெயின் செய்து வந்திருக்கிறார் குவாரியின் மேலாளரான வினோத். அதோடு சபீயாவிடம் மட்டுமே இருக்கவேண்டிய மணல் பெர்மிட்டில் ஒட்டப்படுகிற ஹாலோகிராம் புக் லெட், அவரது கணவர் மூலமாக குவாரிக்காரர்களி டம் சென்றதுதான் இந்த வழக்கின் முக்கிய ஹைலைட்.
விவகாரம் உயர்நீதிமன்றத்திற்குப் போனதை யறிந்த உயரதிகாரிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உடனடியாக குவாரியை ஆய்வுசெய்ய சேரன்மகாதேவி சப்-கலெக்டரான பிரதிக்தயாளை அனுப்பி, குவாரியில் மணல் முறைகேடாக கடத்தப்பட்டதையறிந்து குவாரி அதிபர்களுக்கு ரூ 9.57 கோடி அபராதம் விதித்தனர். வி.ஏ.ஓ. மோகனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அபராதத் தொகையை அறிந்த உயர்நீதிமன் றம், இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டு அதன் காரணமாக வி.ஏ.ஓ. ஒருவர் மட்டும்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா? எனக் கடுமையான கேள்விகள் எழுப்பியது. பிறகே சுப்பையா, ஜான் பீட்டர், ஜோயல், வினோத் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கியப் புள்ளிகளான முகமது சமீர், ரமேஷ் மற்றும் குபேர சுந்தர் ஆகியோர் மீது கைவைப்பதற்கு வருவாய்த் துறை அதிகாரிகளே தடையாய் இருந்திருக்கின்றனர்.
முகமது சமீர் தப்பிய விவரத்தை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டதையடுத்து கேரளாவி லிருந்த அவரை போலீசார் மடக்கியிருக்கிறார்கள். அவர் குண்டாசில் அடைக்கப்பட்டாலும் அதிலிருந்து மீளுவதற்கான சட்ட ஓட்டையையும் விட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இதையடுத்து குண்டாசில் அடைக்கப்பட்ட முகமது சமீர் இரண்டே மாதத்தில் ஜாமீனில் வந்திருக்கிறார். கடத்தலின் முக்கியப் புள்ளிகளான குபேர சுந்தர், ரமேஷ் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில்தான் வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளையின் நீதியரசர்களின் உத்தரவு வெளிவந்திருக்கிறது. 13 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தரவில், “"இவ் வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டதிலிருந் தும் மற்றவைகளை ஆய்வுசெய்த பிறகும் எம் சாண்ட் குவாரி என்ற பெயரில் சட்டவிரோதமாக சுமார் 24 ஆயிரம் க்யூபிக் மீட்டர் அளவிலான மணல் அள்ளப்பட்டு கேரளாவிற்குக் கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதில் தாலுகா, மாவட்டம், மாநில அளவிலான சில உயரதிகாரிகளுக்கும் தொடர் பிருப்பதும், வருவாய்த்துறை, கனிமத்துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் பல நிலைகளி லிருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதற் கான முகாந்திரம் இருப்பதாக கையகப்படுத்தப் பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது. இதில் மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் வழக்கின் தீவிரம் கருதி சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி. தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்படு கிறது''” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நீதிமன்றம் சென்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த சுகுமார் நம்மிடம், “"இது மிகவும் சிறப்பான தீர்ப்பு. எங்களுக்கு நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்திருக்கிறது''’என்கிறார். தொடர்ந்து நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடி கணக்கான ரூபாய் மணல் கடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவிருப்பதால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.