வரிசையாக தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் தி.மு.க. உடனான கூட்டணியில் ம.தி.மு.க., வி.சி.க. இல்லை என்ற தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் கருத்து, அரசியல் விவாத நெருப்பைப் பற்ற வைத்தது. அதைத் தணிக்கும் முயற்சி என்பதுபோல் ஸ்டாலின்-திருமா சந்திப்பு அமைந்தது. இந்நிலையில், திருச்சியில் வரும் டிசம்பர் 10-ல் ‘நடைபெறவுள்ள "தேசம் காப்போம்'’மாநாட்டுப் பணியில் பரபரப்பாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.…
கஜா ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் பார்வையிட்டு வந்திருக்கிறீர்கள். மக்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது?
திருமா: தொடர்ச்சியான மாநாட்டுப் பணிகளால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. நவ. 26-ஆம் தேதி புதுக்கோட்டை ஆலங்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பார்வையிட்டேன். உணவு, மின்சாரம் என எந்தவிதமான நிவாரணமும் சென்று சேரவில்லை. மத்தியக் குழுவினர் நடத்திய ஆய்வும் மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இந்த பேரிடர் சூழலில் தி.மு.க. உடனான கூட்டணி பற்றிய சலசலப்பு கிளம்பியிருக்கிறதே?
திருமா: இது யூகங்களால் கட்டமைக்கப்படும் சலசலப்பு. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்லாமல் உருவாக்கிய மக்கள்நலக் கூட்டணி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு, தேர்தல் கூட்டணியாக அல்லாமல் போராட்டங்களில் மட்டுமே மக்கள்நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் செயல்பட்டு வருகிறோம். அதேபோல், பல்வேறு பிரச்சினைகளில் தி.மு.க.வோடு இணைந்து தோழமை உணர்வோடு குரலெழுப்புகிறோம். இது தேர்தல் கூட்டணியாக மாறவேண்டும் என்பது எங்களது விருப்பம். இதைத்தான் துரைமுருகனும் கூறியிருக்கிறார். இதில் எந்தவித எதிர்மறைக் கருத்துகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
மு.க.ஸ்டாலினுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக சந்திப்பு நடந்ததா?
திருமா: கூட்டணி பற்றி இப்போது பேசவேண்டிய தேவையே இல்லை. திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாடு பற்றிய ஆலோசனைகளைக் கேட்கத்தான் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினேன். தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தி.மு.க. தனது நிலைப்பாடை வெளிப்படுத்தும்.
நீங்கள் தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியைக் கேட்பதாக சொல்லப்படுவது உண்மையா?
திருமா: 1999, 2004, 2009, 2014 என வழக்கமாக சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிட்டிருக்கிறேன். இந்தாண்டும் இதே தொகுதியில் நிற்பீர்களா? என செய்தியாளர் கேட்டதற்கு, “"சிதம்பரம் என் சொந்தத் தொகுதி. எனக்கான வாக்குகள் இருப்பதால் இங்குதான் போட்டியிடுவேன்'’’ என்று சொன்னேன். தி.மு.க.வுடன் தோழமையாக இருந்தாலும், கூட்டணி பற்றிய அறிவிப்பை அதன் தலைமைதான் வெளியிடமுடியும். என் விருப்பத்தைத் தெரிவித்ததில் தவறில்லை. தி.மு.க., காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்று சொல்வதற்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குவங்கி சிதறிவிடக்கூடாது என்பதுதான் அடிப்படைக்காரணம். ஆகவே, நிலைப்பாட்டை அறிவித்தேனே தவிர, கூட்டணி தர்மத்தை சிதைக்கவில்லை.
"தினகரனுடனான உங்களின் திடீர் சந்திப்பு கூட்டணிக்கானது' என்ற விவாதம் கிளம்பியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திருமா: புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை கொத்தமங்கலம் எனும் பகுதியில் மக்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அதேசமயத்தில், டி.டி.வி.தினகரனும் அங்கு வந்திருந்தார். மக்களிடத்தில் பேசிவிட்டு தினகரனைச் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்தினேன். உடனே, தி.மு.க. உடனான உறவு முறிந்தது. தினகரனுடனான கூட்டணிக்காக திருமாவளவன் முயற்சிக்கிறார் என்ற விவாதங்கள் கிளம்பிவிட்டன. ஒருவரைப் பார்த்துப் பேசுவதே தேர்தல் கூட்டணிக்காகத்தான் என்று நினைப்பது தவறு.
திருச்சியில் வி.சி.க. நடத்தும் மாநாட்டின் மைய நோக்கம் என்ன?
திருமா: நாங்கள் சனாதனத்தின் மீது கை வைக்கிறோம். கர்வாப்சி, பசுப்புனிதம், தாய் மதத்திற்கு மாறச்சொல்லி சிறுபான்மையினரை மிரட்டுவது, சபரிமலையில் பெண்களை மறுப்பது, உடன்கட்டை எனும் சதியை ஆதரிப்பது என சனாதன சக்திகளின் போக்கு நாளுக்குநாள் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான், தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொள்ளும் விதமாக வி.சி.க. இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. பெரியார், அம்பேத்கர் மொழியில் சொல்லவேண்டுமானால் இது பார்ப்பனீயத்திற்கு எதிரான நிகழ்வு.
கடுமையான தண்டனை விதிக்கப்பட்டாலும் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையே?
திருமா: சாதி ஆணவப்படுகொலை புதிய நடைமுறை கிடையாது. இது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, அழித்தொழிக்கப்பட வேண்டியது. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் கூறிய செயல்பாடுகளை, கருத்துகளை ஆதரிப்பதோடு, மக்களிடத்திலும் வெகுவாக எடுத்துச் செல்கின்றன. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்தை வேரறுக்காமல் சாதிக்கொடுமைகளையோ, ஆணவக்கொலைகளையோ தடுக்கமுடியாது.
இருந்தபோதிலும் சாதி மறுப்புத் திருமணங்களிலும் இளைஞர்களின் ஆர்வம் கூடியிருக்கிறதுதானே?
திருமா: ஒப்பீட்டளவில் இது மிகக்குறைவு. இந்த சிறிய மாற்றத்தை வரவேற்கிறோம். ஆனால், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தலித் இயக்கங்களும், இடதுசாரிகளுமே குரல்கொடுக்க வேண்டும் என்கிற நிலைமாறி, சாதி ஒழிப்புக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் அனைவரும் வீதிக்கு வரவேண்டும்.
சந்திப்பு : -பெலிக்ஸ்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்
படங்கள்: பாலாஜி