அ.தி.மு.க.வில் கல கத்தை உருவாக்கத்தொடங்கி யிருக்கிறார் சசிகலா. அக்கட்சியில் உள்ள தொண்டர்களை தம் பக்கம் இழுக்க புதிதாக உறுப்பினர் படிவம் ஒன்று அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் கோட்டைக்குள் நேரடியாக குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் குதித்துள்ளார் சசிகலா என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அ.தி.மு.க. என்று நேரடியாக சொல்லாமல், அ.தி.மு.க.வினருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் சசிகலா. அதில், "கழகத்தினர் அனைவரும் இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை பூர்த்தி செய்து, உங்களின் புகைப்படத்தை இணைத்து, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் முகாம் அலுவலகமான ஜெ.ஜெயலலிதா இல்லம், 95, போயஸ்கார்டன், சென்னை-86 என்கிற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த படிவத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், கழக அமைப்பு மாவட்டம், தாங்கள் சார்ந்துள்ள சட்டமன்றத் தொகுதி, கல்வித் தகுதி, வயது, வகுப்பு (சாதி), கழகத்தில் இணைந்த ஆண்டு, 1.1.2017 அன்று கழகத்தில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் இருந்தால் அந்த அமைப்பின் பெயர், இதர அமைப்பில் தாங்கள் தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகிய விபரங்களைக் கேட்டிருக்கிறார் சசிகலா.
இப்படிப்பட்ட விபரங்கள் அடங்கிய இந்த விண்ணப்ப படிவம் தற்போது அ.தி.மு.க.வில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செய லாளரானார் சசிகலா. அப்போது அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் பதவியைக் குறிவைத்து அவர் காய்களை நகர்த்தியதில் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி சட்ட மன்ற அ.தி.மு.க. தலைவராக சசிகலாவை தேர்ந்தெடுத் தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகரை சந்தித்து, ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோர, சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுத்தார் வித்யாசாகர்.
இது அன்றைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், சசிகலாவுக்கு எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்குவதற்கு மோடியின் பா.ஜ.க. அரசு மறைமுகமாகத் தூண்டி யது. இதனையடுத்து அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு கால சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
தமிழக அரசியலிலும் அ.தி.மு.க .வில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத் தியது இந்த தீர்ப்பு. சசிகலாவை கைது செய்து அவரை பெங்களூர் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்தபடி இருந்தது தமிழக போலீஸ். இதனால், அடுத்து என்ன செய்வது என யோசித் தார் சசிகலா. உடனடியாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூவத்தூரில் இருக்கும் தனியார் ரெசார்ட்டில் ஒன்றுகூட்டினார். அதேசமயம், சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தமும் சீரியசாகப் போய்க்கொண்டிருந்தது.
கூவத்தூரில் அடைத்து வைக்கப் பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களி டம், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லி சம்மதம் பெற்றார் சசிகலா. அதேசமயம், கடந்த 2017, பிப்ரவரி 15-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். பா.ஜ.க.வின் தீவிர முயற்சியில் அ.தி.மு.க.வில் இணைக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை அ.தி.மு.க.விலிருந்து நீக்கியது இரட்டைத் தலைமை. அ.தி.மு.க.வையும் அதன் அரசையும் தனது அடிமையாக மாற்றிக்கொண்டது பா.ஜ.க.
நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை முடித்துவிட்டு கடந்த 2021, ஜனவரி 27-ந் தேதி விடுதலையானார் சசிகலா. அவர் சிறையிலிருந்து ரிலீஸ் ஆனதும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார்; எடப்பாடியிடமிருந்து அ.தி.மு.க.வை மீட்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மோடி -அமித்ஷாவின் ஆதரவில் கட்சியையும் ஆட்சியையும் வலிமையாக்கிக்கொண்டார் எடப்பாடி.
