புலனாய்வு பத்திரிகை வரலாற்றில் முப்பது ஆண்டுகள் தடம்பிறழாமல் கோலோச்சிக்கொண்டிருக்கும் பெருமை நக்கீரனுக்கு மட்டுமே உண்டு. புலனாய்வு பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்பதை பத்திரிகை உலகத்திற்கு வெளிச்சமிட்டதும் நக்கீரன்தான்.
வீரப்பனாகட்டும், ஆட்டோ சங்கராகட்டும், சங்கரமடமாகட்டும், நித்தியானந்தாவாக இருக்கட்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கட்டும், அத்தனை செய்திகளிலும் உண்மை, உறுதி, துணிவு இருந்தது, இருந்துவருவது... நக்கீரனின் தனித்துவம்.
நக்கீரன் என்றாலே தி.மு.க. ஆதரவு பத்திரிகை என்கிற பேச்சு பரவலாக இருந்த காலம் உண்டு. அது தவறு, நாங்கள் நடுநிலையாளர்கள் என்பதை ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு புரிய வைத்தது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அவரின் சர்வாதிகாரப்போக்கை சுட்டிக்காட்டியதில் பல இன்னல்களை அனுபவித்த நக்கீரன் குழுமம், அவர் இறப்பில் உள்ள மர்மங்களை ஜெ.யின் ஆதரவு பத்திரிகைகளே எழுத மறந்த நிலையில் நக்கீரன் மட்டுமே துணிந்து எழுதி நடுநிலைமையை காட்டிவருகிறது.
அதுபோல விவசாயிகளின் பிரச்சினைகளை எடுக்கவும் தயங்கியதேயில்லை.
2018 மே 8-10 இதழ்:
நக்கீரனின் அட்டைப்படம் எப்போதுமே புதுச்செய்தியை தாங்கிவரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே இந்த இதழின் அட்டைப்படம் தமிழக ஆட்சியாளர்களின் வக்கில்லாத செயலைக் காட்டியிருக்கிறது.
"தண்ணீர் வராவிட்டால் தனிநாடு' செய்தி இன்றைய காவிரி விவகார சூழலில் தேவையான செய்தியாக இருப்பதோடு, போராட்டத்தில் உள்ளவர்களை உற்சாகப்படுத்துகிறது.
"கரண்ட்டே பார்க்காத மலைக்கிராமம்' செய்தியின் மூலம் டிஜிட்டல் இந்தியாவின் முகத்திரையை கிழித்திருக்கிறது.
"சித்ரா பௌர்ணமியில் தேய்பிறையாகும் கண்ணகி விழா' செய்தியின் மூலம் மீண்டும் தமிழன் உரிமை பறிபோவதை உணரமுடிகிறது.
"அதிகாரிகள் முதல் ஆளுநர்வரை யார், யாருக்கு என்ன செய்தோம்' செய்தி, அதிகாரத்தில் உள்ளவர்களின் களவாணித்தனத்தை தோலுரிக்கிறது.
---------------------
வாசகர் கடிதங்கள்!
ஆசிர்வாதமும் குலநாசமும்!
ரவுடிக் கும்பல்களுக்கு காவல்துறை + அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம் உள்ளவரை பொதுமக்கள் அன்றாடப்பொழுதை திக்... திக்... அச்சத்துடன் கழிக்கவேண்டிய சூழலே நீடிக்கும். உயிர்களை மதிக்காத இச்சமூக குற்றவாளிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில், "கொலை தொடரும்' கட்டுரையில் வருவதுபோல அவர்களுக்குள்ளேயே குலநாசம் செய்து கொண்டால்தான் உண்டு.
-சை.மன்சூர்அலிகான், கோவை.
அவமானப்பட்ட பெருமை!
கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்ற லாத்வியா நாட்டுப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, ஆயுளை முடித்திருக்கிறார்கள். இது "மக்களின் முதல்வர்' பினராயி விஜயனின் பெருமையை அவமானப்படுத்துகிறது. அதிரடி நடவடிக்கை அவசியம் காம்ரேடு!
-ஆ.இ.திரவியம், வேலூர்.