தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், மா.செ.க்கள் தேர்தலை அறி வித்துள்ளது தி.மு.க. தலைமை. அமைச்சரைவிட கட்சியின் மா.செ. பதவிதான் பவர் ஃபுல் என்பதால் தற்போதைய மா.செ.க்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், மா.செ. பதவியைத் தட்டிப் பறிக்க இளைஞரணி நிர்வாகிகளும் பகீரத முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருக்கும் இந்த காலக்கட்டத்தில் மா.செ.க்களின் செயல்பாடுகள், மக்களுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள், கட்சியினரிடமுள்ள நெருக்கம் குறித்தெல்லாம் ஒரு சர்வே எடுத்திருக்கிறது முதல்வர் குடும்பம்.
இதில் 25 சதவீதம்தான் குட் ரெக்கார்டிலும், 25 சதவீதம் பரவாயில்லை; ஓ.கே. என்பதாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மாற்றப்பட வேண்டும் என்றும் சர்வே சொல்கிறதாம். இதற் கிடையே, இளைஞரணியினரை மா.செ.வாக நியமிக்க வேண்டும்; செயல்படாத சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று ஸ்டாலினிடம் உதயநிதி கோரிக்கை வைத்திருப்பதாக இளைஞரணி வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
அவர்களிடம் நாம் பேசியபோது, "மா.செ.க்கள் மாற்றம் அவசியம்; அதனை தலைவர் (ஸ்டாலின்) செயல் படுத்த வேண்டும். இன்றைக்கு, சீனியர்கள் பலரும் அமைச்சர் களாகவும் மா.செ.க்களாகவும் இருக்கின்றனர். அவர்களிட மிருந்து ஏதேனும் ஒரு பதவியை பறிக்க வேண்டும்''’என்று அழுத்தமாகச் சொல்கின்றனர் தி.மு.க. இளைஞரணியினர்.
இது ஒருபுறமிருக்க, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர் கள் வரை ஒருவித அதிருப்தி வெடித்தபடி இருக்கிறது. இது குறித்து தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் பலரிடம் நாம் பேசியபோது, "ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிறது. அமைச் சர்களும் சில எம்.எல்.ஏ.க்களும் தவிர, கட்சியின் 99 சதவீத உடன்பிறப்புகள் திருப்தியாக இல்லை. 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்தபோது கைக்காசை செலவழித்து போராட்டம், பொதுக்கூட்டம் என நடத்தியவர்களுக்கு தற் போது பொருளாதார வசதியும் இல்லை. மரியாதையும் இல்லை.
அமைச்சர்களும் அவர் களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.க் களும் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. கட்சிக்காரர்கள் இன்னமும் கடன்காரர்களாகவும், கடனுக்கு வட்டி கட்டுபவர் களாகவும்தான் இருக்கிறோம். இது குறித்து எம்.எல்.ஏ.விடம் சொன்னால், "எனக்கே எந்த காரியமும் நடக்கலை; அமைச்சரிடம் கேட்டுக்கோ' என்று நிராகரித்துவிடுகிறார்.
அமைச்சரை அணுகினால், "நானே பவரில்லாத அமைச்ச ராகத்தான் இருக்கேன்; தலைவரின் குடும்பத்தையும், அதிகாரிகளையும் கைகாட்டி, அவர்களை நெருங்க முடிந்தால், அவர்களிடம் உதவி கேளுங்கள்' என சொல்லி அனுப்பிவிடு கிறார்கள். அதிகாரிகளைச் சந்தித்து சில ட்ரான்ஸ்ஃபர்கள், வேலைவாய்ப்புகள், சின்னச் சின்ன காண்ட்ராக்டர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தால், கட்சிக்காரனை அதிகாரிகள் மதிப்பதே இல்லை. சின்னச் சின்ன காண்ட்ராக்ட் தொடங்கி, டாஸ்மாக் பார், மணல் பிஸ்னெஸ் எதுவுமே அடிமட்ட நிர்வாகிகளுக்கு கிடைக்காததால் விரக்தி அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலில், அரசின் அனைத்துத் துறை களையும் கணக்கிட்டால் காலிப் பணியிடங்கள் 3 லட்சம் இருக்கிறது. இதனை நிரப்பு வதற்கு அரசு முயற்சிக்க வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப் பணியிடங்களை நிரப்புவோம்; கூடுதலாக 2 லட்சம் பணியிடங்களை உருவாக்குவோம் என்று நாம் வாக்குறுதி தந்திருக்கிறோம். ஆனால், இதில் அக்கறை காட்டவில்லை.
மாறாக, 5 ஆண்டுகளாக நிரப்பப்படாத நிரந்தரப் பணியிடங்களையும், 10 ஆண்டுகளாக உள்ள தற்காலிகப் பணியிடங்களையும் ரத்து செய்வதற்கு முதலமைச்சரிடம் (ஸ்டாலின்) கோரிக்கை வைத்துள்ளது நிதித்துறை. அதனை ஏற்றுக்கொண்டு, ரத்து செய்யலாமா என 3 நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார் முதல்வர். கட்சிக்காரர்களின் சிபாரிசும் பொதுமக்களின் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பும் நிறைவேறாவிட்டால் ஆட்சி மீது எப்படி நம்பிக்கை வரும்.
நாடாளுமன்றத் தேர்த லுக்கு இன்னும் 19 மாதங் கள்தான் இருக்கின்றன. தி.மு.க.வுக்கு 100 சதவீத வெற்றி கிடைத்தால்தான், தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கிற மத்திய அரசுக்கு ஒரு பயம் வரும். அந்த வெற்றி கிடைக்க கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அவர்கள் விரக்தியும் அதிருப்தியும் அடைந்தால் வெற்றி சாத்திய மில்லை''‘என்று தங்களின் ஆதங்கங்களையும் கட்சியில் நடக்கும் நிதர்சனங்களையும் சுட்டிக்காட்டினார்கள்.
இந்த அதிருப்தி குறித்து சில அமைச்சர்களிடமும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடமும் பேசிய போது, "எங்களால் வெளிப்படையாக பேட்டிதர இயலாது. ஆனால், நீங்கள் சுட்டிக்காட்டுகிற அதிருப்திகள் கடந்த 8 மாதங்களாக கட்சிக்குள் வேரூன்றியிருப்பது மட்டும் நிஜம். அமைச்சர்கள் நினைத்தாலும் கட்சிக்காரர்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை. ஏனெனில், அதிகாரம் வேறிடத்தில் இருக் கிறது.
அ.தி.மு.க. ஆட்சி யின்போது, உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருந்த தி.மு.க.வினர் பலர் தற்போதைய ஆட்சியிலும் ஜெயித்து தலைவர்களாக இருக்கிறார்கள். முன்பு 5% அளவில் இருந்த கமிஷன் இந்த ஆட்சியில் 10% அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஒன்றிய முக்கியஸ்தர்கள் இவர்களிடம் கறார் காட்டுகின்றனர். சொந்தக் கட்சிக்காரனிடமே கமிஷனா என்ற புலம்பலைக் கேட்கிறோம்'' என்கி றார்கள்.
"நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்கிறார் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். கட்சியின் உள்நிலவரம் அதற்கேற்றதாகத் தெரியவில்லை.