தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக அதிகாலை முதல் மாலைவரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரியகுளம் 69.83%, கம்பம் 69.57% என 70 சதவிகிதத்துக்குக் கீழும், போடி 73.65%, ஆண்டிப்பட்டியில் 73.96% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதில் போடி தொகுதியில் மூன்றாவது முறையாகக் களமிறங்கியுள்ள ஓ.பி.எஸ்.க்கு பெரியகுளத்தில் ஓட்டு இருந்ததால், காலையிலேயே பெரியகுளம் வந்த ஓ.பி.எஸ்., தனது தாயார் பழனியம்மாள், துணைவியார் விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தாருடன் அங்குள்ள எஸ்.ஏ.டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர், "மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும்' என்று கூறினார். ஆனால் முகத்தில் எந்தக் களையும் இல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின் எம்.பி. ரவீந்திரநாத் குடும்பத்தினருடன் வந்து ஓட்டுப் போட்டுவிட்டுச் சென்றவர், பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று கட்சிக்காரர்களிடம் வாக்கு நிலவரத்தைக் கேட்டு விட்டு போடி தொகுதியிலுள்ள பெருமாள் கவுண்டன்பட்டிக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் "வாக்குச்சாவடிக்குள் எம்.பி. மட்டுமே போகவேண்டுமே தவிர, மற்றவர்கள் யாரும் போகக்கூடாது' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எம்.பி. ரவீந்திரநாத் மட்டும் வாக்குச்சாவடிக்குள் சென்றார். இதனால் ஆத்திரமான ஓ.பி.ஆர். ஆதரவாளர்கள் அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் பிரச்சனை செய்தனர்
அப்போது அங்கிருந்த தி.மு.க. கிளைச் செயலாளர் தமிழன் உள்பட சிலர் அவர்களைச் சமாதானப்படுத்தினர். வெளியில் ஓ.பி.ஆர். ஆதரவாளர்களுக்கும் அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு ஓ.பி.ஆர் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர் அதோடு அங்கு நின்றிருந்த எம்.பி. ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் கண்ணாடி உடைந்தது.
அதனைக் கண்ட அ.தி.மு.க.வினர், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களைத் துரத்தியடித்தனர். அதன்பின் வெளியே வந்த தங்க தமிழ்ச்செல்வன் சம்பவத்தைக் கேள்விப்பட்டு மனம் நொந்துபோய் வேறு காரில் புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத் தால் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கைகலப்பு, ஓ.பி.ஆர். கார் கண்ணாடி உடைப்பு போன்றவற்றை மூடி மறைத்துவிட்டு தி.மு.க.வினர் தான் அராஜகம் செய்தனர் என்று வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஒரு பொய்யான புரளியை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பரப்பிவிட்டனர்.
இந்த விஷயம் தங்க தமிழ்ச்செல்வன் காதுக்கு எட்டவே "ரவீந்திரநாத் ஆதரவாளர்களுக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையேதான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகள் சமாதானம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்துக் கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் தவறான செய்தியைப் பரப்பிவருகிறார்கள். அதை யாரும் நம்பவேண்டாம்' என பத்திரிகையாளர்களிடமும் வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் போடி சுப்புராஜ் நகர் பகுதியில் வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்தனர். இந்த விஷயம் தி.மு.க.வினருக்குத் தெரியவே அவர்களை விரட்டியடித்தனர். அதுபோல் போடி அண்ணா நடுநிலைப்பள்ளியில் ஓ.பி.எஸ். படம் போட்ட மஞ்சள் பையில் பணத்தை வைத்துக்கொண்டு வாக்காள மக்களுக்குப் பணம் கொடுத்துவந்தனர். இந்த விஷயம் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்குத் தெரியவே உடனே ஸ்பாட்டுக்கு விசிட்டடித்து அந்த மஞ்சள் பைகளைக் கைப்பற்றி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களையும் வெளியே அனுப்பி வைத்தார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்... போடி, ராசிங்கபுரம், கோடங்கிப்பட்டி, அரண்மனைப்புதூர் உள்பட சில பூத்துக்களில் மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவந்தனர். அதையும் அங்கங்கே உள்ள கட்சியினர் சிலர் கண்டுபிடித்து விரட்டியடித்து வந்தனர். ஓ.பி.எஸ். மேல் தொகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்துவருகிறார்கள். அதைச் சமாளிப்பதற்காக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சீர்மரபினர் மற்றும் பிள்ளைமார், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள சமூகத்தினரை தனித்தனியாகச் சந்தித்து கவனித்திருக்கிறார்கள். ஓட்டுக்கு ஆயிரம் என வாக்காள மக்களுக்கு வீடு தேடிப் போய் சேர்ந்திருக்கிறது.
தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வனுக்கு கட்சிக்காரர்கள் ஆதரவோடு ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான சமூக ஓட்டுகளும் மக்கள் ஓட்டுக்களும் இருந்தும்கூட வாக்காள மக்களுக்கு தலைக்கு 500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதனாலேயே பெரும்பாலான வாக்காள மக்கள் தங்களுடைய குடும்ப ஓட்டுகளை இரண்டாகப் பிரித்து இரண்டு தரப்பிலும் வாக்களித்திருக்கிறார்கள். இதனால் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான சமூக மக்களுக்கு தேர்தலையொட்டிய கவனிப்புகள் பெரிதாக இருந்தன.
-சக்தி