"என்னோட அரசியல் எதிர்காலமே இருண்டு கிடக்கு. முட்டி மோதிப் பார்த்தும் பழனிசாமியை வழிக்குக் கொண்டுவர முடியல. இதையெல்லாம் கடந்து, பழைய பன்னீர்செல்வமா திரும்பவும் லைம்லைட்டுக்கு வரணும். எதுவும் என் கையில இல்ல. நான் கும்பிடற தெய்வம்தான் எனக்குத் துணை நிற்கணும்' -மனதுக்குள் வேண்டுதலோடு, தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் யாக பூஜை நடத்தி, திருவாசகம் முற்றோதல் படித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
"இந்த இறை வழிபாட்டால் வெளிப்படும் சக்கரவியூகத்தில் எடப்பாடி பழனிசாமி சிக்குண்டு போவார்... அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக் கின்றன'’என்று அப்பந்தலுக்கு வெளியே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ‘கதாகாலட்சேபம்’ நடத்தியிருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக என்னென்ன அறிகுறிகளாம்?
"வேலுமணி உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள் பிளவைச் சரிபண்ணி கட்சியை வலுப்படுத்துனா மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும்னு மொதல்ல தங்களுக்குள் பேசிக்கிட்டிருந்தாங்க. இப்ப எல்லாரும் ஒன்றிணையனும்னு மாநிலம் முழுக்க அ.தி.மு.க. நிர்வாகிகள்கிட்ட வேலுமணி பேசுறாரு. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள்கிட்ட "கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்கள பலிகொடுத்து தன்னைக் காப்பாத்திக்கு வாரு எடப்பாடி பழனிசாமி'ன்னு அவர் சொல்லும்போது, பதிலுக்கு அவங்களும் எடப்பாடியின் கடந்த கால துரோகங்களைப் பட்டியலிட்டு பேசிருக்காங்க.
அடிப்படைல வெல்லமண்டி வியாபாரியான எடப்பாடிக்கு என்ன அரசியல் தெரியும்? எல்லாரையும் அனுசரிச்சுப் போற பரந்த மனசு எப்படி இருக்கும்? ஒரு பெரிய கட்சிய நல்ல விதமா நடத்தத்தான் தெரியுமா? ஒரு வீட்ல காபி குடிச்சாகூட, அந்த வீட்டுக்கு துரோகம் பண்ண மனசு வராது. ஆனா.. எடப்பாடிக்கு அந்த நல்ல குணம் இல்ல.
அரசியல்ல எடப்பாடியை வளர்த்துவிட்டவர் செங்கோட்டையன். அப்ப அமைச்சரவைல ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த இடத்துல இருந்த செங்கோட்டையனை அணி சேர்ந்து தூக்கி யடிச்சிட்டு, திரும்பவும் தலையெடுத்துறக் கூடாதுன்னு என்னெல்லாம் பண்ணுனாரு. சி.எம். ஆக்குன சின்னம்மாவுக்கு துரோகம், ஆட்சிக்கு சப்போர்ட் பண்ணுன ஓ.பி.எஸ்.ஸுக்கு துரோகம், ஆதரவா இருந்து இவரை முதலமைச்சராக்குன டி.டி.வி.க்கு துரோகம், நாலஞ்சு வருஷம் ஆட்சிய தக்கவச்சு பாதுகாத்த பி.ஜே.பி.க்கு துரோகம், இவரு மேல வழக்கு வராம பார்த்துக்கிட்ட அமித்ஷா வுக்கு துரோகம், மோடிக்கு துரோகம், வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், அன்பழகன், செல்லூர் ராஜு, கருப்பசாமி பாண்டியன்னு எல்லாருக்குமே துரோகம் பண்ணியிருக்காரு. அதுவும் திருநெல்வேலில கருப்பசாமி பாண்டியனை சுத்தமா அவுட் பண்ணிட்டாரு.