அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா செயல்பட்டு வருவதாகவும் அதனால் சசிகலாவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தின் மூலம், தொலைபேசிமூலம் அ.தி.மு.க.வினரிடம் உரையாடல் நடத்துவதாக கூறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பச்சையா பிள்ளை தலைமை ஏற்க, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குமரகுரு, சசிகலாவுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். தீர்மானத்தை ஆதரித்து அனைவரும் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு, மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு, "சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க முடியாமல் தோல்வி அடைந்து உள்ளோம். அதற்குக் காரணம் பட்டியல் இனத்தவர் மற்றும் வன்னியர் வாக்குகள் நமக்கு அதிக அளவில் கிடைக்கவில்லை. இனிமேலாவது அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சிப் பணியாற்றவேண்டும்'' என்று பேச்சை ஆரம்பித்தார். அப்போது கோபாவேசத்துடன் எழுந்த தியாகதுருகம் ஒன்றியச் செயலாளர் ஐயப்பா, "நீங்க பேசுவதை நிறுத்துங்கள். கட்சி ஒற்றுமை குறித்து பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை'' என்றவர், "தலித்துகளையும் வன்னியர்களையும் ஓரங்கட்டிவிட்டு, நீங்கள் உங்கள் ஜாதியினருக்கும், உங்கள் எடுபிடிகளுக்கும் கட்சிப் பதவியை பார்த்துப் பார்த்து கொடுத்தீர்கள். கட்சிக்குப் பதில் ஜாதியை வளர்த்தால் எப்படி மற்றவர்கள் வாக்களிப்பார்கள்?
கடந்த 10 ஆண்டுகளில் உங்களோட சர்வாதிகார ஆட்டம் தாங்கவில்லை. முதலமைச்சருடன் உங்களுக்கு இருந்த நெருக்கத்தை கூறியே, எங்கள் அனைவரையும் பயமுறுத்தி வந்தீர்கள். நமது ஆட்சியில் கட்சிக்காரர்களுக்காக நீங்கள் எதுவும் செய்யவேயில்லை. நான் சொந்தச் செலவில் கட்சிக்காரர்களுக்கு நல்லது செய்கிறேன். நீங்கள் உங்களுடைய உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு மட்டும் வாரிச் சுருட்டிக்கொண்டு செய்தீர்கள். பேரூராட்சிகளில் 2,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ரூ.28 கோடி மதிப்பீட்டில் அரசு வழங்கியது. ஆனால் அதில் ஒரு வீடுகூட மற்ற தொகுதியில் உள்ள பேரூராட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. இதேபோன்று 50 லட்சத்தில் சிமெண்ட் சாலை, 90 லட்சத்தில் சிமெண்ட் சாலை, பாலங்கள் என அனைத்தையும் உங்கள் தொகுதிக்கே கொண்டுசென்றீர்கள். இவ்வளவு திட்டமிட்டு காய் நகர்த்தியும் உங்களாலேயே இம்முறை வெற்றிபெற முடியவில்லை'' என்றெல்லாம் குற்றம்சாட்ட... மாவட்டச் செயலாளர் வாயடைத்துப்போனார்.
"தலித், வன்னியர் வாக்குகள் விழாததே காரணம்' என்று மீண்டும் குமரகுரு பதில்கூற, ஐயப்பா உள்ளிட்ட ஒன்றியச் செயலாளர்கள், "நீங்கள்தான் திருக்கோவிலூர் தொகுதியில் தி.மு.க. பொன்முடி வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க.வுக்கு அத்தொகுதி கிடைக்கச் செய்தீர்கள். சங்கராபுரம் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்குவீர்கள். கள்ளக்குறிச்சியில் உங்களுக்கு வேண்டியவருக்கு சீட் கொடுப்பீர்கள். ரிஷிவந்தியம் தொகுதியில் சந்தோஷ் என்பவரை தொகுதி மாறி நிறுத்தினீர்கள். உங்கள் வெற்றிக்காக நீங்கள் மட்டும் உளுந்தூர்பேட்டையையே சுற்றிச் சுற்றி வந்தீர்கள். இறுதியில் 4 தொகுதிகளிலும் தோல்வியடைய வைத்தீர்கள். இந்த தோல்விக்கான காரணத்தைச் சொல்லிவிட்டுத்தான் இங்கிருந்து கிளம்ப முடியும்'' என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். பதில் பேச முடியாமல் குமரகுரு திணறியபடி நிற்க, அத்தோடு அவர்கள் விடவில்லை.
சங்கராபுரத்தில் கட்சிக்காகப் பாடுபட்ட ராஜசேகர், அரசு, ரிஷிவந்தியத்தில் கதிர் தண்டபாணி, மகளிரணி அமுதா, கள்ளக் குறிச்சியில் பிரபு போன்றோருக்கு சீட் கொடுக்காமல் சூழ்ச்சி செய்தீர்கள். உங்களைப் போன்றவர்களால்தான் தமிழகத்தில் நமது கட்சி ஆட்சியை இழந்தது. இதற்கு உரிய பதில் கூறவேண்டுமென்று காட்டமாகப் பேசினார்கள். தப்பித்தால் போதுமென்று மேடையை விட்டுக் கீழிறங்கினாலோ, சத்துணவு பொறுப்பாளர்கள், அங்கன்வாடி மைய உதவியாளர்கள் பணிகளைப் பெறுவதற்காக பல லட்சங்களைப் பெற்றுவிட்டு வேலை வாங்கித் தராதது குறித்து கேள்வியெழுப்பினார்கள். அதற்கு ஏதேதோ சப்பைக்கட்டு கட்டிவிட்டு அங்கிருந்து கழண்டிருக்கிறார் குமரகுரு.
சேலத்துக்கு வரும்போதெல்லாம் உளுந்தூர்ப்பேட்டையில் குமரகுருவை தனியே சந்தித்துப் பேசுவது எடப்பாடியின் வழக்கம். தற்போது நான்கு தொகுதிகளிலும் தோற்றுள்ள நிலையில் குமரகுரு எடப்பாடியைத் தேடிச் சென்று சந்தித்தபோது, "குமரகுரு, உன்னை பெரிதாக நம்பி இருந்தேன், என் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டாயே" என்று கோபப்பட்டிருக்கிறார். மாவட்ட ஒன்றியச் செயலாளர்களோ, குமரகுருவை நீக்கினால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியுமென்று தீர்மானம் நிறைவேற்றி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரையும் நேரில் சந்தித்து கொடுக்க உள்ளனர்.
இதுகுறித்து குமரகுரு "தேர்தல் சீட்டு கேட்டு கிடைக்காத காரணத்தால் அப்படிப் பேசினார்கள், மற்றபடி எதுவும் இல்லை. சத்துணவு வேலை சம்பந்தமாக பணப்பிரச்சினை என்பதெல்லாம் எதுவும் கிடையாது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.