அட்ராசக்கை கவனிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் 528 வாக்குகள் உள்ளன. இங்கு தி.மு.க. பரூக், அப்துல் கரீம், சுயேட்சை பிருத்விராஜ், அ.தி.மு.க. இப்ராம்ஷா, நாம்தமிழர், லெனினிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். வார்டில் வெற்றிபெற சுயேட்சை வேட்பாளர் பிருத்விராஜ் முதல்கட்டமாக ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற இரு வேட்பாளர்களும் தங்கள் பங்குக்கு 5 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதையறிந்த பிருத்விராஜ் 2-வது கட்டமாக ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுக்க, அப்துல் கரீமும் 2 ஆயிரம் கொடுத்தார்.

Advertisment

3 வது தவணையாக பிருத்விராஜ் சில்வர் குடம், பட்டுப்புடவை, பித்தளை குத்துவிளக்கு, 25 கிலோ அரிசி, சில்வர் தாம்பூலம் அதில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, அரைக்கிலோ பழனி பஞ்சாமிர்தம் கொடுத்து வெற்றி பெற்றார்.

தி.மு.க. வேட்பாளர் பரூக் ரூ.5 ஆயிரம் மட்டுமின்றி காமாட்சி விளக்கும் இஸ்லாமியர் வீடுகளுக்கு போர்வையும் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த ஒரு மாநகராட்சியிலும் கிடைக்காத தொகை கறம்பக்குடி 7-வது வார்டு வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

-இரா.பகத்சிங்

vv

Advertisment

சிவகாசி விடியவிடிய கரன்ஸி மழை!

சிவகாசி மாநகராட்சியில் 40-வது வார்டு, வி.ஐ.பி. வார்டு என்பதால், ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்ததில், போட்டா போட்டி. அ.தி.மு.க. தரப்பில் முந்திக்கொண்டு ஓட்டுக்கு ரூ.1000 வீதம் கொடுத்தார்கள். அவர் களைத் துரத்திக் கொண்டு தி.மு.க. தரப்பில், அதே ரூ.1000 தந்தனர். ஆனாலும், சம அளவில் பணப் பட்டுவாடா, யாருக்கு ஓட்டு போடுவது என முடிவெடுப்பதில் வாக்காளர் களின் மனதைக் குழப்பும் என்பதால், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு தி.மு.க. தரப்பு கூடுதலாக ரூ.500 தந்தது. அ.தி.மு.க. தரப்பும் விடவில்லை... பொழுது விடிவதற்குமுன் அதே ரூ.500 தந்தது, கூடவே ரூபாய் 400 மதிப்புள்ள சேலையும் தந்தது. மசாலா பொருட்களுக்கான வெற்றி கூப்பனும் தந்தனர்.

சிவகாசி மாநகராட்சி மட்டுமல்ல, விருதுநகர் மாவட்ட நகராட்சிகள் அனைத்திலுமே, பெரும் பாலான வார்டுகளில் பட்டுவாடா அக்கப்போர் தான். வேட்பாளர் தரப்பில் வீடு வீடாக நேரடியாகவே போய் பணம் விநியோகித்தது ஒரு ரகம். வாக்காளர் பட்டியலைச் சரி பார்த்து, ஒரு இடத்துக்கு வரவழைத்து டோக்கன் தந்து, குறிப்பிட்ட வாக்காளரே போய் அந்த டோக்க னைத் தந்து பணம் பெறச் செய்தது இன்னொரு ரகம். யார், யார் தனக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து, அந்த வாக்காளர்களுக்கு மட்டுமே பணம் தந்தது இன்னொரு ரகம். பல இடங்களில் வேட்பாளரின் பணம் வாக்காளர் களிடம் போய்ச் சேராமல் சுருட்டுவதும் நடந்தது.

ஆக, ஓட்டுக்கு பணம் என்பது ஒரு நடைமுறையாகிவிட்டது. என்ன ஜனநாயகமோ?

-ராம்கி

c

தங்கக் காசு, பண்ட பாத்திரம்! -கடைசிநிமிடம் வரை கவனிப்பு

முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் 4-வது வார்டிலும், முன்னாள் மேயர் மருதராஜ் மகன் பிரேம் 8-வது வார்டிலும் போட்டி போட்டதால், திண்டுக்கல் மாநகராட்சியில் 4-வது வார்டிலும் 8-வது வார்டிலும் போட்டி கடுமையாக இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க. தரப்புக்கிடையே அடிக்கடி மோதல் உருவாகும் நிலையிருந்தது. 28-வது வார்டில் போட்டி போட்ட விடுதலை சிறுத்தைகள், வாக்காளர்களுக்கு வெளிப்படை யாகவே பணம் விநியோகித்ததுக்கெதிராக, அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அய்யலூர் பேரூராட்சியில் 10-வது வார்டில் போட்டி போட்ட ஆறுமுகம் வாக்காளர்களுக்கு தங்கக் காசு பட்டுவாடா செய்திருக்கிறார். பல வார்டுகளில் பணத்தைத் தாண்டி, கொலுசு, பாத்திரங்கள் விநியோகமாகின. 102 வயதான மூதாட்டி தனத்தம்மாள் தடியைப் பிடித்தபடி தள்ளாடி ஓட்டுப் போட்டுவிட்டு வந்து, பணத்திற்கு விலை போகவில்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டுச்சென்றார்.