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மாதிரி எடப்பாடி என்ன மாஸ் லீடரா? எம்.ஜி.ஆரே குமரி அனந்தனை தேடிப்போய் கூட்டணி வச்சாரு. ஜெயலலிதா கருணாஸ் கூட கூட்டணி வச்சாங்க. தேர்தல்ல ஒழுங்கா கூட்டணி வைக்க எடப்பாடிக்கு தெரியல. நல்லா பேசவும் வராது. கட்சிய நிர்வாகம் பண்ணவும் தெரியாது. ஆனா.. பெரிய தலைவரா தன்னை நினைச்சுக்கிட்டு கட்சிய அழிச்சுக்கிட்டிருக்காரு. ஒற்றைத் தலைமை வேணும்னு எல்லாரையும் நம்ப வச்சு, தலைமைப் பொறுப்புக்கு வந்ததும் இப்ப ஹிட்லர் கணக்கா சர்வாதிகாரம் பண்ணுறாரு. எம்.பி. தேர்தல்ல இரட்டை இலைக்கு 40 பெர்சன்ட் ஓட்டு வாங்கியிருக்கணும்ல... அது முடியலல்ல. நாலஞ்சு எம்.பி. சீட் கிடைச்சிருந்தா, நெறய மாவட்டச் செயலாளர்கள மாத்திருப்பாரு. எலக்ஷன் ரிசல்ட்ல ஒண்ணும் இல்லாமப் போனதுனால, அந்த பிளான் நடக்காம போயிருச்சு.
அண்ணா எப்பேர்ப்பட்ட தலைவர். எம்.ஜி.ஆர்., கலைஞர்னு எல்லாரையும் அரவணைச்சு ஆட்சியப் பிடிச்சாருல்ல. தன்னை எதிர்த்தாலும்.. மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், வீரபாண்டி ஆறுமுகம் மாதிரி ரெண்டாம்கட்டத் தலைவர்களை கலைஞர் அனுசரிச்சுத்தான் போனாரு. ஒரு தடவை வைகோ, கலைஞர்கிட்ட கோவிச்சுக்கிட்டு, டமால்னு கதவைச் சாத்திட்டு போயிருக்காரு. அவரை கூப்பிடுங்கன்னு அப்பவே கலைஞர் சொல்லிருக்காரு. ஸ்டாலினும் கட்சிக்குள்ள சத்தமில்லாம தன்னை எதிர்க்கிறவங்கள அனுசரிச்சுத்தான் போறாரு. ஒரு தலைவருக்கான குணம் எடப்பாடிகிட்ட சுத்தமா இல்ல. கட்சிக்காக, தொண்டனுக்காக என்ன தியாகம் பண்ணுனாரு? எடப்பாடி முகத்தக் காட்டி மக்கள்கிட்ட ஓட்டு வாங்க முடியாது. இது கண்கூடா நடந்திருச்சு. தமிழ்நாடு முழுக்க, இப்ப வரைக்கும் எடப்பாடிகிட்ட ஒட்டிக்கிட்டிருக்கிறது ரெண்டு மூணு பேருதான். அவங்களும் விசுவாசி கிடையாது. இதெல்லாம் தெரியாம, நானும் தலைவருதான்னு கற்பனை உலகத்துல ரவுண்ட் அடிக்கிறாரு. இதை எல்லாம் மாத்தணும். எடப்பாடியைத் தூக்கி எறியணும். பொதுக்குழுல எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணுனவங்களே இப்ப எதிரா இருக்காங்க. கொடநாடு கேஸ்ல எடப்பாடியோட அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிரும். கட்சிக்கு வெளியே அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுன்னு நாம இயங்கிட்டு இருக்கோம். அங்கே கட்சிக்கு உள்ளேயே எடப்பாடிக்கு எதிரா போர்க்கொடி தூக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து எடப்பாடியை விரட்டிட்டா கட்சிக்கு புத்துயிர் கிடைச்சிரும்''’என்றெல்லாம் சீரியஸாகப் பேசியிருக்கின்றனர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று பெருமை பேசிய அக்கட்சியில், தலைமைக்கே துரோகப் பட்டம் கட்டி, எதிரான நிலை எடுத்துவருகின்றனர்.
-ராம்கி & சக்தி