இடைத்தேர்தல் நடைபெறும் மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே ஒட்டப்பிடாரமும் கரன்சியால் பளபளக்குது, அமைச்சர்களின் கவனிப்பால் ஜிலுஜிலுக்குது. தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மற்ற அமைச்சர்களான காமராஜ், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி, மணிகண்டன் என ஏழு மந்திரிகளும் தலா 10 கோடி என ஃபிக்ஸ் பண்ணிக்கொண்டு தொகுதியை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.
தனித்தொகுதி என்றாலும் தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் பட்டியலின மக்களுக்கு அடுத்தபடியாக நாடார்கள், யாதவர்கள், தேவர்கள் ஓட்டுக்கள் வரிசை கட்டுகின்றன. அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்காக, அமைச்சர்கள் பட்டாளத்துடன் பு.த.கிருஷ்ணசாமியும் கைகோர்த்திருப்பதால், சவலாப்பேரி, மருதன் வாழ்வு, கொல்லங்கிணறு, கொடியங்குளம் பகுதிகளில் பட்டியலின வாக்குகளை மொத்தமாக பர்சேஸ் செய்கிறது ஆளும் தரப்பு. என்னதான் பணம் தண்ணீராகப் பாய்ந்தாலும் தொகுதிக்குட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை உயிர்ப்பலிகளும் எடப்பாடி ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையும் இலைத்தரப்பை கவலைக்குள்ளாக்குகிறது.
முதல்முறை மூன்று நாட்களும், கடந்த 14-ஆம் தேதியும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டுப் போனபின்பு, வேட்பாளர் சண்முகையா மற்றும் சூரிய முகாமில் சுறுசுறுப்பு தெரிந்தாலும் கரன்சி சப்ளை நொண்டியடிக்கிறது. இதேபோல் தொகுதிப் பொறுப்பாளரான கே.என்.நேரு, தான் தங்கியிருக்கும் ரிசார்ட்டைவிட்டு அவ்வளவாக வெளியே வருவதில்லை. தினகரன் பக்கம் முழுவதுமாக சாயும் முக்குலத்தோர் ஓட்டுக்களை சூரியனுக்கு இழுக்கும் வேலைகளில் மும்முரம் காட்டுகின்றனர் கருப்பசாமி பாண்டியனும் மாஜி சபா ஆவுடையப்பனும்.
இதேபோல் "நாடார் சமூக வாக்குகளுக்கு நான் கியாரண்டி' என்கிறார் தி.மு.க. மா.செ. அனிதா ராதாகிருஷ்ணன். தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுக்களை கவர அமைச்சர் கடம்பூர் ராஜு களம் இறங்கியதும், தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தெலுங்கு மக்களுடன் சாதகமாகப் பேசி அசத்தி வருகிறார். தொகுதிக்குட்பட்ட காயல் ஊரணி அ.தி.மு.க. பிரமுகரின் பாலியல் கொடுமையை 2012-ல் வெளிச்சம் போட்டுக் காட்டிய வகையில், தொகுதியில் பரவலாக அறியப்பட்டவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். முடிவைத்தானேந்தல், புதுக்கோட்டை பகுதிகளில் இருக்கும் 34 ஆயிரம் பிள்ளைமார் ஓட்டுக்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறது.
அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தி, இரு கட்சிகளையும் கதிகலக்கி வருகிறார் தினகரன். வல்லநாடு, முறப்பநாடு, மணியாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரியாக்களின் முக்குலத்தோர் ஓட்டுக்களால் தெம்பாக இருக்கிறார் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ். இதேபோல் குலையன்கரிசல் பகுதி இஸ்லாமியர்களில் பெரும்பான்மையோர் பரிசுப் பெட்டிப் பக்கம் நிற்கின்றனர்.
மும்முனைப் போட்டி மாதிரி தெரிந்தாலும் இலையும் சூரியனும் சமபலத்தில்தான் இருக்கின்றன.
-பரமசிவன், நாகேந்திரன்