கடந்த 2001-ஆம் ஆண்டு புதுதில்லியில் நடை பெற்ற விழா ஒன்றில், சுய உதவிக் குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு 'ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் - மாதா ஜீஜாபாய்' விருது வழங்கியதுடன், அவரது காலிலும் விழுந்து வணங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி னார் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.
அதன்பின்னர், தற்போது பிரதமர் மோடியின் 'அனைவருக்கும் வீடு' கட்டும் திட்டத்தில், வீடு கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பட்டா கொடுத்த பின்னரும், இன்றுவரை வாக்களித்தபடி தனக்கு வீடு கட்டித் தரவில்லை என கண்ணீர்மல்கச் சொன்னார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பில்லுசேரி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவிதான் சின்னப்பிள்ளை. கிராமத்திலுள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச்சென்று, வேலை முடிந்த பின்னர் அவர்களுக்குரிய கூலியை நில உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாகப் பெற்று, ஒவ்வொரு பெண் களுக்கும் பிரித்துத் தரும் கொத்துத் தலைவியாக இயங்கியவர். சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடும் நிதி நிறுவனங்களுக்கு மாறாக, நம்பிக்கையூட்டும்வித மாக "களஞ்சியம்' என்ற சுயஉதவிக் குழுக்களுக்கான அமைப்பை ஏற்படுத்தியவர். அதன்பால் ஈர்க்கப் பட்டு, தன்னைப்போலுள்ள ஏழை, எளிய, அடித்தட்டுப் பெண்களை எல்லாம் சிறு சிறு குழுவாக இயங்க வலியுறுத்தி, தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு களஞ்சியம் அமைப்பு பெருவிருட்ச மாக வளரக் காரணமாக இருந்தார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு "ஸ்த்ரீ சக்தி' விருதுக்குப் பிறகுதான், இவரது பில்லுசேரி கிராமத்திற்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்துகொடுக்கப்பட்டன. தனது குடியிருப்புப் பகுதியில் இருந்த பல்வேறு குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கு சின்னப் பிள்ளையே முன்னின்று முயற்சி மேற்கொண்டார்.
தனது மூத்த மகன் சின்னத்தம்பியின் வீட்டில் தற்போது வாழ்ந்துவரும் சின்னப்பிள்ளைக்கென்று இதுவரை சொந்த வீடு இல்லை. சின்னத்தம்பியைப் போலவே இளையமகன் கல்லுவடியானும் விவசாயக்கூலியாக இருக்கிறார். இந்நிலையில் சின்னப்பிள்ளை நம்மிடம் "ரெண்டு வருசத்துக்கு முந்தி, ஒரு பத்துப்பேர் என் வீட்டுக்கு வந்தாங்க. நாங்க பா.ஜ.க.வைச் சேர்ந்தவங்க. மோடி திட்டத்துல வீடு கட்டித்தருவோம், நாங்க இருக்கிறோம்னு மோடி படத்தை என்னிடம் கொடுத்து போஸ் கொடுக்கச் சொன்னாங்க. அதெல்லாம் வேண்டாம்பா நான் எந்த கட்சியும் இல்லைப்பா பொதுவானவ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எனக்கு பொன்னாடை யெல்லாம் போத்தி போட்டோ எடுத்துட்டுப் போனாங்க. அதுக்குப்பிறகு எந்த தகவலும் இல்ல. ஒருநா... மேலூர் தாசில்தாரம்மா அவங்க உதவியாளரோட வந்து இந்தப் பத்திரத்தைக் கொடுத்துட்டு அப்பன்திருப்பதி பக்கத்துல வீடு கட்ட இடம் ஒனக்கு ஒதுக்கியிருக்காங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. இப்ப ரெண்டு வருசம் ஆகுது. ஆனா, இதுவரைக்கும் வீடு கட்டித் தரல'' என்று சொல்லி வீட்டுப் பத்திரத்தை நம்மிடம் காட்டி ஆதங்கப்பட்டார்
அழகர்கோவில் சாலையிலுள்ள அப்பன் திருப்பதியிலிருந்து சின்னப்பிள்ளை வசிக்கும் பில்லுசேரி கிராமம் சற்றேறக்குறைய 5 கி.மீ. தூரமாகும். முதலுதவிக்கான ஆரம்ப சுகாதார மையம்கூட இங்கு கிடையாது. அருகி லுள்ள மாத்தூர் ஊராட்சிக்குத்தான் செல்லவேண்டும்.
சின்னப்பிள்ளை மேலும் கூறும் போது, "எனக்கு ஏதாவது மேலுக்கு முடியாமப் போனா, என்னோட பேரப்புள் ளைங்கதான் வண்டில கூட்டிட்டுப் போவாங்க. அவசர ஆத்திரத்துக்கு போக, வர முடியாது. இப்ப இவங்க கொடுத்துருக்கற இடம், அப்பன்திருப்பதி மெயின் ரோட்டுலதான் இருக்கு. அதனால அங்கேயே வீடு கட்டிக் குடுத்துட்டாங்கன்னா... எனக்கு ரொம்ப வசதியா போகும். முன்ன மாதிரி நடக்க முடியல. சர்க்கரை, பிரசரு, தைராய்டுன்னு ஏகப்பட்ட நோய்ங்க. அதுக்கு அடிக்கடி அப்பன் திருப்பதில இருக்கற ஆஸ்பத்திரிக்குதான் போறேன். எனக்கு ஒதுக்கியிருக்குற எடத்துல உடனடியா ஒரு வீட்ட கட்டிக் கொடுத்தாங்கன்னா புண்ணியமா போகும் சார்..'' என்கிறார்.
நாம் மாத்தூர் ஊராட்சி அலுவலகம் சென்று கேட்டபோது, "பாரதப் பிரதமர் மோடியின் வீடு கட்டித் தரும் திட்டத்தில்தான் சின்னப்பிள்ளைக்கு ஒதுக்கீடாகியுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டு களாகவே இங்கு அத்திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால், சின்னப்பிள்ளைக்குத் தாமதமாகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் முன்னுரிமையின் அடிப் படையில் சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித்தரு வோம்'' என அலுவலர்கள் தட்டிக் கழித்தனர்.
இந்நிலையில் இந்த செய்தி நக்கீரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியானதும், தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து விபரங்களைக் கேட்டறிந்த முதல்வர், "உடனடியாக "கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் எனவும், இந்த மாதமே அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்'' எனவும் அறிவித்தார்.
"இப்போதுதான் அறிவிப்பைக் கேள்விப்பட் டேன் மகிழ்ச்சி. நம் வலி, நம்ம பிள்ளைக்குதான் புரியும் என்பதை உணர்ந்தேன்'' என்றவர் “"கலைஞர் அய்யாவின் மகனுக்கு நீண்ட ஆயுளை அந்த கருப்பணசாமி கொடுக்கவேண்டும்...”நன்றி!'' என்றார் குரல் தழுதழுக்க.