-சக்தி

கையும்களவுமாய்... கரன்ஸியுடன்!

குமரி மாவட்டம், கொல்லங்கோடு நக ராட்சியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் நேரடியாக மோதிய நிலையில், 16-வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டல்பாய் வெற்றிபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. இந்நிலையில், கடைசிக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தவிர மற்ற கட்சிகள், ஓட்டுக்கு 200, 300, 500 எனப் பட்டுவாடாவில் இறங்கியதால், வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவாகியது. இதனால் அதிர்ச்சியடைந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கிறிஸ்டல்பாய், பணம் வாங்கி மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டதால், யாராக இருந்தாலும் பணம் கொடுத் தால்தான் வெற்றிபெற முடியுமென்றாகிவிட்டது. எனவே நாமும் அதேபோல் மாறிடலாமென்று முடிவெடுத்து, வாக்குப் பதிவுக்கு முந்தின நாள் மாலை நித்திரவிளையில் கல்லுவெட்டான்குழி பகுதியைச் சேர்ந்த 125 ஓட்டுகளுக்கு பணம் பட்டுவாடா செய்யும்போது, பறக்கும்படையினரால் கிறிஸ்டல்பாய், மெர்லின், மாதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

vv

பட்டுவாடாவில் சொதப்பல்!

நாகர்கோவில் மாநகராட்சி 6-வது வார்டில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி. மு.க. கட்சியினர், தலைக்கு 1,000 ரூபாய் என முடி வெடுத்து, வாக்குப் பதிவுக்கு முந்தினநாள் தெருத் தெரு வாக பணப் பட்டுவாடாவை நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சியில் மட்டும் அனைவருக்கும் பட்டுவாடா செய்யாமல் ஆள் பார்த்துப் பார்த்துப் பட்டுவாடா நடந் திருக்கிறது. காங்கிரஸி லிருந்து பணம் வருமென்று எதிர்பார்த்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால், காங்கிரசுக்கு வாக்களிக்க நினைத்தவர்கள் மத்தியில் அதிருப்தியாகியுள்ளது.

இந்த விஷயம், காங் கிரஸ் வேட்பாளர் அனுஷா பிரைட்டுக்குத் தெரியவர, மறுநாள் வாக்குப்பதிவின் போது காலையிலேயே வெட்டுர்ணிமடம் வாக்குச் சாவடிப் பக்கம் வந்த அனுஷா பிரைட், இதுவரை பணம் பெறாத வாக்காளர் களுக்கு 500 ரூபாயை மறை முகமாகக் கொடுத்திருக் கிறார். இது மற்ற கட்சியின ருக்குத் தெரியவர, அதிகாரி களிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் உட னடியாக நடவடிக்கை எடுக் காததால் அதிகாரிகளைக் கண்டித்து கூச்சல் எழுப்பி னார்கள். இந்த களேபரத்தால் கடுப்பான அனுஷா பிரைட், வாக்காளர்களுக்கு வழங்கக் கொடுத்த பணத்தை லவட்டிய நிர்வாகிகளைத் திட்டித் தீர்த்திருக்கிறார்.

-மணிகண்டன்

கோவை! வேலுமணியின் அழுகுணி ஆட்டம்

"கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றினால் கட்சியில் நமக்கு மதிப்பு இருக்காது'' என இமேஜை தக்கவைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து அழுகுணி ஆட்டத்தினை அரங்கேற்றியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

கோவை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதமாக ஜெ. நினைவு நாள், எம்.ஜி.ஆர். பிறந்தநாள், நன்றி அறிவிப்புக் கூட்டம் என கட்சியின் ஒவ்வொரு விழாவிலும் பணம், சேலை, சில்வர்குடம் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கி தனக்கான பகுதியாக மாற்றியமைத்திருந்தது முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான டீம்.

இருந்தும் தேர்தல் நிலவரம் எதிராகச் செல்வதைக் கண்ட வேலுமணி, வெளியூர் ஆட்கள் கோவையில் இருக்கின்றார்கள். அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென வியாழக்கிழமை இரவில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். தன்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், செல்வராஜ் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்களையும் வரவழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலக போர்டிகோவில்நுழைந்த வேலுமணி, "நேற்று உங்களிடம் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுத்தீர்களா..?' இன்னும் வெளியூர் ஆட்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என கோஷங்களைப் போட்டு அழுகுணி ஆட்டத்தினைத் தொடங்கினார். உடனடியாக அங்கு வந்த கலெக்டர் சமீரன், காவல்துறை துணைக்கமிஷனர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையினை தொடங்கி வெளியூர்க்காரர்களை உடனே அனுப்பிவைப்பதாகக் கூறினர்.’

