அ.தி.மு.க. தொடங்கி 47 ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னை -ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல்வர் இ.பி.எஸ்.ஸும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி சிரித்துக்கொண்டனர். அன்று இரவு உளுந்தூர்பேட்டையில் இ.பி.எஸ் மட்டும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மா.செ. குமரகுரு. தேசிய நெடுஞ்சாலையில் 100 அடிக்கு ஒரு பிளக்ஸ் பேனர், சாலையின் நடுவே ஆர்ச் என அதகளப்படுத்தியிருந்தார் குமரகுரு. பல பேனர்களில் குமரகுருவின் மனைவி மயில்மணியும் மகன் நமச்சிவாயமும் பளிச்சென சிரித்துக் கொண்டிருந்தனர்.
மைலம் அருகே உள்ள விளங்கம்பாடி அ.தி.மு.க. கிளைச்செயலாளர் சங்கர், ஓ.பி.எஸ். படத்தை பெரிதாகப் போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார். இதைப்பார்த்து கடுப்பான ஒ.செ. சேகர் தரப்பு, ஓ.பி.எஸ். முகத்தில் (பிளக்ஸ் பேனரில்தான்) தாறுமாறாக பிளேடு போட்டுக் கிழித்துவிட்டது. இதனால் டென்ஷனான சங்கர் ஆட்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் குதித்துவிட்டனர். அவர்களை கலைந்து போகச்செய்ய பெரும்பாடுபட்டது போலீஸ். "மந்திரி சி.வி.சண்முகம் கொடுக்கும் தைரியத்தில்தான் சேகர் ஆட்டம் போடுறார்' என கடுகடுத்தபடியே கிளம்பினார் சங்கர்.
இந்த ரணகளத்துக்கிடையிலும் குதூகலமாக மாலை 5:30-க்கு உளுந்தூர்பேட்டை வந்தார் எடப்பாடி. போலீஸ் ஸ்டேஷன் அருகே தடபுடலாக வரவேற்பு கொடுத்து திறந்த வேனில் ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் சென்றார் குமரகுரு. ஒ.செ. மணிராஜின் வரவேற்புரை, மா.செ. குமரகுருவின் துவக்கவுரை, மந்திரி சி.வி.சண்முகத்தின் தெளிர்ச்சி உரைக்குப்பின் மைக் பிடித்தார் எடப்பாடி.
பேசிய அனைவருமே தி.மு.க.வையும் ஸ்டாலினையும் திட்டியதால், தன் பங்குக்கு திட்டிவிட்டு, "பெட்ரோல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்' என்ற அரிய செய்தியைச் சொல்லிவிட்டு, "எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை' என்பதை பத்துமுறைக்கு மேல் பயத்தோடு சொன்னார் எடப்பாடி. கூட்டம் முடிந்ததும் சாரதா ஆஸ்ரமத்திற்குச் சென்று இரவு உணவை முடித்துவிட்டு சென்னை புறப்பட்டார்.
எடப்பாடி கிளம்பியதும், கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுத்தபோது, "ஏங்க... கூட 100 ரூபா கொடுங்க' என பெண்களும், "அண்ணே மட்டமான குவார்ட்டரே 110 ரூவா... தண்ணி பாக்கெட், கிளாஸ் 25 ரூவா ஆகுது'’ என ஆண்களும் மன்றாடியபோதும் மசியவில்லை நிர்வாகிகள்.
-எஸ்.பி.சேகர்