இதற்கிடையே, அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், தனது அரசியலுக்காக அ.ம.மு.க. எனும் தனிக்கட்சி ஆரம்பித்து, தனி வழியில் இயங்கினார். அவரது கட்சியில் சசிகலா இணைவார் என எதிபார்க்கப்பட்ட நிலையில், "அ.தி. மு.க.வை மீட்பதே எனது பணி ; அதற்கான சட்டப் போராட் டம் நடத்தி வருகிறேன்' என்று தினகரன் அழைப்பை ஏற்கமறுத்தார் சசிகலா. ஆனால், சட்டப்போராட்டங்கள் அனைத்திலும் அவருக்கு தோல்வியே ஏற்பட, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒற்றைத் தலைமையை கொண்டுவந்து ஜெயலலிதா போல சர்வாதிகாரியாக இயங்கவேண்டும் என திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதற்காக முயற்சி எடுத்தபோது அதனை எதிர்த்தார் ஓ.பி.எஸ். இதனால் ஏற்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகளால் ஓ.பி.எஸ்.ஸும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். பலமுறை முறையிட்டார். எதிலும் அவருக்கு சாதகமான தீர்ப்புகளோ, உத்தரவுகளோ கிடைக்கவில்லை. இதனையடுத்து, எடப்பாடிக்கு எதிராக மல்லுக்கட்டுவதைத் தவிர்த்துவிட்டு, கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ். இயங்கிய நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் ராமநாதபுரத்தில் சுயேட்சை யாக போட்டியிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலின் பின்னணியில் தேர்தல் முடிந்த நிலையில் அ.தி.மு.க. தொண் டர்களை மீட்க ஓ.பி.எஸ். பாணியில் தற்போது குதித்திருக்கிறார் சசிகலா. இதனால், அவரது தரப்பில் திடீர் பரபரப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க.வின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளரும், சசிகலாவின் தீவிர ஆதர வாளருமான ஆவின் வைத்தியநாதனிடம் நாம் பேசியபோது, "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போலத்தான் இருக்கிறது சசிகலாவின் அரசியல். சிறையில் இருந்து அவர் விடுதலை யானதையடுத்து, அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அ.தி.மு.க. தொண்டர்கள் வைத்திருந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிச் சாமியிடமிருந்துஅ.தி.மு.க.வை மீட்பார்; அதற்கான அரசியலை முன்னெடுப்பார்; கட்சி மீண்டும் வலிமையாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், சிறையில் இருந்தபோதும் சரி, விடுதலை யானதற்குப் பிறகும் சரி, அதற்கான தீவிர முயற்சி எதையும் எடுக்கவில்லை சசிகலா. 2021 சட்டமன் றத் தேர்தலில் அவரது சார்பில் சிலரை போட்டி யிட வைத்து அவர்களுக்கு பிரச்சாரம் செய்து, அவர்களை ஜெயிக்க வைக்கவேண்டும் என்று சசிகலாவிடம் சிலர் சொன்னபோது, அதனை ஏற்க மறுத்த அவர், நம் இலக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதற்குள் எடப்பாடியிடமிருந்து கழகத்தை மீட்பேன் என சூளுரைத்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அவரை அணுகி, தேர்தலில் போட்டியிடுவது பற்றி பலரும் விவாதித்தனர். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் நம்முடைய குறி. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி தனது ஆதரவாளர்களை விரட்டிவிட்டார் சசிகலா. ஆக, தனது அரசியலையும் ஆளுமையும் நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் அதனை புறக்கணித்து தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர் சசிகலா.
அரசியலை முன்னெடுக்க வேண்டிய காலத் தில், அதைச் செய்யாமல், தனது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள பா.ஜ.க.வின் அடிமையாக இருந்துவந்தார் சசிகலா. இதனைப் பயன்படுத்தி, அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார் எடப்பாடி. இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களை இணைக்கிறேன் என்கிற பாணியில் உறுப்பினர் படிவத்தை தற்போது அனுப்புவது தொண்டர்களை ஏமாற்றுவதற்குத்தான். சசிகலாவின் எந்த முயற்சி யையும் இனி தொண்டர்கள் நம்பமாட்டார்கள்''” என்கிறார் அதிரடியாக வைத்தியநாதன். சசிகலா வின் ஆதரவாளர்கள் பலரிடமும் இப்படிப்பட்ட கருத்துக்களே எதிரொலிக்கின்றன.
இந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் விவாதித்த போது, "எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என காட்டுவதற்காக ஓ.பி.எஸ். ஆரம்பித்த முயற்சி அவருக்கு பலனளிக்கவில்லை. ஓ.பி.எஸ். பாணியில், தற்போது சசிகலாவும் இறங்கியுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அ.தி.மு.க. தம்மிடம் வருவதற்கு பா.ஜ.க. உதவும் என எதிர்பார்த்தார் சசிகலா. ஆனால், பா.ஜ.க. வோ, முக்குலத்தோர் ஆதரவை பெற ஓ.பி.எஸ்.சும், தினகரனும் போதும் என நினைத்து சசிகலாவை ஓரங்கட்டியது. இந்த அரசியல் சசிகலாவுக்கு புரியவில்லை. லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது. இப்படியே போனால், அரசியலில் செல்லாக்காசாகி விடுவோம் என யோசித்து உறுப்பினர் படிவம் எனும் செயலில் இறங்கியிருக்கிறார். இதை வைத்து எடப்பாடியை மிரட்டும் திட்டத்தை கையிலெடுத் துள்ளார். ஆனால், அவரது திட்டம் பலிக்காது; பலனளிக்காது. இனியும் சசிகலாவிடம் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏமாறமாட்டார்கள்''‘என்கிறார்கள் மிகஅழுத்தமாக.
சசிகலா அனுப்பியுள்ள உறுப்பினர் படிவம், எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு சென்ற நிலையில், இதன் பின்னணி என்னவென்று விசாரிக்குமாறு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.