வந்த வேலை சப்பென்று முடிந்துவிட்டதே என்றெண்ணிய வேலுமணி தரையில் படுத்து உருள ஆரம்பித்து, துணை ராணுவம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். பொறுத்துப் பார்த்த காவல்துறை வேறு வழியில்லாமல், சரியாக மதியம் 2:30 மணிக்கு வேலுமணி உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கி வழக்குப் பதிவுசெய்து, இரவில் விடுவித்தது.

-நாகேந்திரன்

தி.மு.க. Vs போட்டி தி.மு.க.!

திருவண்ணாமலை நகராட்சியிலுள்ள 39 வார்டுகளில் 38 வார்டுகளில் பெரிய சச்சரவு எதுமின்றி தேர்தல் அமைதியாக நடந்தது. 25-வது வார்டில் கள்ள ஓட்டு போடுகிறார்கள் என பிரச்சினையாகி மறுதேர்தல் நடந்துள்ளது.

இத்தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட பழனி என்பவர் தனது மனைவிக்காக சீட் கேட்க, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பன் ஆதரவாளரான பாஸ்கரின் அம்மா முனியம்மாவுக்கு சீட் தரப்பட்டது. இதில் அதிருப்தியாகயிருந்த பழனி, தனது மனைவி ஸ்ரீதேவியை சுயேட்சையாக நிறுத்தினார், அவருக்கு பா.ம.க.வும் சப்போர்ட் செய்துள்ளது. இந்த வார்டில் 1590 வாக்குகள் உள்ளன. தி.மு.க. சார்பாக ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் பணம், வீட்டுக்கு ஒரு கிராம் தங்க மூக்குத்தி, பட்டுப்புடவை, வேட்டி, காமாட்சி யம்மன் விளக்கு தரப்பட்டிருக்கிறது. போட்டியாகக் களமிறங்கிய சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனியும் பதிலுக்குப் பதில், ஓட்டுக்கு ரூ.3,000, மூக்குத்தி, பட்டுப்புடவையென அள்ளித் தந்துள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க. சார்பில் தலா ரூ.1,000 தரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவில், சுயேட்சை வேட்பாளரின் தென்னை மரத்துக்கே அதிக வாக்குகள் விழுவதாகத் தெரியவர, கடுப்பான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள், கள்ள ஓட்டுப் புகாரளித்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், தேர்தல் அதிகாரிகளிடம் கள்ள ஓட்டுப் புகாரளித்து, மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று பேசி யிருக்கிறார். மேலும், முன்னாள் சேர்மன் தி.மு.க. ஸ்ரீதரன், வாக்குச்சாவடியில் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரைக் கொச்சையான வார்த்தை களால் திட்டுவதும், பா.ஜ.க. நிர்வாகியை அடிப்பதும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கெதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்தியது. இதுபோன்ற காரணங்களே அங்கு மறுதேர்தலுக்குக் காரணமாகிவிட்டது.

-து.ராஜா

vv

பெயர் மாறிப்போன சுயேட்சை!

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சியின் 17-வது வார்டில் சகிலாபானு என்கிற பெண் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வேட்பாளர்கள் பட்டியலிலும் இவரது பெயர் சசிகலா பானு என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ந்திருக்கிறார் சகிலாபானு. உடனே, சகிலாபானுவின் கணவர் சுலைமான், அத்தவறைச் சுட்டிக்காட்டி, தேர்தலை நிறுத்தும்படி பூத் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். வேறு வழியின்றி வாக்குப்பதிவு நிறுத்தப்பட, ஸ்பாட்டுக்கு வந்த கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சகிலாபானு என்று திருத்தம் செய்த பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்திருக்கிறது.

ரத்த பந்தத்துக்குள் ரத்தக்களறி!

தூத்துக்குடியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட மிகப்பெரிய 13வது வார்டில் அ.தி.மு.க.வில் அன்னபாக்கியமும், தி.மு.க. தரப்பில் ஜாக்குலின் ஜெயாவும் போட்டியிட்டனர். இவர்களிருவருமே ஒரே பெரிய குடும்பத்தைச்சேர்ந்த ரத்த உறவுகள். வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில், இக்குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் போதையில் தகராறு செய்துள்ளனர். அதனை மூர்த்தி என்பவர் தட்டிக் கேட்டதில் கைகலப்பாகி அடிதடியாகியிருக்கிறது. அதில் காயமடைந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆக, ஸ்ரீதர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இருதரப்பும் ஒரே ரத்த பந்தம் என்பதால், இந்த மோதல் சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் கமுக்கமாக வைத்துக்கொண் டார்களாம்.

-பி.சிவன்