கர்நாடகாவில் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, தமிழக அரசியலிலும் ஆளும் கட்சி யான அ.தி.மு.க.விலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கி யிருக்கின்றது.
அதிக இடங்களில் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி கண்டு உற்சாகமடைந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமீத்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், "கர்நாடகா வின் வெற்றி தென்னிந்தியா விற்கான பிரமாண்டமான நுழைவுவாயில்'’எனப் பெரு மிதமாகப் பாராட்டியிருக்கிறார். ஓ.பி.எஸ்.சின் இந்தப் பாராட்டு அ.தி.மு.க. தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திச் செல்வதாக சொல்லப்பட்டாலும் இருவரின் ஆதரவாளர்களும் இரு துருவங்களாகவே இருக்கின்றனர். அமைச்சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள் வரை இந்த இரு துருவங்கள் கான்செப்ட் வலிமை பெற்றுள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.வின் வெற்றியை ஓ.பி.எஸ். கொண்டாடி யது எடப்பாடி ஆதரவு அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.க் களையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.
இதனையறிந்து எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் வட்டத்தில் விசாரித்தபோது... ""கர்நாடக தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தாலும் அதிகமாக நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது. இயல்பை மீறி யாரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம்'' என எடப்பாடி கேட்டுக்கொண்டிருந்தார். அமைச்சர்கள் எல்லோருக் குமே இந்த எண்ணம் இருந்தது. அதனால்தான், "அங்கு ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன?'’என மீடியாக் களிடம் சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், தேர்தல் முடிவுகள் வரத்துவங்கியதுமே பாராட்டு கடிதம் எழுதிவிட்டார் ஓ.பி.எஸ். அதுவும் சாதாரணமாக வாழ்த்துவதைத் தாண்டி ரொம்பவுமே உணர்ச்சிவயப்பட்டிருந்தார். இது, எல்லோருக்குமே அதிர்ச்சிதான். பொதுவாக, தேர்தல் முடிவுகள் குறித்து அரசு சார்பில் வாழ்த்துத் தெரிவித்துவிடலாம் என திட்டமிடப்பட்டி ருந்ததற்கு நேர்மாறாக ஓ.பி.எஸ்.சின் கடிதம் இருந்தது. "ஓ.பி.எஸ். வாழ்த்துத் தெரிவித்த பிறகு அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என நினைத்தே, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி'’’ என்கின்றனர்.
தொடர்ந்து நாம் விசாரித்தபோது, ""எடப்பாடி அரசுடனான நெருக்கத்தை பா.ஜ.க. குறைத்துக்கொண்டிருந்தாலும், பா.ஜ.க.வின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டே வருகிறார் எடப்பாடி. ஆனால், அண்மைக் காலமாக தன்னை புறக்கணிக்கும் மோடியையும் அமித்ஷாவையும் மீண்டும் நெருங்க ஓ.பி.எஸ்.சால் முடியவில்லை. இந்தநிலையில், பா.ஜ.க.வின் வெற்றியை கொண்டாடுவதன் மூலம், டெல்லியை நெருங்கலாம் என நினைத்தே கடிதம் எழுதினார் ஓ.பி.எஸ்.
அவர் உள்பட 12 எம்.எல்.ஏ.க் களுக்கு எதிரான வழக்கில் அவரின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடன் பட்டவராகவே கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், "தென்னிந்தியாவின் பிரமாண்டமான நுழைவு வாயில்' என குறிப்பிட்டி ருப்பது, தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு சிவப்புக் கம்பளம் கொடுப்பதுபோல இருக்கிறது. இதனை அ.தி.மு.க.வினர் யாரும் ரசிக்கவில்லை.
அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, ஓ.பி.எஸ்.சை கையிலெடுத்து அரசியல் செய்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. அ.தி.மு.க. பிளவுபட்டது. ஆனால், ஆடிட்டரும் அமித்ஷாவும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதனால், ஓ.பி.எஸ்.சை மீண்டும் இணைத்தனர். எடப்பாடியின் சசிகலா ஆதரவையும் உடைத்தார்கள். மீண்டும் ஓ.பி.எஸ்.சை முதல்வராக்க ஆடிட்டர் முயற்சி எடுத்தபோதுதான் விழித்துக் கொண்ட எடப்பாடி, தமது சமூக வலிமையையும் டெல்லியி லுள்ள மேலிட லாபியையும் பயன்படுத்தித் தடுத்தார். அதன்பிறகு துணைமுதல்வர் என்கிற பேரத்திற்கு ஒப்புக்கொண்டு அமைதியானார் ஓ.பி.எஸ். இப்படிப்பட்ட சூழலிலேயே சில மாதங்களாக அ.தி.மு.க. அரசியல் நகர்ந்த நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள், பா.ஜ.க. ஆதரவு தமிழக சக்திகளுக்கு ஒருவித நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அந்த வெற்றியை தமி ழகத்திலும் நிலைநிறுத்தும் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு தமிழகம் என்பதால் அதற்கேற்ப ஓ.பி.எஸ்.சை முதல்வராக்கும் முயற்சி மீண்டும் கட்டமைக்கப் படுகிறது’''’என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
ஓ.பி.எஸ். ஆதரவு சீனியர்களிடம் பேசியபோது, ""ஆடிட்டர் மூலமாக துவக்கத்திலிருந்தே அமித்ஷாவின் நம் பிக்கையைப் பெற்றவர் ஓ.பி.எஸ். அதன் வெளிப்பாடாகத் தான் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதேசமயம், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் இரு தரப்பிலும் முரண்பாடுகள் இருக்கவே செய் கிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்துக் கும் தேர்தல் நடத்துவதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி. அப்படி தேர்தல் நடந்தால், மற்ற மாநிலங்களில் எப்படி ஆதிக்கம் செலுத்தியதோ அதேபோல தமிழகத்திலும் பா.ஜ.க. தந்திரம் செய்யும் என நினைக்கிறார் ஓ.பி.எஸ்.
தேர்தல் நேரத்தில் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க.வில் உருவாக்க பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி அணியை தவிர்த்து பா.ஜ.க.வோடு ஓ.பி.எஸ். அணி கூட்டணி வைப்பதற்கேற்ப காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதற்கு வசதியாக கொங்கு வேளாளர் சமூகத்திற்கு எதிராக அ.தி.மு.க.வில் இருக்கும் வலிமையான சமூகங்களை ஓ.பி.எஸ். தலைமையில் ஒருங்கிணைக்கும் முயற்சியும் ரகசியமாக நடக்கிறது. தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க. மீண்டும் உடையும்'' என்று சுட்டிக்காட்டு கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்