பொங்கல் விழாவை ஆயுதப் படை போலீசாருடன் கொண்டாடினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. போலீசாரோ கோபம் தணியாமல் பொங்குகின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் இறந்த போலீசாரின் எண்ணிக்கை 337. அதில் வீரமரணம் 2, கொலை 1, தற்கொலை 48, கொரோனா உயிரிழப்பு 40, உடல் நலக்குறைவு 108, மாரடைப்பு 59, விபத்து 70, புற்றுநோய் 9 என வரிசைப்படுத்தி பட்டியலை அளித்துள்ளனர் தமிழ்நாட்டுப் போலீஸார்.
""அடிப்படை உரிமைகளைக் கொடுக்காததும், ஆள்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாததுமே இம் மரணங்களுக்குக் காரணம். இதே நிலை தொடர்ந்தால் போலீஸாரின் உயிர் கேள்விக்குறிதான். எங்களது வாக்கும், எங்களது குடும்பத்தினரின் வாக்கும் உங்களுக்கு அல்ல!'' என ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தினைத் துவக்கியுள்ளனர் போலீஸார்.
""1541 காவல்நிலையங்கள் மற்றும் 203 மகளிர் காவல்நிலையங்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதாரண கான்ஸ்டபிள் தொடங்கி டி.ஜி.பி. அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் வரை பணி செய்யவேண்டிய போலீஸாரின் எண்ணிக்கை 1,24,939. ஆனால் நடைமுறையில் இருப்ப தோ 1,11,897 போலீ ஸார். பற்றாக்குறைப் போலீஸாரின் எண்ணிக்கை மட்டும் 13,042 என்கின்றது கடந்த ஏப்ரலில் உள்துறைக்கு வழங்கப்பட்ட காவல்துறை விபரக்குறிப்பு.
""அரசுத்துறையில் பற்றாக்குறை ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். அதற்காக எத்தனை வருடங்கள் 24 மணி நேரமும் வேலைபார்க்க முடியும்? மன அழுத்தம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகரித்துவருவது அரசுக்குத் தெரியாதா? சரி, இந்த வேலையே வேண்டாம்! ஆளைவிடுங்கள் சாமி என ஆயிரத்திற்கும் மேலான போலீஸார் விருப்ப ஓய்வு கொடுத்தாலும் அனுமதிப்பதில்லை. எங்களை காவு வாங்கவே காத்திருக்கின்றது இந்த அரசு. எங்களது உயிரென்றால் அவ்வளவு இளக் காரமா?'' என்கின்றார் மதுரை ஊமச்சிக்குளத்தில் பணிபுரியும் போலீஸார் ஒருவர்.
இதேவேளையில், சமூக வலைத்தளங்களில், ""முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் அய்யாவுக்கும் காவல்துறையினரின் கடிதம்!'' என தலைப்பிட்டு, "காவலர்கள் ஓய்வில்லாமலும், தூக்கமில்லாமலும் உழைத்து உழைத்து மரணம் அடைந்துவருகின்றனர். மற்ற துறைகளைவிட காவல்துறையில் மரணங்கள் மலைபோல் குவிகிறது. இந்த துயர நேரத்தில் ஆறுதல் சொல்லி காவல் துறையை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் பணி வரையறை செய்யப்படாத இச்சூழலில் இரவுப் பணி பார்த்த காவலர்களை பரேடுக்கு வாரத்தில் 2 நாள் காலை வரச் சொல்லி மன அளவிலும் உடல் அளவிலும் வேதனைப் படுத்தி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் காவல் துறையினரின் நிலை கேள்விக் குறிதான்'’ என காவலர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் பேசிவருகின்றனர்.
டிஜி.பியை மிஞ்சி சிறப்பு டி.ஜி.பி. அதிகாரம் செலுத்தும் நிலையில், மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சிறப்பு டி.ஜி.பி.யே டி.ஜி.பி. யாகிவிடுவார். அதன்பின் காவலர்களின் நிலை என்னவாகும் என யோசித்து, அ.தி.மு.க.வைத் தவிர்த்து மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப்போட திட்டமிட்டுவருகிறார்கள். பேட்ச் வாரியாக அனைவரும் இணைந்து காவலர்களுக்கு எந்த ஆட்சி வந்தால் நல்லது, கெட்டது என தீவிர மாகப் பேசிவருகிறார்கள். இவையெல்லாம் அவர்களின் வாட்ஸ்ஆப் குரூப் தகவல் மூலமே பரவுகிறது.
ஓய்வில்லாத தொடர் பணி! சொந்த விசேஷங்களுக்கு விடுப்பு கிடையாது! மேலதி காரிகளின் சட்டவிரோத போக்கு! ஆர்டர்லி வேலை! அரசியல்வாதிகளின் தலையீடு இவையே நம்மைக் கொல்கின்றது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு போலீஸாரும் மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப் பிக்கவேண்டும் என்பது தற்பொழுது வரை வெறும் வாய்ச்சொல்லாகவே இருக்கின்றது. அதைச் சரிசெய்திருந்தால் பாதிக்கு மேற்பட்ட மரணங்களை தவிர்த்திருக்கலாம்.
தமிழக காவல்துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரிய போலீஸார் அனைவருக்கும் உரிமை உள்ளது. (3 ஆண்டுகள் மட்டுமே ஒரு பிரிவில் பணியாற்ற வேண்டும். நிர்வாக உத்தரவும் அதுதான்) போலீஸார் தங்களுக்கான உரிமைகள், சலுகைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு, தற்கொலை எண்ணத்தைத் தவிருங்கள். நம்மை அடிமை என நினைக்கும் கொத்தடிமைகளுக்கு பாடம் புகட்ட அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள் இதுதான் 2021-ல் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியது'' என்பன குறித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர் போலீஸார்.
""இந்த அரசு நான்காவது போலீஸ் கமிஷன் அமைப்பதாகக் கூறியது. இதுவரை அதற்கான முன்னேற்பாடுகள்கூட நடைபெற வில்லை. அதுபோல் ஓய்வுபெற்ற காவலர் நலவாரியம் அமைப்பதாகக் கூறினார்கள். அதுவும் பேச்சளவில்தான் உள்ளது. முன் னாள் தமிழக முதல்வர் கலைஞர் காலத்தில் தான் போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேறின. அவர் கொண்டு வந்த ஏஞ 15/டஞப்/ஐஞஙஊ/2010-ன் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு முன்தேதியிட்டு பண பலன்களும் பதவி உயர்வுகளும் வழங்க வேண்டும். இதை உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. மறுக்கின்றது.
காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஒழிய ஆர்டலி முறை ஒழியவேண்டும். பணியின்போது போலீஸாரின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்போ, குறைந்தபட்சம் பென்சன் தொகை ரூ7200-வது வழங்கவேண்டும். இதையெல்லாம் நிறைவேற்றி போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாளாவது ஓய்வுகொடுக்கும் பட்சத்தில் போலீஸாரின் உயிர் பிழைக்கும்'' என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி செல்வழகன்.