ஆட்சிப் பொறுப்பேற்ற 100-வது நாளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத் தின்படி, ஆகமப் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அரசாணை வெளியிட்டு அதனை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்த போது, "சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்வது மனதுக்கு வேதனையாக இருக்கிறது' என வெளிப்படையாக பிராமண அர்ச்சகர்கள் சிலர் பேட்டியளித்தார்கள். பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்ததும் அதைவிட அதிகமாக சமூகவலைத்தளங்களில் பிராமண சாதியை சேர்ந்தவர்கள் விமர்சித்துவருகின்றனர். தங்களை விரட்டிவிட்டு புதிய அர்ச்சகர்களை நியமிப்பதாக குற்றம்சாட்டினர்.
"திருச்சி ஸ்ரீரங்கம் கோயி லில் 40 ஆண்டுகாலமாக பணியாற்றிவந்த என் தோப்பனாரிடம், "புதிய அர்ச்சகர் போட்டுட் டோம், சாவியை வச்சிட்டு வெளியே போ'ன்னு சொல்லிட்டாங்கோ. வெளியே போன்னு சொல்றேளே, எழுதித் தாங்கான்னு கேட்டதுக்கு, அந்த பொம்பள அதிகாரி எழுதித் தரல'' என ஒரு அர்ச்சகரின் மகள், இந்து மத பிரமுகர் ஒருவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிவகங்கையை சேர்ந்த சீனுவாசபட்டர் என்பவர், "புதிய அர்ச்சகர் வந்ததும் என்னை கோயிலுக்குள் வரவேண்டாம்னு சொல்லிட்டா, பெருமாள் அவாளுக்கு நல்ல கூலி கொடுப்பா'' என சபித்தார். "கோயிலில் பணியாற்றி வந்த அர்ச்சகர்களை அடித்து துரத்தறாங்கோ, உதைக்கறாங்க, எங்காவளுக்கு பாதுகாப்பில்லை' என சில குழுக்களில் பதிவிட்டவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்துக்கும் சாபங்களை வாரி வழங்கிவருகிறார்கள்.
"அர்ச்சகர்கள் அடித்து துரத்தப்படுகிறார்களாமே'' என ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்க தலைவர் ராமநாதன், அறநிலையத்துறை அமைச் சர் சேகர்பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்கும் ஆடியோவும் வெளியாகியுள் ளது. அதில் அமைச்சர், "கோயிலில் அர்ச்சகராக உள்ள யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை. அரசுப் பணி என்பது 60 வயதுதானே, அதனால் தான் 60 வயதை தாண்டி 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களை பிரதான இடத்தில் இருந்து மாற்றி, அதே கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கோயில்களில் நியமிக்கிறோம். இதில் ஏதாவது தவறு உள்ளதா? இப்படித்தான் எல்லா கோயில் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளோம். வயதானவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு பணி வழங்குவதை மறைத்து பொய்யான தகவலை பரப்புவது நியாயமா?'' என கேள்வி எழுப்பி, தெளிவான விளக்கம் அளித்தார்.
சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் டாக்டர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்துக்கு தடை வந்தபோது, "அது பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' என்று சொல்லி அதனை அகற்ற கலைஞர் முயற்சி செய்தார். இப்போதைய அரசால் அந்த முள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்துகொண்டுள்ளார்கள். யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்துவிட்டு அந்த இடத்தில் நியமனம் செய்யவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருக்கிறது என ஆதாரத்தோடு சென்னால் நடவடிக்கை எடுக்க தயாராகயிருக்கிறோம். வேண்டுமென்றே, கொச்சைப்படுத்தி அரசியலுக்காக பிரச்சனையை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்'' என்றார்.
இது குறித்து அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் ரங்கநாதனிடம் பேசியபோது, "தமிழ்நாடு அரசால் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் எந்த அளவு ஆகமவிதிகள் அறிந்துள்ளார்கள் என்பதை அறிய கலைஞர் ஆட்சியில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்களும் இருந்தனர். அந்த ஆணையம் அளித்த அறிக்கையில், வைணவத் திவ்யதேசங்கள் 108-ல் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்த பிராமணர்கள் அர்ச்சகர் களாக உள்ளனர். சென்னை கபாலீசுவரர் கோயில் உள்ள 41 அர்ச்சகர் களுள் 4 அர்ச்சகர்களும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் 28 நபர்கள் மட்டுமே ஆகமம் பயின்றவர்கள் என அறிக்கை தந்தது. ஆனால் அவர்கள்தான் ஆகமங்கள் குறித்தும், மரபு குறித்தும் பேசுகிறார்கள். திருச்சி நாகநாதசுவாமி கோயில் அர்ச்சகர் அடிச்சி துரத்துனதா தகவல் பரப்புனாங்க. உண்மையில் அவர் இரண்டு கோயில்ல பூஜை செய்துக்கிட்டு இருந்தார், ஒருகோயில் சாவியை தந்துட்டுப் போயிருக்கார். சட்டப்படி நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ளாமல், முதல்வரின் உடல்நிலை சீர்கெடணும்னு பிராமணர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பி, பூஜை செய்யுங்கள், யாகம் நடத்துங்கள் என தகவல் பறிமாறிக்கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கோயிலுக்குள் சாதி பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.
இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம், அரசின் செயல்பாடுகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், தற்போது பணி ஆணை பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்கள், அரசை முழுமையாக நம்பிக் கொண்டுள்ளோம்'' என்றார்.
முதல்வருக்கு எதிராகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராகவும் கொலைவெறி யாகங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள் பிராமண அர்ச்சகர்கள்.